திரை விமர்சனம்: போட்

By KU BUREAU

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட சென்னை (அன்றைய மெட்ராஸ்) மீது ஜப்பான் குண்டு வீசியதால் மருத்துவமனை, காவல் துறை உட்பட அனைத்து பொது சேவைகளும் கடற்கரையில் நடக்கின்றன. சென்னையின் பூர்வகுடி மீனவரான குமார் (யோகிபாபு), கைதுசெய்யப்பட்டுள்ள தன் தம்பியை மீட்க அங்கு வருகிறார். ஜப்பான், மீண்டும் குண்டு வீசப்போவதாகப் புரளி கிளம்ப, தன் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) தனது படகில் நடுக்கடலுக்குச் செல்ல முடிவெடுக்கிறார் குமார்.

இதில் ரிப்பன் கட்டிட குமாஸ்தா நாராயணன் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமி (கவுரி கிஷண்), சிஐடி முத்தையா (எம்.எஸ். பாஸ்கர்), தாய்மை அடைந்திருக்கும் தெலுங்குப் பெண் விஜயா (மதுமிதா), அவரது மகன், அடகுக் கடைக்காரர் (சாம்ஸ்), கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியர் ராஜா (ஷாரா) ஆகியோரும் குமாரின் படகில் ஏறிக்கொள்கிறார்கள். இதற்கிடையே ரோந்துப் படகிலிருந்து பிழைத்த பிரிட்டிஷ் அதிகாரி இர்வினும் (ஜெஸி) ஏறிக்கொள்கிறார். படகில் ஒரு தீவிரவாதி இருக்கிறார் என்கிறார் இர்வின்.

சுமை கூடியதால் படகில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் புகுந்து விடுகிறது. சுறா மீன் ஒன்றும் படகைச் சுற்றி வருகிறது. அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? தீவிரவாதி யார்? குமாருக்கும் அவனது பாட்டிக்கும் என்ன ஆனது? என்பது கதை.

புதுமையான கற்பனை, சமூகப் பகடியுடன் நகைச்சுவை படங்களைத் தரும் சிம்புதேவன், 2-ம் உலகப் போர் பின்னணியில் ஒரே இடத்தில் சிக்கிக்கொண்ட வெவ்வேறு கதாபாத்திரங்களுடன் வரலாற்று விவகாரங்களையும் சமகால சமூகச் சூழலையும் பேச முயன்றிருக்கிறார், இதில்.

படத்தின் தொடக்கக் காட்சிகள் கதை நடக்கும்சி 1943-க்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. படகில் சிக்கியவுடன் பத்து கதாபாத்திரங்களைக் கொண்டு நகர்த்த வேண்டிய காட்சிகளைத் தொய்வின்றி நகர்த்துகிறார். கேரக்டர்களுக்கு இடையிலான முரண்களால் ஏற்படும் விவாதங்கள், அதையொட்டிய அரசியல் வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. ஒரு கட்டத்தில் அனைவரும் பேசிக் கொண்டே இருப்பதும் கதாபாத்திரங்கள் குழப்பத்துடன் படைக்கப்பட்டிருப்பதும் சோர்வடையச் செய்கின்றன.

தீவிரவாதி யார் என்று தெரிந்த பிறகு நிகழும் மாற்றங்கள், படகில் இருந்து யாராவது மூவர் கீழே குதிக்காவிட்டால் படகு மூழ்கும் என்னும் நிர்ப்பந்தத்தை ஒட்டிப் பின்னப்பட்டுள்ள சென்டிமென்ட் காட்சிகளும் மனதில் பதிகின்றன. படகுக்குள் நிகழும் கைகலப்புகள், அனைவரும் யாரைத் தள்ளிவிடலாம் என்று திட்டமிடுவது போன்ற காட்சிகள் தேவையற்ற திணிப்பு. இந்தக் குறைகளைத் தாண்டி, சென்னை பூர்வகுடி மக்கள் நகருக்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் அவலத்தை, உணர்வுபூர்வமாகப் பேசியதற்காகப் பாராட்டலாம், படக்குழுவை.

யோகிபாபு, சிறப்பாக நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் ஸ்கோர் செய்கிறார். குலப்புள்ளி லீலா, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஷாரா, மதுமிதா, கவுரி கிஷண் கொடுத்த வேலையை குறையின்றிச் செய்திருக்கிறார்கள். ஜிப்ரானின் இசையில் கானா பாடல் வரிகளுடன் கர்னாடக இசைபாணியில் அமைக்கப்பட்டிருக்கும், ‘சோக்கா நானும் நிற்கிறேன்’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு வலுசேர்த்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, கடலின் பிரம்மாண்ட அழகையும் உப்புநீர் வாசத்தையும் உணர வைத்திருக்கிறது.

சிம்புதேவன் பாணியிலான அரசியல் பகடிகளைத் தாண்டி, திரைக்கதைக்கு கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் இந்த ‘போட்’ பயணம் இன்னும் திருப்தி அளித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE