மணிரத்னம்: தமிழின் தவிர்க்க முடியாத இயக்குநர்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

கல்லூரி காலத்தின் மிகப்பெரிய பொக்கிஷ நினைவு, எஜுகேஷனல் டூர் என்ற பெயரில் நாங்கள் சென்ற சுற்றுலா நாட்கள். பெங்களூர் மற்றும் மைசூரின் சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு செல்வது திட்டம். ரயிலில் செல்லும் இரவு முழுவதும் ஓயாமல் பாடிக்கொண்டே பயணித்தோம். பகல் பொழுதெல்லாம் தூக்கக் கலக்கமாக கட்டிடங்களை சுற்றி வருவோம். மாலை பூங்காக்கள், திரையரங்குகள், உணவுக்கூடங்கள் என திரிந்து பின்னர் பின்னிரவு வரை ஆடல் பாடல் கொண்டாட்டம்தான். எங்களுடன் வந்த ஆசிரியர்களோடு இருந்த அன்னியோன்யம் இந்த தலைமுறை காணாதது.

பெங்களூரில் இரண்டாவது முறையாக ’பகல் நிலவு’ படம் பார்த்தேன். நானும் என் காதலியும் பார்த்த முதல் படம். காதலி பிறகு மனைவியானது தனிக்கதை. கும்பலாக படம் பார்க்கப் போனாலும் பக்கத்தில் சீட்டில் பிரியமானவளுடம் உட்கார்ந்து படம் பார்த்தது புது அனுபவம். பார்த்த படம் என்றாலும், பக்கத்து சீட்டில் அவள் எப்படி ரசிக்கிறாள் என்று பார்ப்பதில் சற்று கவனம் ஏற்பட்டாலும், படத்தையும் ரசித்தேன்.

படத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான திரை மொழி தெரிந்தது. முரளி எனக்கு பிடித்தமான நடிகர். ‘பூவிலங்கு’ படம் பார்த்த போதே அவரின் சரளமான நடிப்பு பிடித்தது. முரளி, சரத்பாபு பாத்திரங்களை விட சத்யராஜ் நடித்த பெரியவர் பாத்திரம் ஈர்த்தது. ’நாயகன்’ படத்தின் வேலு நாயக்கர் பாத்திரத்திற்கு மிக நெருங்கிய வார்ப்பு அது. படம் பார்த்து வந்த நாட்களில் “இந்த டைரக்டர் கிட்ட புதுசா ஓண்ணு இருக்கு. என்னன்னு சொல்லத் தெரியல..” என்று சொன்னேன்.

அவர் இந்திய சினிமாவின் மிகப்பெரிய வரவு என்று அன்று எனக்குத் தெரியவில்லை. ‘இதயகோவில்’ எனக்கு பிடித்திருந்தாலும், அது மணிரத்னம் படம் போல இல்லை. பிறகு வந்த ‘மெளனராகம்’தான் அவரின் தனித்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ’நாயகன்’ அவரை தேசிய அளவில் அடையாளம் காட்டியது.

‘நாயகன்’ படம் ரிலீசான போது நான் பெங்களூர் நிம்ஹான்ஸில் படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பறைப் பாடம், மருத்துவமனையின் சிகிச்சைகள், இரவு நூலக நேரம் என புற உலக ஆர்வங்களுக்கு நேரமே இல்லாத வாழ்வுமுறை அது. இருந்தும் நான் படம் பார்ப்பதை நிறுத்தவில்லை. ஒரு சனிக்கிழமை இரவு காட்சி பல்லவி தியேட்டரில் தங்கச்சன், சுதாகர் ராவ், ஷிவப்பா என வேற்று மொழி நண்பர்களுடன் போயிருந்தேன். ஒரு தமிழ் படம் பார்த்து அவர்கள் அதிர்ந்து போனது அது தான் முதல் முறை போலும். கமலை எல்லோரும் தங்கள் மொழிப்படங்களில் பார்த்திருந்ததால் தமிழ் படம் பார்க்க வந்தார்கள். குளிரில் நடுங்கிக் கொண்டே ஆட்டோவில் வந்தோம். கமலின் நடிப்பு தான் அன்று எங்கள் எல்லோருக்கும் பொதுவான பேசுபொருளாக இருந்தது.

ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்திருந்த நேரம். அதுவும் ’சிட்னி ஷெல்டன்’ நாவல்கள்தான் எனது அன்றைய ரசனைக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. ’காட் பாதர்’ நாவல் படித்திருக்கவில்லை. சில வருடங்கள் கழித்துத் தான் ’மரியோ பூசோ’வின் நாவலைப் படித்தேன். பல வருடங்கள் கழித்து தான் அதன் படமாக்கத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதனால் நாயகன் படத்தை எனக்கு எந்த ஒப்பீடும் இல்லாமல் இயல்பாக பார்க்க முடிந்தது.

மீசை இன்றி கமல் முதல் முறையாக நடித்த படம் நாயகன். பம்பாயை கதைக்களமாகக் கொண்ட முதல் தமிழ்படமும் அதுதான். அன்று என் அபிமான எழுத்தாளராக இருந்த பாலகுமாரன் வசனம் எழுதிய முதல் படம் இது. பாலியல் சந்தையில் சந்திக்க நேர்ந்த ஒரு பெண்ணை இயல்பாக காதலித்து மணக்கும் நாயகனை தமிழ் சினிமா கண்டது அதுதான் முதல் முறை. சரண்யா, கிட்டி, டினு ஆனந்த் மற்றும் பிரதீப் சந்திராவிற்கு அது முதல் படம். எந்த பாடலுக்கும் கமல் நடனம் ஆடாத முதல் படமும்கூட. இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாயகன் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டது நிஜம். என்னையும் அது சற்று கலைத்துப் போட்டது. ’தென்பாண்டிச்சீமை..’ மெட்டும் பாட்டும் சதா ஓடிக்கொண்டிருந்தது. என் பெங்களூர் நண்பர்கள் மத்தியில் என் கெத்து கூடியது. பிறகு வந்த ’மைக்கேல் மதன காம ராஜன்’ மற்றும் ’புஷ்பக்’ கமலுக்கும் கமல் ரசிகனான எனக்கும் பெரிதும் பெருமை சேர்த்தன.

நாயகனுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய ’அக்னி நட்சத்திரம்’ பி.சி.ஶ்ரீராம் படம் போல எனக்குப்பட்டது. அடுத்து வந்த தெலுங்கு டப்பிங் படமான ’இதயத்தை திருடாதே’ என்னை விட என் இதயத்தை திருடியவளுக்கு பிடித்தது. என்னைப் பார்க்க பெங்களூர் வந்தபோது அவள் முழுக் கதையையும் சொல்ல நான் வியப்புடன் கேட்டேன். அதிகம் சினிமா பார்க்காதவள், படங்கள் பற்றியே பேசாதவள், எனக்கு முன் ஒரு படம் பார்த்து எனக்கே கதை சொன்னது என்னால் நம்ப முடியவில்லை. அடுத்த சில வருடங்களில் நாங்கள் மணமுடித்தோம். இன்று 30 ஆண்டுகள் மேலாகியும் அது போல் ஒரு கதை சொல்லல் பிறகு நடைபெறவில்லை. படம் எனக்கும் பிடித்துப் போனது. ’ஓ பாப்பா லாலி’ என்று கிரிஜாவை மடியில் வைத்துக் கொண்டு பாடும் நாகார்ஜுனாவின் நடிப்பை மிக ரசித்தேன். நடிகை கிரிஜா அதற்கு பிறகு நடிக்கவில்லை. ‘கீதாஞ்சலி’யும் மற்ற மணிரத்னம் படங்கள் போல பெரிதாகப் பேசப்படவில்லை.

பிறகு வந்த ’அஞ்சலி’ வானுயரப் புகழப்பட்டது. நானும் படத்தில் இசை, நடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை ரசித்தேன். ஆனால் எனக்குள் இருந்த மருத்துவ உளவியலாளன் காரணமாக அந்த படத்தை ஏற்க முடியவில்லை. என்ன குறைபாடு என்பதை கூட சரியாக காட்டாமல், வெறும் பரிதாபம் ஏற்படுத்தும் காட்சிகளை மட்டும் வைத்து, கடைசியில் அவசியமே இல்லாமல் அந்த குழந்தையை சாகடித்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இயல்பான நடிப்பு, இதமான ஒளியமைப்பு, அளவான வசனங்கள், மிகச்சிறப்பாக கிடைக்கும் இசை இவை அனைத்தும் வைத்துக் கொண்டு, மணிரத்னம் கதையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று பேசி வந்தேன்.

’பம்பாய்’ படம் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் அரவிந்த் சுவாமி பேசியே இரு மதத்தினரை இணைத்து வைத்தது பாசாங்காகப் பட்டது. ’தளபதி’ படத்திலும் தாயுடன் செல்லும் கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை. நண்பனுக்கு உயிரை விட வேண்டிய பாத்திரம் அது.

’ரோஜா’ படத்திற்காக இளையராஜாவை கைவிட்டது மேலும் என்னை அவரிடமிருந்து அன்னியப்படுத்தியது. ரகுமான் இசை, ஒளிப்பதிவு, பிரம்மாண்டம் எல்லாம் பிடித்தது. ஆனால் கிளைமாக்ஸ் ஏமாற்றம் தந்தது. ’திருடா திருடா’ படமும் பி.சி.ஶ்ரீராம் முன்னின்று இயக்கியது போலப்பட்டது. ஆனால் எனக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.

மணிரத்னம் படம் என்றால் ஒரு டெம்ளேட் என்பது பிடிபட்டது. தேசமே பேசக்கூடிய பிரச்சினையை எடுத்து, ஒரு மாடி வீட்டு பையன் பார்வையில் விட்டேத்தியாக ஒரு பதில் சொல்வது. இதில் அமைதியான நாயகன், அதிகமாகப் பேசும் பெண், வயதுக்கு மீறிய விஷயங்களை பேசும்/செய்யும் குழந்தைகள், ஒரே மாடுலேஷனில் அனைவரும் பேசும் சின்ன சின்ன வசனங்கள்.. என எனக்கு அலுக்க ஆரம்பித்தது. என் விமர்சனங்களை என் மனைவியோ, நெருங்கிய நண்பர்களோ மதிக்கவில்லை. இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர் என்று எல்லோரும் பேசத்துவங்கினார்கள்.

இரு பெரும் திராவிடத்தலைவர்களின் தனி வாழ்க்கையை தொட்டுக் காட்டிய ’இருவர்’ படம் நான் நினைத்தது போலவே தோற்றது. சில வருடங்கள் கழித்து இவர் இயக்கிய ’ஆய்த எழுத்து’ படத்திலும் கருப்பு சட்டை போட்ட பாரதிராஜா “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது” என்ற வசனத்தில் அவர் கதாபாத்திரத்தை தொடங்கியது, அவரின் அரசியல் சார்புகளை காட்டிக் கொடுத்தது. “படத்தை படமா பாத்துட்டு மறந்துட்டு அடுத்த வேலை பாருங்க” என்பார் என் மனைவி. மணிரத்னம் படங்கள் பேசிய /பேசாத அரசியல் படங்கள் எனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தன.

அவர் மனித உணர்வுகளை, குறிப்பாக ’காதல்- கல்யாணம்- குடும்ப அமைப்பு’ என்ற பரப்பில் எடுத்த சில நல்ல படங்கள் என்னை அவரிடம் மீண்டும் கொண்டு சென்றது. ’உயிரே’ படம் – சுஜாதா எழுதிய ஓர் அற்புதமான’“what is’ கதை. ’அலைபாயுதே’, கதாசிரியர் ஆர். செல்வராஜ் எழுதிய அழுத்தமான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுத்தது. ’கன்னத்தில் முத்தமிட்டால்’ வளர்ப்பு தாயின் உணர்வுப் போராட்டமாக, அதுவும் ஈழப் போராட்ட பின்னணியில் ஓரளவு நம்பகத்தன்மையுடன் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் நான் பார்த்து ரசித்த கடைசி படம் ’ஓகே கண்மணி’. எடுத்துக் கொண்ட கதையை நேர்மையாகச் சொன்ன படம்.

அவரின் பல படங்களை எனக்கு பார்க்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. மணிரத்னம் படங்களை விமர்சனம் செய்த அளவு நான் எவர் படத்தையும் அலசவில்லை. ஏன் அப்படி? அவரைப் போல சினிமாவை கலையாகவும், வர்த்தகமாகவும் சரியாக புரிந்து கொண்ட இயக்குனர்கள் குறைவு. தமிழ் படங்களின் வீச்சை தேசம் முழுதும் கொண்டு சென்றவர். மிகத்திறமையான நிர்வாகி. சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் பெரிய நடிகர்களையும் வைத்துக் கொண்டு தான் நினைக்கின்ற சினிமாவை எடுத்தவர். ஒரு ஐரோப்பிய சினிமா பார்க்கும் மித உணர்வை இயல்பாக தன் படங்களில் கொண்டு வந்தவர். எழுத்தாளர் சுஜாதவின் திரைநடை எழுத்தை, முழுதும் தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டவர். இவர் இயக்காமல் தயாரித்த படங்களும் தரமானவையே.

இருந்தும் என் வருத்தம் எல்லாம், சந்தை வர்த்தகம் புரிந்து வெற்றிப் ப்டஙகளின் சூத்திரம் தெரிந்தவர் இன்னமும் அழுத்தமான கதைகளை எடுத்திருக்கலாம் என்பதாக இருக்கிறது. ஜெயகாந்தன் பேசியது போல ‘எழுதிய கதைகளைத்தான் விமர்சிக்கலாம். எழுதாத கதைகள் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை’.

எப்படித் தர வரிசைப் படுத்தினாலும் மணிரத்னம் தமிழின் தவிர்க்க இயலாத இயக்குனர். என்னை விட்டுவிட்டு ’பொன்னியின் செல்வன்’ படத்தை ஓ.டி.டியில் பார்த்தார் என் மனைவி. “படம் பார்த்தும், கதை நிறைய இடங்களில் புரியவில்லை” என்றார் பரிதாபமாக. நான் சிரித்துக் கொண்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE