இணையத்தில் வைரலான ஹிட் பாடலின் இசையைக் காப்பி அடித்துள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
ஜூனியர் என்டிஆர்ருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘தேவரா’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இருந்து நேற்று மாலை ‘பத்தவைக்கும்...’ என்ற பாடல் வெளியானது. உச்சக்கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர்ருடன் இணைந்து நடனமாடி இருந்த இந்த ரொமான்ஸ் பாடல் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதே சமயம் இந்தப் பாடலுக்கான இசையை அனிருத் காப்பி அடித்திருக்கிறார் என்ற சர்ச்சையும் இணையத்தில் கிளம்பி இருக்கிறது. இணையத்தில் சில வருடங்களுக்கு முன்பு ‘மணிக்கே மஹே ஹிதே’ என்ற சிங்கள தனியிசை பாடல் வைரலானது நினைவிருக்கலாம். அந்தப் பாடலின் இசை சாயலில் தான் ’பத்தவைக்கும்...’ பாடலும் இருக்கிறது என நெட்டிசன்கள் அனிருத்தை விமர்சித்து வருகின்றனர்.