சிவசந்திரன் : அழகான ஹீரோ, ஸ்டைலான வில்லன், இயல்பான இயக்குநர்!

By வி. ராம்ஜி

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள், எத்தனையோ நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியவர்களே இங்கு அதிகம். பாலசந்தரால் கண்டறியப்பட்டவர்கள் அனைவருமே ஒவ்வொருவிதத்தில் தனித்துவத்துடன் திகழ்ந்தார்கள்; ஜொலித்தார்கள்; ஜெயித்தார்கள். அவர்களில், நடிகராக அறிமுகமாகி, கதை வசனம் எழுதி, பின்னர் இயக்குநராகவும் நல்ல படைப்புகளை வழங்கியவர் நடிகர் சிவசந்திரன்.

நடிகர் சிவசந்திரன்

கொங்கு தேசத்தில் வால்பாறைப் பக்கம் சொந்தபூமி. அப்பா, போலீஸ் அதிகாரி. எனவே, கண்டிப்புடன் அன்பையும் குழைத்துக் கொடுத்து வளர்த்தார். இவரும் படிப்பில் கெட்டியாகவும் நேர்மை குன்றாமலும் வளர்ந்தார். ஆனாலும் இவருக்குள் கலையார்வம் என்பது எப்படியோ புகுந்து, உந்தித் தள்ளியபடியே இருந்தது. அப்படித்தான் சென்னைக்கு வந்தார் சிவசந்திரன்.

சிவசந்திரன்... இந்தப் பெயருக்குள்ளேயே சுவாரஸ்யம் இருக்கிறது. இவரின் பெயர் வேறு. சினிமாவுக்காக, இயக்குநர் ஒருவர், ‘சிவசந்திரன்’ எனப் பெயர்சூட்டினார். அதாவது ‘சிவாஜிகணேசன்’ என்பதையும் எம்ஜி.ராமச்சந்திரன் என்பதையும் சுருக்கிச் சேர்த்து, ‘சிவசந்திரன்’ என்றாக்கினார். அந்தப் படம் வெளிவராத நிலையில், கலாகேந்திரா நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று கே.பாலசந்தரிடம் சான்ஸ் கேட்டுக் கொண்டிருக்கும்போதுதான், கமலின் நட்பும் ரஜினியின் பழக்கமும் அவருக்குக் கிடைத்தது.

அதையடுத்து, பாலசந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலமாக சிவசந்திரன் அறிமுகமானார். இந்தப் படம்தான் காமெடியிலும் குணச்சித்திரத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷுக்கும் முதல்படம். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கவியரசு கண்ணதாசன் வரிகளில், எஸ்பி.பி-யின் குரலில் அமைந்த ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்ற பாடலை இன்றைக்கும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அந்தப் பாடலுக்கு நடித்து, அந்தப் படத்தின் மூலமாகவும் பாடலின் மூலமாகவும் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார் சிவசந்திரன்.

‘அவர்கள்’ படத்தில், ஒரேயொரு காட்சிக்கு சிவசந்திரனைப் பயன்படுத்திக் கொண்டார் பாலசந்தர். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் கமல் ஹேர்ஸ்டைலும் ரஜினியின் ஹேர் ஸ்டைலும் ரொம்பவே ஸ்பெஷல். அதேபோல், சிவசந்திரனின் ஹேர் ஸ்டைலும் எண்ணற்ற ரசிகர்களைக் கவர்ந்தது. அப்போது கமலுக்கு அடுத்தபடியாக பெண்களின் மனங்களில் அடுத்தபடியாக இடம்பிடித்தார் சிவசந்திரன்.

எஸ்பி.பியுடன்

ஒருநாள் சென்னை அண்ணா சாலையில் சபையர் தியேட்டர் வழியாக சிவசந்திரன் பைக்கில் வந்து கொண்டிருந்த போது அவரை முந்திக்கொண்டு சென்ற கார் ஒன்று அவரை மறித்து நின்றது. காரிலிருந்து இறங்கியவர், சிவசந்திரனைப் பார்த்துச் சிரித்தபடி, அவருக்குப் பக்கத்தில் வந்தார். சிவசந்திரனுக்கு அவர் யாரென்பது தெரிந்துவிட்டது. அவரும் ஓடிச்சென்று கைகுலுக்கினார். “வாழ்த்துகள் சார்” என்றார்.

அவரொரு இயக்குநர். அவர் படத்தைப் பற்றித்தான், மொத்தத் தமிழகமும் பேசிக்கொண்டிருந்தது. முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த இயக்குநர் வலிய வந்து, ‘’தம்பி, ரெண்டாவது படம் பண்றேன். இதுவும் வில்லேஜ் சப்ஜெக்ட்டுதான். ஹீரோ தேடிக்கிட்டிருக்கேன். நீ நடிக்கிறியா?’’ என்று கேட்க, ‘’இல்ல சார். என்னை மன்னிச்சிருங்க. நான் வெளிநாட்டுக்குப் போய், வேலை பாக்கலாம்னு இருக்கேன்’’ என்று சொல்லி மறுத்துவிட்டார்.

உண்மையில், அப்போது வெளிநாடு செல்லும் முயற்சியில்தான் இருந்தார் சிவசந்திரன். அந்த இயக்குநருக்கு சற்று வருத்தம். முகம் வாடியது. ‘’வெளிநாட்டுக்கு எதுக்கு வேலைக்குப் போகணும். இந்தப் படம் உன்னை எங்கேயோ கொண்டுபோய் விடும். சரி, உன் இஷ்டம்’’ என்று மீண்டும் கைகுலுக்கிவிட்டு, காரில் ஏறிச் சென்றார் அந்த இயக்குநர். அவர்... இயக்குநர் இமயம் பாரதிராஜா. அந்தப் படம் ‘கிழக்கே போகும் ரயில்’. அந்த ரயிலில் சிவசந்திரன் ஏறியிருந்தால்..? வேறொரு சிவசந்திரன் திரையுலகிற்குக் கிடைத்திருப்பாரோ என்னவோ?

‘’யாரையும் எதையும் குறையா சொல்லமுடியாது. அப்போது என் சிந்தனை, படத்துல நடிச்சாச்சு. வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய் செட்டிலாகலாம்னுதான் யோசனை வந்துச்சு. என்னை வழிநடத்துறதுக்கோ, என்னை ‘கைடு’ பண்ணி, சினிமாவுல பாதை போட்டுக் கொடுக்கறதுக்கோ, கூட யாருமே இல்ல. அப்படி மேனேஜர், பி.ஆர்.ஓ.ன்னு யாரையும் நான் வைச்சிக்கவும் இல்ல’’ என்று மனம் திறந்து சொல்கிறார் சிவசந்திரன்.

இயக்குநர் ருத்ரய்யாவையும் ‘அவள் அப்படித்தான்’ படத்தையும் எப்படி மறக்கமுடியும்? கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன் என அந்த நான்குபேரையும் மறந்துவிடமுடியுமா என்ன? இளையராஜாவின் இசையில், கங்கை அமரன் வரிகளில், ஜேசுதாஸின் குரலில், ‘உறவுகள் தொடர்கதை’ பாடலையும் பியானோ வாசித்தபடியே ஸ்டைல் காட்டி ஸ்ரீப்ரியா மயக்கும் சிவசந்திரனையும் நாம் மயங்கியும் கிறங்கியும்தான் ரசித்தோம்.

அந்த பியானோ வாடகைக்கு எடுக்கவில்லை. சிவசந்திரன், தன் நண்பரின் வீட்டுக்கு ஓடிச் சென்று ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார். நடிப்பின் மீதும் தொழிலின் மீதும் ‘அவள் அப்படித்தான்’ மீதும் அப்படியொரு ஆத்மார்த்த ஈடுபாடு கொண்ட மனிதர்!

‘பொல்லாதவன்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். கமலுக்கு வில்லனாக நடித்தார். ‘’நடிக்கணும். அவ்ளோதான் என்னோட நினைப்பு. சினிமாவுக்குள்ளே வந்தப்பவே, வெளிநாட்டு வேலைக்குப் போகணும்னு முடிவுபண்ணினேன். தடக்குன்னு சினிமாலயே இருக்கலாம்னு முடிவு பண்ணினேன். ஹீரோவா நடிச்சிட்டிருக்கும்போதே, வில்லனாக நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படி நடிச்சா, வில்லன் முத்திரை குத்திருவாங்கன்னெல்லாம் எனக்குத் தெரியாது. என் சினிமா வாழ்க்கை கிராஃப் இப்படி ஏறியும் இறங்கியும், மேடும் பள்ளமுமா ஆனதுக்கு நான் என்னையேதான் காரணமாகச் சொல்லுவேன். ’தீதும் நன்றும் பிறர் தரவாரா’ங்கறதுதான் உண்மை’’ என்று உண்மையை மிகக் கம்பீரமாக ஏற்றுகொள்கிற பக்குவம்தான், சிவசந்திரனின் தனித்துவ குணம்!

சிவகுமார், ராதா, சிவசந்திரன் நடித்த ‘ஆனந்தராகம்’ படம், நடிகை வடிவுக்கரசி தயாரிக்க, விஜயகாந்த் நடிக்க அந்தப் படத்துக்கு கதை, வசனம் என்று இயங்கிக் கொண்டே இருந்த சிவசந்திரன், நடிகர்திலகம் குடும்பத்துக்கே செல்லப்பிள்ளையானார். ‘வெள்ளை ரோஜா’ படத்தில் வில்லன் இவர்தானே! பிரபுவும் இவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். ‘என் உயிர் கண்ணம்மா’ படத்தை கதை, வசனம் எழுதி இயக்கினார்.

சிவசந்திரன் இயக்கிய முதல்படம் இதுதான். லட்சுமி, பிரபு, ராதா என்றெல்லாம் நடித்தார்கள். சந்தானபாரதியையும் பாண்டுவையும் இதில் அறிமுகப்படுத்தினார். இளையராஜா அத்தனை பாடல்களையும் அட்டகாசமாகப் போட்டுக்கொடுத்து, மெகா ஹிட்டாக்கினார். ‘ரத்ததானம்’ படத்தை இயக்கினார். ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படத்தை இயக்கினார். மு.கருணாநிதி, சிவசந்திரனை அழைத்து, ‘’தம்பி சிவா. நல்லா எழுதுறியேப்பா. கோர்ட் காட்சிகளைக் கூடுதலா வைச்சி நிறைய வசனம் எழுதி எடு’’ என்று சொன்ன அறிவுரையின்படியே எழுதி எடுத்தார். மீண்டும் அழைத்துப் பாராட்டினார் கருணாநிதி.

ஸ்ரீதர் இயக்கிய ‘செளந்தர்யமே வருக வருக’ முதலான பல படங்களில் நடித்தார். 'வண்டிச்சக்கரம்’ படத்தில் சிவகுமார் பேசப்பட்டார். சில்க் ஸ்மிதா கொண்டாடப்பட்டார். சரிதாவின் நடிப்பும் வினுசக்ரவர்த்தியின் நடிப்பும் பேசப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர் கதாபாத்திரத்தில், சரிதாவை ஒருதலையாகக் காதலித்து உருகும் கேரக்டரில் சிவசந்திரன், நிலவென ஒளிர்ந்தார். ’ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, சிவகுமாருக்கு 100-வது படம். சிவகுமார், தீபா, வினுசக்ரவர்த்தி, சிவசந்திரன் முதலானோர் நம் மனதில் அப்படியே பதிந்துவிடுவார்கள்.

நடிகராக அறிமுகமாகி, நல்ல கதாசிரியர் என்றும் சிறப்பான வசனகர்த்தா என்றும் பிரமாதமான இயக்குநர் என்றும் தன் உள்ளடங்கிய திறமைகளையெல்லாம் வெளிக்கொண்டு வந்தார் சிவசந்திரன். தொலைக்காட்சி சீரியல்களிலும் தன் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார்.

‘’சிவசந்திரன் சாரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரோட ஸ்டைலையும் கண்களையும் ரொம்பவே ரசிப்பேன். ‘சுப்ரமணியபுரம்’ படத்துல கனி அண்ணனுக்கு அண்ணனா இவரைத்தான் நடிக்கக் கேட்டேன். ஆனா, அது மிஸ்ஸாயிருச்சு. சிவசந்திரன் சாரோட நடிப்பு என்னை ரொம்பவே ஈர்த்துச்சு. அவரோட நடிப்பு, யார் சாயலும் இல்லாம இருக்கும்’’ என்று நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பெருமை மிக்க நடிகைகளில் தனியிடம் கொண்ட நடிகை லட்சுமிக்கும் சிவசந்திரனுக்குமான புரிதல், திருமணமாக, பந்தமாக வளர்ந்து, இன்றைக்கும் ஆதர்ஷ தம்பதியாக, அன்பும் உண்மையுமாக ரசித்துச் சிரித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘’இன்னிக்கி ஓடிடின்னெல்லாம் புதுப்புது தளங்கள் வந்துருக்கு. எல்லாமே ஆரோக்கியமான விஷயம்தான். ஓடிடில வெப்சீரீஸ் பண்றதுக்கும் இன்றைய டிரெண்ட்ல படம் பண்றதுக்கும் அதே, ‘பட்டினபிரவேசம்’ சிவசந்திரனா, ‘அவள் அப்படித்தான்’ சிவசந்திரனா, ‘என் உயிர்கண்ணம்மா’ சிவசந்திரனா... ஆர்வத்தோட இருக்கேன்.

நல்ல கதையோட யார் வந்தாலும் அவங்களோட சேர்ந்து நடிக்கவும் தயாராத்தான் இருக்கேன். டைரக்ட் பண்றதுக்காக புத்தியும் உடம்பும் அதே புத்துணர்ச்சியோடதான் இருக்கு’’ என்று அதே காதலுடனும் மாறாப் பற்று கொண்ட கலைஞனாக உற்சாகம் பொங்கச் சொல்கிறார் சிவசந்திரன்.

நடிகர் சிவசந்திரனுக்கு, எண்பதுகளில் தனித்துவத்துடன் ஸ்டைலிஷாக நடித்த இயல்பான நடிகருக்கு மார்ச் 7-ம் தேதி பிறந்தநாள்.

பிறந்தநாளுக்காகவும் மீண்டும் திரைத்துறைக்குள்ளேயும் ஓடிடி தளங்களிலும் புகுந்துபுறப்படத் தயாராவதற்கும் சேர்த்து வாழ்த்துகள் சிவசந்திரன் சார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE