எம்ஜிஆரை வைத்துத்தான் பணம் பண்ணினேன் - ஏ.பி.நாகராஜன்

By வி. ராம்ஜி

தமிழ் சினிமாவில் புராண - வரலாற்று - இதிகாசப் படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். ஆரம்பகாலங்களில் திரைத்துறையில் வசனகர்த்தாவாக இருந்து, இயக்குநராக வளர்ந்து, தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஜொலித்தவர். ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கந்தன் கருணை’, ‘திருவருட்செல்வர்’, ‘நவராத்திரி’ முதலான பல வெற்றிப் படங்களைக் கொடுத்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர், அப்படி, லட்சக்கணக்கான மக்கள் மனங்களைக் கொள்ளைகொண்ட மக்கள்திலகம் எம்ஜிஆரை வைத்து இயக்கியதுதான் ‘நவரத்தினம்’.

நவம் என்றால் ஒன்பது. ஒன்பது விதமான கற்கள்கொண்டதைத்தான் நவரத்தினம் என்கிறோம். அப்படியான பெயர்களுடன் பெண் கதாபாத்திரங்களை உலவவிட்டு, அவர்களை கதையின் நாயகன் ஒவ்வொரு தருணத்திலும் சந்திப்பதும் அவர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவுவதுமான வித்தியாசமான கருவைக் கொண்டு ஏ.பி.நாகராஜன் பட்டைத் தீட்டியதுதான் ‘நவரத்தினம்’.

கதை நாயகனின் பெயர் தங்கம். பேருக்கேத்த மாதிரி தங்கமனசுக்காரர். சொத்துபத்துக்கும் கார்பங்களாவுக்கும் குறைவில்லாமல் போனாலும் எதிர்காலம் என்பது என்ன, எப்படியானது எனும் கேள்விகள் அவருக்குள். அந்தக் கேள்விகளுடன் ஒரு நாடோடியைப் போல் உலவுகிறார்.

எங்கோ சென்று, எங்கெல்லாமோ படுத்து, எதையோ கொண்டு பசியாற்றி, ஏகப்பட்ட மனித வாழ்க்கையைக் கண்டறிகிறார். முக்கியமாக, பெண்கள் பலரையும் சந்திக்கிறார். ஒவ்வொரு பெண்களும் அவரின் தங்கமான குணம் கண்டும் நேர்மை கண்டும் ஆபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்தும் அவர் மீது மரியாதை செலுத்துகிறார்கள். அந்த மரியாதையை காதலாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு பெண்களின் காதலையும் நிராகரித்தபடியே தன் பயணத்தைத் தொடருகிறார் தங்கம்!

மாணிக்கம், புஷ்பா, நீலா, வைரம், முத்தம்மா, கோமதி, மரகதம்... என அந்தப் பெண்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன. அப்படித்தான் அமைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். எல்லாப் பெண்களும் தங்கத்துக்கு உதவுகிறார்கள். எல்லாப் பெண்களுக்கும் தங்கம் உதவிக்கரம் நீட்டுகிறார். ஆனால் இறுதியில் மாணிக்கத்தைத் திருமணம் செய்துகொள்கிறார். வாழ்க்கைப் பயணத்தில், ஒவ்வொரு விதமான குணாதிசயங்களுடன் உள்ள பெண்களை தங்கம் சந்திப்பதுதான் ‘நவரத்தினம்’ படத்தின் கதை.

தங்கம் எனும் கதாபாத்திரத்தில், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். மாணிக்கமாக லதா. புஷ்பா எனும் கேரக்டரில் ஜரீனா வஹாப். மரகதம் எனும் கதாபாத்திரத்தில் பி.ஆர்.வரலட்சுமி. சுபா எனும் நடிகை முத்தம்மா எனும் கதாபாத்திரத்திலும் கோமதியாக ஜெயா எனும் நடிகையும் வைரமாக ஸ்ரீப்ரியாவும் நடித்தார்கள்.

நீலா எனும் கேரக்டரில் ஒய்.விஜயாவும் பாவலாய் எனும் கதாபாத்திரத்தில் ஜெயசித்ராவும் வைடூர்யமாக குமாரி பத்மினியும் நடித்தார்கள். எம்ஜிஆரின் அம்மா கேரக்டரில் எஸ்.வரலட்சுமி மற்றும் சிகே.சரஸ்வதி, புஷ்பலதா, ஏவிஎம்.ராஜன், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சி.ஆர்.பார்த்திபன், கவர்ச்சி வில்லன் கண்ணன், செந்தாமரை, ஐசரி வேலன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தார்கள்.

குன்னக்குடி வைத்தியநாதன்தான் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு... படத்தில் ஒரு இந்திப்பாடல் உண்டு. அதேபோல் தெலுங்குப் பாடலும் உண்டு. இந்திப்பாடலை, பி.எல்.சந்தோஷி எழுத, ஜேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடினார்கள்.

நெல்லை அருள்மணி என்பவர், ’பழுக்கு கண்ட கா செருகு’ எனத் தொடங்கும் பாடலை எழுதினார். இந்தப் பாடல், தெலுங்கில் தொடங்கி, ஆங்கிலம், கன்னடம் எனப் பாடப்பட்டது. பாடலின் நடுவே எம்ஜிஆரும் ஒய்.விஜயாவும் பேசுகிற வசனங்களும் இடம்பெற்றிருக்கும். வாணி ஜெயராமுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியவர்... பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. நா.காமராசனின் ‘புரியாததைப் புரியவைக்கும்’ என்ற பாடலை பி.சுசீலா பாடினார். இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. புலவர் புலமைப்பித்தன் எழுதிய ’உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்’ என்ற பாடல். இந்தப் பாடலை எஸ்பி.பி-யும் வாணி ஜெயராமும் இணைந்து பாடினார்கள்.

தவிர, கவிஞர் முத்துலிங்கம் எழுதி, ஜேசுதாஸ் பாடிய ’மானும் ஓடி வரலாம்’ என்ற பாடல் படத்தின் ரிக்கார்டில் இருந்தது. ‘அற்புதமான பாடல்’ என்று எல்லோரும் ரசித்த இந்தப் பாடல் படத்தில் ஏனோ இடம்பெறவில்லை. நீளம் கருதி எடுத்துவிட்டார்களோ என்னவோ?

கவிஞர் வாலி எழுதிய ‘குருவிக்கார மச்சானே’ பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இந்தப் பாடலை எம்ஜிஆருக்குப் பாடியவர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா. உடன் வாணி ஜெயராமும் பாடினார்.

1962-ம் ஆண்டில் ‘வடிவுக்கு வளைகாப்பு’ மூலம் இயக்குநரான ஏ.பி.நாகராஜன், 1977-ம் ஆண்டில்தான் எம்ஜிஆரை வைத்து முதன் முதலாக இயக்கினார். அதுதான் ‘நவரத்தினம்’ திரைப்படம். படத்துக்கு பூஜை போட்ட நாளிலேயே அனைத்து ஏரியாக்களும் விற்றன.

ஒரு எம்ஜிஆர் படம் எப்படி ஓடவேண்டுமோ அப்படியாக ஓடவில்லை. ஒரு வெற்றிப்படம் எப்படி ஓடவேண்டுமோ அப்படியெல்லாம் ஓடவில்லை. ஆனால், ஐம்பது நாள், அறுபதுநாள் என்றுதான் ரிலீஸான தியேட்டர்களில் ஓடின. அதேசமயம் அந்த ஐம்பது நாள் அறுபது நாளிலேயே செம கல்லா கட்டியது படம்.

1977ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி வெளியானது ‘நவரத்தினம்’. படம் வெளியாகி, 46 ஆண்டுகளாகின்றன. எம்ஜிஆரை வைத்து ஏ.பி.நாகராஜன் இயக்கிய முதல் படம் இதுதான். அதேபோல், ஏ.பி.என். இயக்கிய கடைசிப்படமாகவும் இதுவே அமைந்ததுதான் வேதனை. இந்தப் படம் வெளியான பிறகு ஏப்ரல் 1ம் தேதி காலமானார் ஏ.பி.என்.

இந்தப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது ஏ.பி.நாகராஜன் ‘’எத்தனையோ பேரைவைத்து படம் பண்ணியிருக்கிறேன்; எம்ஜிஆரை வைத்துத்தான் பணம் பண்ணியிருக்கிறேன்’’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டது இன்னமும் நினைவில் நிற்கிறது!

VIEW COMMENTS