நடிகர் தனுஷின் தீராத ஆசை - நிறைவேற்றுவாரா ரஜினி?!

By KU BUREAU

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வாய்ப்பை அவருக்கு ரஜினி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘பா. பாண்டி’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ராயன்’. இந்த வாரம் படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான புரோமோஷன் சூடுபிடித்துள்ளது. தனுஷூடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நேற்று ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது.

அதில் மேடையில் நடிகர் தனுஷிடம், காளிதாஸ் ஜெயராம் “’ராயன்’ படத்தில் நீங்கள் நடித்திருக்கவில்லை என்றால் வேறு யாரை நடிக்க வைத்திருப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு தனுஷ் சற்றும் யோசிக்காமல் உடனே நடிகர் ரஜினிகாந்த் என பதில் அளித்திருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் நிகழ்ச்சியிலேயே, தனக்கு ரஜினிகாந்தின் பயோபிக்கிலும் நடிக்க தீவிர ஆசை உண்டு என்பதை ரஜினியின் ரசிகராக விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ்.

‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் தனுஷ் தன்னை இயக்க வேண்டும் என்ற விருப்பப்பட்டதாகவும், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது எனவும் ரஜினி தெரிவித்திருந்தார். இப்போது ‘ராயன்’ பட விழாவிலும் மீண்டும் ரஜினியை இயக்கும் ஆசையை சொல்லி இருக்கிறார் தனுஷ். காலம் கனிந்து அந்த வாய்ப்பை ரஜினி, தனுஷூக்குத் தருவாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE