இயக்குநர் சேரன் : ’தவமாய் தவமிருந்து’ யதார்த்த சினிமா தரும் ‘ஆட்டோகிராஃப்’ நாயகன்!

By வி. ராம்ஜி

எத்தனையோ படங்கள் மூலமாக, தனக்கெனத் தடம் பிடித்து வரலாறு படைத்தவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக் கொண்ட கதையாலும் கதையைச் சொன்ன விதத்தாலும் சினிமா எனும் கோட்டைக்குள் தனிக் கோட்டை கட்டி, கொடி நாட்டிய இயக்குநர்களில் சேரனும் ஒருவர்!

மதுரைக்கு அருகே தீப்பெட்டி சைஸில் உள்ள கிராமம் பழையூர்பட்டி. அப்பா வேலை பார்த்த தியேட்டரும் ஆபரேட்டர் அறையில் இருந்து புகை போல் வெளிவந்து, திரையில் ஒளியென காட்சிகள் ஜாலம் காட்டிய மாயாஜாலங்களும் சிறுவயதில் இருந்தே சேரனை என்னவோ செய்தன. பின்னாளில், இப்படி தியேட்டர்களில், அவரே இயக்கிய படங்கள், ஆபரேட்டர் அறைக்குள் இருந்து புகையைப் போல் வந்து, ஒளிபரப்பப்படும் என்பதும் மிகப்பெரிய வெளிச்சக் கதிர்கள் தம் மீது பாயும் என்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை சேரன்!

ஆனால் சேரன் வளரவளர, அவருக்குள் இருந்த சினிமாக்காரனும் வளர்ந்துகொண்டே வந்தான். அப்பாவின் ஆசியுடன் அம்மாவின் அன்புடன் அப்பத்தா ஆசியுடன், கையில் பெட்டியையும் மனதில் ஏகப்பட்ட கனவுகளையும் சுமந்துகொண்டு, சென்னைக்கு வந்திறங்கினார்.

வந்தவருக்கு, சினிமா உலகம் புலப்படவே நாட்களும் மாதங்களும் ஆயின. சில படங்களில் புரொடக்‌ஷன் பணிகள் கிடைத்தன. பிறகு, தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று பேரெடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் முதல் இயக்கமான ‘புரியாத புதிர்’ படத்தில், உதவி இயக்குநரானார். சினிமாவின் நுணுக்கங்களை, சினிமாவில் எப்படி வேலை செய்யவேண்டும், எப்படியெல்லாம் வேலை வாங்கவேண்டும் என்பவற்றையெல்லாம் துல்லியமாக அறிந்துகொண்டார். கமலின் ‘மகாநதி’ படத்துக்கும் சில நாட்கள் வேலை பார்த்தார்.

உதவி இயக்குநராக இருந்துகொண்டே பல கதைகளை எழுதினார். திருத்தித் திருத்தி திரைக்கதைகளை உருவாக்கினார். நாளுக்கு நாள் நகாசு பண்ணிக்கொண்டே வந்தார். ஒருகட்டத்தில், தைரியமும் தனியே படம் இயக்க முடியும் என்கிற துணிச்சலும் தெளிவும் வந்தது சேரனுக்கு.

கதை எப்போதோ ரெடி. ஆனால், தயாரிப்பாளர் கடும் தேடுதல் போராட்டத்துக்குப் பிறகுதான் கிடைத்தார். சேரனுக்கு சேரன் மீது நம்பிக்கை எப்போதோ பிறந்துவிட்டிருந்தது. அவர் மீது தயாரிப்பாளருக்கும் நம்பிக்கை பிறந்தது. பங்கஜ் புரொடக்‌ஷன்ஸ் ஹென்றி தயாரிப்பாளராக வந்தார். சேரன் ஒரு சிற்பியைப் போல் செதுக்கிச் செதுக்கிய அந்தப் படத்துக்கு ‘பாரதி கண்ணம்மா’ என்று பெயரிட்டார். 1997-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் வந்தது இந்தப் படம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழம்பெரும் வாசகம், சேரனுக்கு ரொம்பவே பொருந்தியது.

பணக்கார - ஏழை காதல். மேல் ஜாதி - கீழ் ஜாதி காதல். பண்ணையாரின் மகளுக்கும் அந்த வீட்டில் வேலை பார்க்கும் பையனுக்கும் இடையே வருகிற காதல். “அட... இதெல்லாம் எத்தனையெத்தனையோ படங்கள்ல வந்துருக்குதேப்பா’’ என்று எவரும் சொல்லமுடியாத திரைக்கதையும் காட்சிகளும்தான் படத்துக்கு வேறொரு வண்ணம் கொடுத்தது. முக்கியமாக, படத்தின் இறுதிக்காட்சியை, அந்த ட்விஸ்ட்டை, படம் பார்க்கிற எவருமே யூகித்திருக்க முடியாது. படம் பார்த்தவர்கள், கண்ணீரும் கைக்குட்டையுமாக வந்தார்கள். திரையுலகப் பிரபலங்களே ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

‘பாரதி கண்ணம்மா’வின் வெற்றி, சேரனை மிக முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. பாரதியின் கண்ணம்மாவை, சேரனின் கண்ணம்மாவாகத் தந்தவர், இந்த முறை ‘பொற்காலம்’ படைத்தார். 1997-ம் ஆண்டின் ஆரம்பத்தில் பொங்கலுக்கு வந்து சர்க்கரைப் பொங்கல் படையலிட்ட சேரன், அதே வருடத்தில், தீபாவளிக்கு ‘பொற்காலம்’ எனும் சரவெடியைக் கொளுத்திப் போட்டார்.

இங்கேயும் கதையில் புதுமையெல்லாம் பண்ணவில்லை. பேசமுடியாத தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கப் போராடுகிற அண்ணனின் கதைதான். அதனால், தன் காதலைக் கூட புறந்தள்ளுகிற கதைதான். ஆனால், ‘பாரதி கண்ணம்மா’வைப் போலவே சொல்லப்பட்டதில் யதார்த்தம் கூடியிருந்தது. சொன்னவிதத்தில் கவிதையும் கனமும் இருந்தது. படத்தின் கிளைமாக்ஸில், இதிலும் வைத்த ட்விஸ்ட், படம் பார்த்த ரசிகர்களையெல்லாம் கலங்கடித்தது. பலத்த கரவொலியை எழுப்பச் செய்தது.

இப்படியாகத்தான், சேரனின் சினிமாக் கோட்டை உருவானது. வணிக சினிமாவுக்குள் நுழைந்து, விளையாடமாட்டார். ஒவ்வொரு படங்களையும் கண்ணும்கருத்துமாகக் கொண்டு, கருத்தான படங்களைத் தரவேண்டும் என்பதில் தீராக்காதலன். காட்சிகளில் யதார்த்தத்தை தவழவிடுகிற தகப்பனாகவே இயக்குநராகவே திகழ்ந்தார்.

கலை என்பது மிகப்பிரம்மாண்டமான வணிகச் சந்தை. அதேசமயம் அற்புதமான, எளிதில் எல்லோரையும் கவரக்கூடிய ஜால உலகம். இந்த எல்லோரையும் கவரும் ஜால உலகில், எல்லையும் மீறக்கூடாது. பொறுப்புடனும் செயல்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்து படைப்புகளை பந்திக்குக் கொண்டு வந்த இயக்குநர் என்பதாலேயே, மிகப்பெரிய மரியாதையையும் கெளரவத்தையும் பெற்றார் சேரன்.

இந்த முறை அரசியல் முகங்களையும் முகமூடிகளையும் கிழிக்கும் வகையில் ‘தேசிய கீதம்’ பாடினார். ‘’சேரன் படம் எடுத்தா ஓடும் ஓடாதுங்கறதெல்லாம் இருக்கட்டும். அது, நல்ல படமாவும் நமக்கு ஏதோ உணர்த்துற படமாவும் இருக்கும்’’ என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளிநாட்டுக்குச் சென்று ஏதேனும் ஒரு வேலை பார்த்துவிட்டு, சம்பாதித்து அனுப்பிவைத்தால் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்று பெரிதும் நம்பப்பட்டது. கலர்கலராக சினிமா போஸ்டர்கள் போல, ‘சவுதியில் வேலை’, ‘துபாயில் வேலை’, ‘அபுதாபியில் வேலை’ என்றும் ‘எலெக்ட்ரீஷியன் தேவை, கொத்தனார் தேவை, வீட்டு வேலைக்கு ஆள் தேவை’ என்றும் கலர்கலர் போஸ்டர் விளம்பரங்களை, எல்லாக் கிராமங்களிலும் பஸ் ஸ்டாப்புகளிலும் பஞ்சாயத்து போர்டு அலுவலக வாசல்களிலும் பார்க்கலாம். இதற்கான ஏஜெண்டுகள்தான் இளைஞர்களின் தெய்வங்கள். இதை அடிவேராக வைத்துக்கொண்டு, ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தை உருவாக்கினார். ‘பாரதி கண்ணம்மா’வின் நாயகனான பார்த்திபனையும் ‘பொற்காலம்’, ‘தேசியகீதம்’ படங்களின் நாயகனான முரளியையும் இணைத்து ‘வெற்றிக்கொடிகட்டு’ உருவாக்கினார். வடிவேலுவைத் தொடர்ந்து தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார். அதுவும் ரசித்து ரசித்துப் பயன்படுத்தினார்.

அடுத்து... சேரன் படைத்த ‘பாண்டவர் பூமி’யும் அப்படித்தான். உறவுகளின் உன்னதமும் உயிர்ப்பும் அறியாத தலைமுறையில் அந்த உறவுகளின் ஆழத்தை, பிரியத்தை, பாசத்தை, பொய்யற்ற தியாகங்களை ‘பாண்டவர் பூமி’யாகப் படைத்துத்தந்தார். மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. “ராஜ்கிரண் மாதிரியான மகா நடிகனை மிகப்பிரமாதமாப் பயன்படுத்திக்கறாருப்பா” என்று திரையுலக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இந்த சமயத்தில், ஒளி ஓவியர் தங்கர்பச்சான், ‘அழகி’யைத் தந்தார். அடுத்து சேரனையே நாயகனாகத் தந்தார். ’சொல்ல மறந்த கதை’ என்கிற சொல்லாத கதைக்கு சேரனை நாயகனாக்கினார். அவரும் எளிய நடிப்பால் நம்மை ஈர்த்துக் கொண்டார்.

இந்த தைரியத்தில், அடுத்து, யார் யாரையோ நாயகனாக வைத்து எடுக்க முனைந்து, பிறகு ‘நாமளே நடிச்சிடலாம்’ என்று முடிவெடுத்தார். ஒரு டைரியைப் போல, தான் கடந்து வந்த வாழ்க்கையில், தான் சந்தித்த காதல் குறித்த புரிதலையும் காதலையும் ‘ஆட்டோகிராஃப்’ போல செல்லுலாய்டில் எழுதினார். ஆண் பெண் பேதமில்லாமல், அந்தக் கதைக்குள் தங்களையும் தங்களின் காதலையும் தேடி இணைந்துகொண்டார்கள்.

திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். காதலுக்காகவும் பார்த்தார்கள். பால்யத்துக்காகவும் பார்த்தார்கள். தோழமை உணர்வுடன் பழகிய ‘சேரன் - ஸ்நேகாவுக்காகவும் பார்த்தார்கள். சேரனுக்கும் ரசிக மனங்களுக்கு இடையேயான புரிதல்தான் சேரனின் முதல் வெற்றி. அடுத்தடுத்த வெற்றிகளெல்லாம் சேரனின் புதுப்புது சிந்தனைகளும் செயலாக்கங்களும்!

அம்மாவுக்கும் பிள்ளைக்குமான கதைகள், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே வந்திருக்கின்றன. ஆனால், அப்பனைக் கொண்டாடுகிற கதையோ சினிமாவோ தமிழ் சினிமாவில் அத்திப்பூவாகவே இருந்தது. மிக மிக பின் தங்கிய நிலையில் இருக்கிற கிராமத்துத் தகப்பன், மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, மகன்களை கரை சேர்க்கிற தகப்பன்சாமிகளை ராஜ்கிரணைக் கொண்டு ‘தவமாய் தவமிருந்து’ தன் படமான ‘தவமாய் தவமிருந்து’ உருவாக்கினார் சேரன். அப்பன்களையும் ஆத்தாக்களையும் கைகழுவிய மகன்கள், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, உள்ளங்கையில் வைத்துத் தாங்கத் தொடங்கினார்கள்.

அப்போது நெல்லையில் வேலை பார்த்துகொண்டிருந்தேன். ரத்னா தியேட்டரில் வெளியானது. முதல் நாளும் மறுநாளும் மூன்றாம் நாளும் தொடர்ச்சியாக இந்தப் படத்தைப் பார்த்தேன். அப்போது அந்த ஊருக்கு வந்திருந்த சேரனிடம் பேட்டியெடுத்தேன். ‘ஒரேயொரு ஊருக்குள்ளே ஒரேயொரு அம்மா அப்பா’ என்ற பாடலைப் பாடாத, பாடிக் கொஞ்சாத, தகப்பன்களே இல்லை. அப்பாக்களுக்கான தாலாட்டுப் பாடலாக அமைந்தது பாடல். மகன்களுக்குப் பாடமாக அமைந்தது ‘தவமாய் தவமிருந்தது’.

மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ வித்தியாசமான கதாபாத்திரம். கரு.பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’ இன்னொரு சூழலை உணர்த்தியது. சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘சீதாராமம்’ பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இந்தப் படம் பார்க்கிற போது, சேரனின் ‘பொக்கிஷம்’ சாயலுடன் இந்தப் படம் இருந்ததையும் இணைத்துப் பார்த்துக் கொண்டேன். ‘பொக்கிஷம்’ படமும் ‘சீதாராமம்’ படமும் காதலி மீது காதலை ஏற்படுத்துகிறதோ இல்லையோ... கடிதங்களின் மீதும் எழுத்துகளின் மீதும் காதலை ஏற்படுத்திவிடும்.

சேரன், எளிமையான படங்களின் நாயகன். மிக கனமான கதைகளைக் கூட சமரசங்களில்லாமல், முக்கியமாக வணிக ஜிகினாக்கள் இல்லாமல், உள்ளது உள்ளபடியே சொல்லக் கூடிய யதார்த்தங்களின் காதலன்!

1965-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி பிறந்த சேரன், தன் படங்களால் நம்மை வெகுவாக ஈர்த்துக்கொண்டுவிட்டார். மூன்று தேசிய விருதுகளும் பல மாநில விருதுகளும் பெற்றவர். 57-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சேரனை, யதார்த்த சினிமாக்களின் சிற்பியை, இயல்பான இயக்குநர் சேரனை வாழ்த்துவோம்!

பிறந்தநாள் வாழ்த்துகள் சேரன் சார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE