சென்னை: நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையில் நிலவி வரும் பனிப்போர் குறித்து இயக்குநர் பேரரசு பதில் அளித்துள்ளார்.
நடிகர்கள் விஷால், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காதது பற்றியும், அவர்களை வைத்து வருங்காலத்தில் படம் எடுப்பவர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்களை சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டது தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால், இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனுஷ் மீது எந்தப் புகாரும் இல்லை என்று சொல்லியது. இது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஸ்டிரைக் என்றும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இயக்குநர் பேரரசுவிடம் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். “இந்தப் பிரச்சினைகளைப் பொதுவெளியில் மீடியா முன்பு எடுத்து வரவேக் கூடாது. குடும்ப விவகாரம் போல தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
தனுஷ், விஷால் மீது ரெட் கார்ட் என்று சொல்வது ஏதோ பொதுவெளியில் அவர்கள் குற்றவாளிகளைப் போல சித்தரிக்கிறது. ஸ்டிரைக் என்றுக்குமே தீர்வாகாது. தொழிலாளர்களுக்குத்தான் இதனால் பாதிப்பு ஏற்படும். தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டது என்று சொல்கிறார். இதுபோன்ற சமயத்தில் தனுஷ் மீதான நடவடிக்கைக்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் என்றும் பரப்பி விடுகிறார்கள். ரஜினிகாந்த் அப்படி செய்கிறவர் கிடையாது” என்றார்.