தேநீர் நேரம்- 20 : எம்.கே. தியாகராஜ பாகவதர் எப்போது அந்த முடிவை எடுத்தார்?

By சோழ.நாகராஜன்

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் அதாவது எம்.கே.தியாகராஜ பாகவதர். சுருக்கமாக எம்.கே.டி. சின்ன வயதிலேயே நாடக நடிப்பிலும் இசையிலும் முறையான பயிற்சிகளைப் பெற்ற தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1926-ம் ஆண்டு திருச்சி பொன்மலையில் ‘பவளக்கொடி’ நாடகம் அரங்கேறியது. அதில் அர்ஜுனனாக நடித்தார் அவர். அவருடன் பவளக்கொடியாக முதலில் பெண்வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார்.

கொஞ்ச நாளில் எஸ்.டி.சுப்புலட்சுமி அந்த வேடத்தை ஏற்று நடிக்க வந்துவிட்டார். ஒருகட்டத்தில் பாகவதர் - எஸ்.டி.சுப்புலட்மி ஜோடி நாடக மேடைகளின் நட்சத்திர ஜோடியாகப் பிரபலமானது. ‘பவளக்கொடி’ நாடகம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் மேடை ஏறியது.

எம்.கே.தியாகராஜ பாகவதர்

நாடகமாக பெருவெற்றிபெற்ற ‘பவளக்கொடி’யைத் திரைப்படமாக எடுக்கும் எண்ணம் ஏற்பட்டது. 1934-ல் ’பவளக்கொடி’ படத்தின் மூலம் பாகவதரின் திரைப்பிரவேசம் நடந்தது. அந்நாளைய பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கே.சுப்பிரமணியம். பிறகு, இராம.அழகப்பச் செட்டியாருடன் இணைந்து ‘மீனாட்சி சினிடோன்’ எனும் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் எடுக்கப்பட்ட முதல் படம்தான் ‘பவளக்கொடி’. பாபநாசம் சிவன் பாடல்களை எழுதி, இசையமைத்தார். படத்தில் மொத்தம் 55 பாடல்கள். அதில் 22 பாடல்களை தியாகராஜ பாகவதர் பாடினார். படம் 275 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது.

பவளக்கொடி படத்தில்...

1949-ல், கோவை பட்சிராஜா ஃபிலிம்ஸ் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இந்தப் ‘பவளக்கொடி’ படத்தை இரண்டாவது முறையாக எடுத்தார். அப்போதைய ‘சந்திரலேகா’ (1948) புகழ் டி.ஆர்.ராஜகுமாரியை இதில் பவளக்கொடியாக நடிக்க வைக்க எண்ணினார். டி.ஆர்.மகாலிங்கம் கிருஷ்ணனாகவும், டி.இ.வரதன் அர்ஜுனனாகவும் இரண்டாவது ‘பவளக்கொடி’யில் நடித்தார்கள். டி.ஆர்.மகாலிங்கம் நாயகன் அர்ஜுனனாக நடிக்காததால் அந்தப் படம் வெற்றிபெறவில்லை.

நவீன சாரங்கதாரா படத்தில்...

பாகவதர் நடித்து அடுத்து வெளிவந்த படம் ‘நவீன சாரங்கதாரா’ (1936). இதிலும் பாகவதருக்கு இணை எஸ்.டி.சுப்புலட்சுமிதான். கே.சுப்பிரமணியம் இயக்கிய இந்தப் படத்தில் மொத்தம் 41 படல்கள். பாடல்களை இயற்றி இசையமைத்தவர் பாபநாசம் சிவன். சிவபெருமான் கிருபை வேண்டும் உள்ளிட்ட சில பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படி இரண்டே படங்களில் நடித்திருந்த நிலையில், சொந்தமாகப் படம் எடுக்க எண்ணி 1936-ல் ‘தியாகராஜா டாக்கி ஃபிலிம் கம்பெனி’ என்ற சினிமா கம்பெனியைத் தொடங்கிவிட்டார் பாகவதர். அதன் மூலம் சம்பத்குமார் இயக்கத்தில் ‘சத்தியசீலன்’ எனும் படம் தயாரிக்கப்பட்டது. அன்றைய வழக்கப்படி ‘தந்தை சொல் மறவாத் தனயன்’ என்று இன்னொரு பெயரும் இந்தப்படத்திற்குத் தரப்பட்டிருந்தது.

கே.சுப்பிரமணியம்

தந்தை - மகன் இரட்டை வேடங்களில் முதன்முதலாக பாகவதர் நடித்த படம் இது. பம்பாயில் இருந்த ஒரு ஸ்டூடியோவில் மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் செலவில் உருவானது ‘சத்தியசீலன்’. அப்போதுதான் படங்களில் இடம்பெறத் தொடங்கிய சண்டைக்காட்சிகளை இந்தப் படத்திலும் வைத்தார்கள். அதனால் பாகவதர் இந்தப் படத்தில் சண்டை போட்டார். காலத்தை வென்ற இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்.

ராஜா சாண்டோவுடன் பாகவதர்...

எல்.ராஜமாணிக்கம் கதை, வசனம் எழுத, சம்பத் குமார் இயக்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பம்பாய்க்கு அருகில் நடந்துகொண்டிருந்தது. பாகவதருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேவசேனா அன்று படப்பிடிப்புக்கு வரவில்லை. அடுத்த நாள்தான் அவர் வந்தார். வெளிப்புறத்தில் படப்பிடிப்பு என்று அறிவித்தார் பாகவதர். அந்தப் பகுதி ஒரு மலைச்சாரல். சத்தியசீலனைப் பிரிந்து கதாநாயகி காடு, மலையெல்லாம் சுற்றித்திரிவதுபோன்ற காட்சி.

ஒத்திகை பார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாயகி தேவசேனாவைக் காடு, மலைகளில் சில பல முறைகள் அலையவிட்டார்கள். ஒத்திகையின்போதே தேவசேனா களைப்பாக உணர்ந்தார். டேக் மேல் டேக் போனது. காட்சி ஓகே ஆகவில்லை. தேவசேனா பரிதாபமாக நின்றார். பாகவதர் சிரித்தார். அப்போதுதான் தெரியவந்தது கேமராவில் ஃபிலிமே இல்லை என்று. முதல்நாள் சொல்லாமல் படப்பிடிப்புக்கு மட்டம்போட்ட நாயகிக்குப் பாடம் புகட்டவே அந்த ஏற்பாடு என்று தேவசேனாவுக்குக் கடைசியில் தான் விளங்கியது. அவர் தன் தவறை உணர்ந்தார்.

‘சத்தியசீலனில்’ ‘நவீன சாரங்ததாரா’வைப் போலவே அரசியல் நெடி இருந்தது. அதனால் தணிக்கையில் ஆங்காங்கே வெட்டு விழுந்தன. அதன்பிறகு படத்தைப் பார்த்த பாகவதருக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களில் போதிய கவனம் செலுத்தாததை உணர்ந்தார் அவர். படத்தில் கொஞ்சம் நகைச்சுவைக்கென காமெடி டிராக்கை இணைத்தால் நல்லது என்று புரிந்துகொண்டார்.

ராஜா சாண்டோவின் ‘வசந்த சேனா’ படத்தின் வெற்றியால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் ஜோடிக்கு அப்போது திரையுலகில் புகழ் ஓங்கியிருந்தது. எனவே, என்.எஸ்.கே. - மதுரம் ஜோடியைத் தனது படங்களிலும் பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தார் பாகவதர்.

‘சத்தியசீலனில்’ தொடங்கிய பாகவதர் - கலைவாணர் கூட்டணி இறுதிவரையில் தொடர்ந்தது. நகைச்சுவைக் காட்சிகளின் உள்ளடக்கத்தில் பாகவதர் தலையிடமாட்டார். ஆன்மிகம் பேசும் பாகவதர் படத்திலும் அதனைக் கேலி செய்யும்படியான பகுத்தறிவு பேசும் கலைவாணரின் நகைச்சுவையை பாகவதர் அனுமதித்தார். படத்தின் வெற்றிக்கு அந்த நகைச்சுவை அவசியம் என்ற எண்ணமும் காரணம். படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் கையைக்கடிக்கவில்லை. பாகவதரின் புகழ் இன்னும் சில உயரங்களைத் தொட்டது. அவரது அந்தஸ்து மேல்நோக்கி எழும்பியது.

‘சத்தியசீலன்’ படப்பிடிப்பின்போது ஒருமுறை கே.சுப்பிரமணியமும் பாகவதருடன் பம்பாய்க்கு ரயிலில் பயணமானார். எதிரே அமர்ந்திருந்த ஒரு வடநாட்டு இளம் தம்பதியர் பாகவதரையே வியந்து பார்த்துக்கொண்டு வந்தார்கள். அந்தப் பெண் தன் கணவனிடம் கேலியாக ஏதோ சொல்லிச் சிரித்தாள். அதற்கு அவள் கணவன் அவளை ஏதோ சொல்லி அதட்டினான்.

தியாகராஜ பாகவதருக்கோ உடன் வந்தவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. அந்தத் தம்பதியிடம் என்னவென்று மிகவும் வற்புறுத்திக் கேட்டார்கள். “எங்கள் ஊரில் ஒரு பெண்கூட இவ்வளவு நகைகளை அணியமாட்டாள். இவரோ மூக்குத்தியைத் தவிர ஒரு பெண்ணின் அத்தனை நகைகளையும் அணிந்திருக்கிறாரே” என்பதுதான் தனது மனைவி தன்னிடம் வியந்துபோய்ச் சொன்னது என்று அந்தக் கணவன் சொன்னான்.

பாகவதர் அந்தப் பெண்ணையே சற்றுநேரம் இமைக்காமல் பார்த்தார். அவரின் கண்கள் பனித்தன. சட்டெனத் தான் அணிந்திருந்த கடுக்கனைக் கழற்றத் தொடங்கினார். அடுத்து கழுத்திலிருந்த சங்கிலிகள், மோதிரங்கள் என்று ஒவ்வொன்றாகக் கழற்றினார்.

கே.சுப்பிரமணியத்திற்கு அதிர்ச்சி. யாரோ ஒரு பெண் கூறிவிட்டாள் என்று எதற்காக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்... நகைகளை அணிந்துகொள்ளுங்கள் என்றார் அவர். ஆனால், பாகவதர் அதற்குச் செவி சாய்க்கவில்லை. அணிந்திருந்த அத்தனை நகைகளையும் அவிழ்த்துவிட்டார்.

பின்னர் நிதானமாகச் சொன்னார்: "வெள்ளைப் புடவையும் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுமாக இந்தப் பெண் எனக்கு சரஸ்வதி தேவிபோலவே தோன்றுகிறாள். அவள் சொன்ன வார்த்தைகளை இனி மீறவே மாட்டேன்!" சினிமாவைத் தவிர சாதாரண நேரங்களில் தன் உடலில் நகைகளைத் தேவையில்லாமல் அப்பிக்கொள்ளும் வழக்கத்தை அத்தோடு விட்டொழித்தார் எம்.கே.டி!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

தேநீர் நேரம்- 19: உத்தம புத்திரன் போனதால் நாடோடி மன்னனை பிடித்த எம்ஜிஆர்!

வீடியோ வடிவில் காண:

அன்றிலிருந்து நகை அணிவதை மறந்த தியாகராஜ பாகவதர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE