'விடுதலை' படத்தில் எனக்குப் பல கேள்விகள் இருந்தன: நடிகர் விஜய் சேதுபதி!

By காமதேனு

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதன் நன்றி நவிழும் விழா இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு பிரதானமாக இருப்பது வெற்றிமாறன்தான். நான் ஒரு களிமண் போலதான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். இந்தப் படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்துதான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன்போலதான், அவருடைய அறிவும், போக்கும், செயல்பாடும் பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத்தன்மை எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும்.

உணவு சமைக்கும்போதே அதை பரிமாறி சுவைத்துப் பார்க்க சொல்லும் தைரியம் எத்தனை பேரிடம் இருக்கும் எனத் தெரியவில்லை. அப்படி படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே என்னிடம் கேட்டார். அப்படி ஒரு அற்புதமான இயக்குநர் அவர். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தன. அதை அவரிடம் கேட்டு புரிந்து கொண்டு வாத்தியாரை கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது, வெற்றிமாறன்தான்.

இந்தப் படம் இப்படி வெளியானதுக்கு முக்கிய காரணம் வெற்றிமாறன். நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாக வெற்றி சாரின் மீது நம்பிக்கை வைத்து நகர்ந்து வந்திருக்கும் சூரிக்கும் பாராட்டுக்கள். தன் வேலையைச் சரியாக புரிந்து கொண்டு நடிக்கக்கூடியவர்களில் ஒருவர் பவானி. படத்தில் வரும் காட்டிற்கு அரசன் வேல்ராஜ் தான். அந்த அளவுக்கு சிறப்பான பணியைச் செய்துள்ளார். ராஜீவ் சார் இந்தப் படத்தில் நடித்தபோது நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையையும், மொழியையும் புரிந்து கொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணம் அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE