தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 200 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ள சரோஜாதேவிக்கு 'கன்னடத்துப் பைங்கிளி' என்ற செல்லப் பெயரும் உண்டு. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்ற தமிழின் அந்நாளைய முன்னணி நாயகர்களுடன் நடித்த அவருக்குத் திருமணம் நடந்துமுடிந்தபோது அதுவே அவரின் திரை வாழ்க்கைக்குக் குறுக்கே வந்து நின்றது. சோதனைகளில்லாமல் எவருக்குத்தான் வெற்றி கிட்டிவிடும்?
ஜெமினி கணேசனின் நூறாவது படம் ‘சீதா’. அதற்குப்பின் நான்கு படங்களில் நடித்த அவருக்கு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘பணமா பாசமா’. அதில் ஜெமினிக்கு ஜோடி சரோஜாதேவி. அதனை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பத்திரிகைகளில் ‘பணமா பாசமா’ வரப்போகிறது என்பதைச் சொல்லும் விளம்பரங்களை வெளியிட்டார்கள். அப்போதிலிருந்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வீட்டுத் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்ததாம்.
திரையுலகின் பெரும் புள்ளிகள் பலரும் கோபாலகிருஷ்ணனைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார்கள். "உனக்கொன்ன மூளை கோளாறாகிவிட்டதா?" என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டிருக்கிறார்கள். "சரோஜாதேவியைப் போட்டுப் படமெடுக்கிறாயே... அவருக்குத் திருமணமாகி மார்க்கெட் போய்விட்டதே. அது தெரியாதா உனக்கு? மேலும், வரலட்சுமி, டி.கே.பகவதி இவர்களையெல்லாம் இப்போது யாருக்குத் தெரியும்? பத்மினியை வைத்து ‘சித்தி’ படத்தை எடுத்து வெற்றி பெற்ற துணிச்சலில் ‘பணமா பாசமா’வை எடுக்க முடிவு செய்திருக்கிறாய். நிச்சயமாக இந்தப் படம் தோல்வியடையும். இந்த முயற்சியை உடனே நிறுத்திவிட்டு. மார்க்கெட்டில் இப்போது உள்ளவர்களைப்போட்டுப் படம் எடு" என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
தினமும் இப்படித் தொலைபேசிகள் வருவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. அவர்கள் தன்மீது கொண்ட அன்பினால்தான் இப்படி அறிவுரை சொன்னார்கள் என்றே கோபாலகிருஷ்ணனும் கருதினார். ஆனாலும் ‘பணமா பாசமா’ கதையின்மீது அவர் கொண்டிருந்த அளவில்லா நம்பிக்கையால் எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பைத் தொடங்கினார். முதல்நாள் படப்பிடிப்பு. ஜெமினி, சரோஜாதேவி, பகவதி, வரலட்சுமி ஆகியோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது.
படத்தின் அச்சாணியான அற்புதமான பாத்திரம் வரலட்சுமியுடையது. கோபாலகிருஷ்ணனுக்கு அவரது நடிப்பு ஒப்பவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்லவேண்டுமென்றால் மரக்கட்டைபோல நடித்தார் வரலட்சுமி. பல ஆண்டுகளுக்குப்பின் நடிப்பதால் நடிப்பையே மறந்துவிட்டாரோ என்று பலரும் நினைத்தார்கள். சக கலைஞர்கள் கோபாலகிருஷ்ணனை எச்சரித்தார்கள். “வரலட்சுமியின் பாத்திரம் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் எந்தளவுக்கு அவர் சிறப்பாக நடிக்கிறாரோ அந்த அளவுக்குப் படமும் வெற்றிபெறும். இப்படி உணர்ச்சியின்றி அவர் நடித்தால் படம் படுதோல்வியடைந்துவிடும்” என்று பலரும் சொன்னார்கள்.
இதையடுத்து, அன்றே நடிகையர் திலகம் சாவித்திரியை கோபாலகிருஷ்ணன் சந்தித்தார். “வரலட்சுமியின் பாத்திரத்தில் நீதானம்மா நடிக்க வேண்டும்” என்று அழாத குறையாகக் கெஞ்சினார். சாவித்திரி அவரை வாத்தியாரே என்று அழைப்பதுதான் வழக்கம். சாவித்திரி பேசினார்:
"வாத்தியாரே... கலை ஆர்வத்தில் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டீர்கள். ஜெமினி கணேசனின் உண்மையான மனைவி நான். அவருக்கு மாமியாராக நான் நடிப்பதா? என் மருமகனாக என் கணவனே நடித்தால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?"
சாவித்திரியின் கருத்தில் இருந்த நியாயம் கோபாலகிருஷ்ணனுக்குப் புரிந்தது. ஆனாலும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சாவித்திரி தொடர்ந்து சொன்னார்:
"வரலட்சுமி மிகச்சிறந்த நடிகை, நல்ல பாடகி, திறமையானவர். நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். அப்போதும் அவரால் நடிக்கவே முடியவில்லை என்றால் நான் நடிக்கிறேன். ஜெமினிக்கு பதிலாக வேறு ஒருவரைப் போடலாம் என்று ஜெமினியிடமே சொல்வோம். இந்தச் சிக்கலைத் தீர்க்க அவரும் நம்முடன் உடன்படுவார்" - என்றார் சாவித்திரி.
அன்று இரவு உறக்கம் வரவில்லை கோபாலகிருஷ்ணனுக்கு. உடனே கிளம்பி வரலட்சுமியின் வீட்டுக்குப்போனார். அவரது கேரக்டரை பற்றி மறுபடியும் அழுத்தமாக அவருக்குப் புரியவைப்போம் என்று முடிவெடுத்தார். வரலட்சுமியின் வீடருகே சென்றபோது யாரோ அந்த வீட்டிலிருந்து வெளியே வருவது தெரிந்தது. யாரது? அட, நம்ம சாவித்திரி. கோபாலகிருஷ்ணனை அவரும் பார்த்துவிட்டார். வாசலிலேயே வழிமறித்து, "வாத்தியாரே... வாழைத்தண்டாக இருந்த வரலட்சுமியை நெருப்புக்கோளமாக மாற்றிவிட்டேன். நாளை படப்பிடிப்பில் நிச்சயமாக பிச்சு உதறப்போகிறார் பாருங்கள். நிம்மதியாகக் கிளம்புங்கள்!" - என்று கோபாலகிருஷ்ணனைத் திருப்பி அனுப்பினார் சாவித்திரி. அப்போது நேரம் இரவு 12 மணி.
மறுநாள் அதே காட்சி படமாக்கப்பட்டது. முதல்நாள் 10 சதவீதம்கூட நடிப்பைக் காட்டாத வரலட்சுமி இந்தமுறை இரட்டைச் சதம் அடித்தார். கோபாலகிருஷ்ணனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. படமே வெற்றியடைந்துவிட்டதுபோல உணர்ந்தார். படப்பிடிப்புக்கு வந்திருந்து இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சாவித்திரி, இயக்குநரிடம் வந்தார். "என்ன வாத்தியாரே... வரலட்சுமியின் நடிப்பு போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்றார் வெள்ளந்தியாகச் சிரித்துக்கொண்டே.
‘பணமா பாசமா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. படத்தின் உயிர்நாடியான பாத்திரமே வரலட்சுமியுடையதுதான். படத்தின் வெற்றிக்கு அவரது சிறப்பான நடிப்புதான் காரணம் என்று பலரும் புகழ்ந்தார்கள். திருமணமானதால் சரோஜாதேவிக்கு மார்க்கெட் போய்விட்டது என்று சொன்ன அறிவுரைகளை மீறிய அந்தத் துணிச்சல் உண்மையில் வெற்றிபெற்றது சாவித்திரியின் தக்க நேரத்து உதவியால்தான் என்று நெகிழ்ந்துபோனார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
எந்த நடிகை இன்னொரு நடிகை நல்ல பெயர் வாங்குவதற்காக இரவென்றும் பாராமல் இப்படியொரு உதவியைச் செய்வார்; சாவித்திரி மாதிரி என்று வியந்துபோனார் அவர்.
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:
தேநீர் நேரம் - 16: ஔவையாரில் நடித்துவிட்டு அந்தமானுக்குப் புறப்பட்ட யானைகள்!வீடியோ வடிவில் காண:
தேநீர் நேரம்- 17; வரலட்சுமியை நடிக்கவைத்து வாத்தியாரை காப்பாற்றிய சாவித்திரி!