75-ம் ஆண்டில், ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி!’

By வி. ராம்ஜி

’தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்றொரு பழமொழி உண்டு. ‘தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்’ என்றும் சொல்லுவோம். ஆனால், அபூர்வ சிந்தாமணியிடம் சென்றால், தலைக்கு வந்தது தலையோடுதான் போகும். தலை தப்பிக்க எத்தனைப் புண்ணியங்கள் செய்திருந்தாலும் கதைக்கு ஆகாது’ என்பதுதான் 1947-ம் ஆண்டில் மிகப்பெரிய பேச்சு. 999 தலைகளை எடுக்கிறாள் அபூர்வ சிந்தாமணி. ஏன் எடுக்கிறாள், யார் சொல்லி எடுக்கிறாள் என்பதுதான் ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி’யின் கதை!

அந்த தேசத்தின் இளவரசி அவள். கலைகளிலும் கல்வியிலும் அவளை அடிச்சுக்க அந்த தேசத்திலும் ஆளில்லை. அடுத்தடுத்த சுற்றுவட்டார தேசங்களிலும் எவருமில்லை. அதேசமயம், இன்னும் கற்றுக்கொள்ள நினைக்கிறாள் இளவரசி. அம்மாவோ ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்கிற டைப். ஆனால் மகராஜாவோ, ‘ஒரு பெண் ஓவியம் தீட்டக்கூடாதா? காவியம் எழுதக் கூடாதா?’ என்றெல்லாம் முற்போக்குவாதியாகத் திகழ்கிறார்.

மந்திரவாதி ஒருவன். அவனுக்கு அஷ்டமாசித்திகளின் அருளும் ஆற்றலும் கிடைக்கவேண்டும். எவராலும் தன்னை வெல்லமுடியாத வரம் வேண்டும் என்று கேட்க, சிவபூதகணம் வந்து நிற்கிறது. தன் லட்சியத்தையும் ஆசையையும் சொல்லுகிறான் மந்திரவாதி. “அபூர்வசிந்தாமணி என்று ஒருத்தி இருக்கிறாள். பேரழகி அவள். அவளின் அழகைக் கண்டு எல்லோரும் மயங்கிவிடுவார்கள். ஆனால் அவளிடம் நீ மயங்கிவிடாமல், சாமர்த்தியமாக அவளைப் பயன்படுத்திக்கொள்’’ என்கிறது சிவபூதம். மேலும், “அவள் மூலமாக ஆயிரம் தலைகளைக் கொய்து யாகம் செய்தால், எட்டுத்திக்கையும் ஆளுகிற சக்தி உனக்குக் கிடைக்கும்’’ என்கிறது.

அதன்படி மந்திரவாதி, அரண்மனைக்குச் செல்கிறான். மன்னரும் இளவரசியும் சந்தித்து வணங்குகிறார்கள். மந்திரவாதியைப் பார்த்ததும், இவரே நம் குரு என முடிவுக்கு வருகிறாள் அபூர்வ சிந்தாமணி. அவளிடம் சில கேள்விகளைக் கேட்கிறான். அதற்குத் தக்க பதில்களைச் சொல்கிறாள். அவளை சிஷ்யையாக ஏற்கிறேன் என்கிறான் மந்திரவாதி.

இந்த நிலையில், அபூர்வ சிந்தாமணியின் தாய்மாமன், அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்று தன் விருப்பம் சொல்லி, சம்மதம் கேட்கிறான். மன்னர், சிந்தாமணியிடம் கேட்கிறார். சிந்தாமணி குருவிடம் கேட்கிறார். உடனே, மந்திரவாதியின் சதித்திட்டம் வேலை செய்கிறது.

“நான் உனக்கு மூன்று கேள்விகளைச் சொல்கிறேன். உன்னை மணக்க வருபவர்களிடம் அந்தக் கேள்விகளைக் கேள். நான் உன் சிம்மாசனத்தின் கீழே உள்ள சுரங்கத்தில் இருந்தபடி கேட்டுக்கொண்டே இருப்பேன். மூன்று கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லிவிட்டால், அவனைத் திருமணம் செய்துகொள். தவறாகப் பதில் சொன்னால், நான் தட்டி சமிக்ஞை செய்வேன். அவன் தலையைக் கொய்துவிடு. இதனால் உன் கலைஞானமும் வித்யா ஞானமும் உலகெங்கும் பரவும்’’ என்று சொல்லி சம்மதிக்கவைக்கிறான்.

மன்னர் உட்பட அனைவரும் மனமின்றி சம்மதிக்கிறார்கள். முதல் ஆளாக அபூர்வ சிந்தாமணியின் தாய்மாமனே வருகிறான். அவனிடம் மூன்று கேள்விகள் கேட்கிறாள். பதில் தெரியவில்லை. அவன் தலையைக் கொய்கிறாள்.

தேசமெங்கும் பக்கத்து தேசங்களெங்கும் இந்த விஷயம் பரவுகிறது. அவள் அழகை அறிந்தவர்களும் அவளின் தேசத்தின் வளங்களை அறிந்தவர்களும் ஒவ்வொருவராக வருகிறார்கள். எவரும் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. தலைகள் துண்டிக்கப்படுகின்றன. ஒன்று... இரண்டு... ஐம்பத்து ஒன்று... ஐநூற்றி ஒன்று என்றெல்லாம் போய்... 999 தலைகளை வாங்கியதில் வந்து நிற்கிறது.

இந்த நிலையில் மற்றொரு தேசத்து இளவரசனுக்கு இந்த விஷயம் சொல்லப்படுகிறது. மேலும், தன் சகோதரர்கள் ஆறுபேரும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாததால்தான் தலை துண்டித்து அபூர்வ சிந்தாமணியால் கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவருகிறது.

தன் நண்பனை அழைத்துக் கொண்டு, மாறுவேடத்தில் ஊரில் வேலைக்குச் சேருகிறான் இளவரசன். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாகி, அபூர்வ சிந்தாமணியின் சகோதரியைப் போல் வளருபவளும் தோழியுமாக இருக்கும் செங்கமலத்தைப் பார்க்கிறான். இருவருக்கும் காதல் மலருகிறது. ஒருகட்டத்தில் ‘தன்னைக் காதலிப்பவன் ராஜகுமாரன்’ என்பதை அறிகிறாள் செங்கமலம். அவனிடமே கேட்கிறாள். அவன் வந்த விஷயத்தைச் சொல்கிறான். அபூர்வ சிந்தாமணி கேட்கிற மூன்று கேள்விகள் என்பதைக் கேட்க, செங்கமலம் சொல்கிறாள். அதற்கான பதில் என்ன என்று கேட்கிறான். கேட்டுச் சொல்கிறேன் என்கிறாள். ஆனால் அபூர்வ சிந்தாமணியிடம் கேட்க, ‘’எனக்கே அந்த பதில்கள் தெரியாது’’ என்கிறாள் சிந்தாமணி. ஆனால், பதில்கள் இன்னின்ன ஊர்களுக்குச் சென்றால், மூன்று கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்று மந்திரவாதி சொன்னதாகச் சொல்கிறாள். இதை செங்கமலம் இளவரசனிடம் சொல்கிறாள்.

உடனடியாக மூன்று ஊர்களுக்கும் செல்கிறான் இளவரசன். பல சோதனைகளைக் கடந்து, அவற்றைத் தெரிந்துகொள்கிறான். அந்த பதிலுக்கு உரிய நபர்களையே சந்திக்கிறான். அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறான். அபூர்வ சிந்தாமணியை சந்திக்கிறான். அவள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்ல, வெலவெலத்துப் போகிறான் மந்திரவாதி.

அந்த மந்திரவாதியைக் கொல்கிறான் இளவரசன். அதுவரை இறந்த 999 பேருக்கும் உயிர் கொடுக்கிறான். எல்லோரும் எழுந்து வருகிறார்கள். முதன் முதலாக இறந்த சிந்தாமணியின் தாய்மாமனையே திருமணம் செய்துகொள்ளும்படி அபூர்வ சிந்தாமணியிடம் சொல்ல, அவர்கள் இணைகிறார்கள். அதேபோல், செங்கமலத்தை மணந்துகொண்டு தன் ஊருக்கு அழைத்துச் செல்கிறான் இளவரசன் என்று படம் இனிதே முடிகிறது.

அபூர்வ சிந்தாமணியின் அப்பாவாக எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி நடித்தார். அபூர்வ சிந்தாமணியைத் தோற்கடிப்பவராக பி.எஸ்.கோவிந்தன் நடித்தார். மாதுரி தேவி, காளி என் ரத்தினம், எஸ்.வரலட்சுமி, சி.டி.ராஜகாந்தம் முதலானோர் நடித்தார்கள். அபூர்வ சிந்தாமணியாக நடித்தவர் எம்ஜிஆரின் மனைவியான வி.என்.ஜானகி.

பாரதிதாசனின் கதை இது. இதற்கு திரைக்கதை அமைத்து படமாக எடுக்கப்பட்டது. புகழ்மிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரித்தது. டி.ஆர்.சுந்தரம் படத்தை இயக்கினார்.

அந்தக் காலத்தில், மிகப்பிரம்மாண்டப் படைப்பாக வெளிவந்து, ரசிகர்களை வியக்கவைத்த படங்களில் இதுவும் ஒன்று. சி.டி.ராஜகாந்தமும் காளி என்.ரத்தினமும் காமெடியில் அதகளம் பண்ணியிருப்பார்கள். அபூர்வ சிந்தாமணி, “நான் கேள்வி கேட்பதற்கு பதில் சொல்லுபவனே மணாளன்’’ என்பது போல, “நான் புள்ளிவைப்பேன். அதை இணைத்து சரியான கோலம் போடுபவனையே கல்யாணம் செய்துகொள்வேன்’’ என்று சி.டி.ராஜகாந்தம் சொல்ல, அவர் வரும் காட்சிகளெல்லாம் படத்தின் கதைக்கு ரிலாக்ஸ் செய்யும் காட்சிகளாகவே அமைந்தன.

‘எனக்குக் கல்யாணம் எனக்குக் கல்யாணம்’ என்று இயக்குநர் பி.வாசுவின் சின்னத்தம்பி படத்தில், ஒரு காமெடி கேரக்டர் வருமே! அதேபோல, சிடி.ராஜகாந்தத்திடம் வந்து, ‘’என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ, என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்று அசட்டுத்தனமான கேரக்டர் வந்து கேட்பதும், ‘’உன் நாக்கால உன் முழங்கையைத் தொடு, கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்பதும் காமெடி பட்டாசுகள்.

‘தடுக்கி விழுந்தா டீக்கடைகளா இருக்கு’, ‘தடுக்கி விழுந்தா ஃபாஸ்ட் ஃபுட் கடைகளா இருக்கு’ என்று சொல்லுவோமே... அதேபோல், படத்தில் தடுக்கி விழாமலேயே சரசரவென பாடல்கள் வந்துகொண்டே இருக்கும். காமெடி பண்ணும் ராஜகாந்தத்திற்கும் காளி என்.ரத்தினத்திற்குமே நான்கைந்து பாடல்கள் இருக்கின்றன என்றால், அபூர்வசிந்தாமணிக்கும் அவளின் தோழிக்கும் நாயகனுக்கும் எத்தனையெத்தனை பாடல்கள் இருக்கும் என கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மூணேகால் மணி நேரம் ஓடும் படம். இடைவேளைக்கு ஒரு கால்மணி நேரம். கிட்டத்தட்ட மூணரை மணி நேரம். நான் திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை தியேட்டரில் வேலை பார்த்தபோது, அந்தத் தியேட்டர் உரிமையாள சகோதர்களில், ராமகிருஷ்ணன் அண்ணன் எனக்கு செம தோஸ்த்து. அங்கிருந்து ஜாடையில் என்னை அழைப்பார். போவேன். “காலைக்காட்சி மட்டும் ஒரு படம் போடணும். ரெகுலர் ஷோவுக்கு ஒரு படம் போடணும். எந்தப் படம் போடலாம்’’ என்று கேட்பார். நான் பார்க்க நினைத்த படங்கள், பார்க்கவே பார்க்காத படங்கள், பலமுறை பார்க்க ஆசைப்படுகிற படங்களையெல்லாம் சொல்லுவேன்.

அப்படித்தான் ’தினமும் காலை 11 மணி காட்சி மட்டும்’ என்கிற பச்சை, ஆரஞ்சு, நீலநிறக்கலர் போஸ்டர்களில் ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி’ வந்தது. ‘பெரிய நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரோ சிவாஜியோ இல்லை. பத்மினியோ சாவித்திரியோ இல்லை. பாடல்கள் அன்றைக்குப் பிரபலமாக இருக்கலாம். ஆனால், இப்போது அந்தப் படத்தின் பாடல்கள் கூட எவருக்கும் தெரியவில்லை என்கிற பயத்துடனே, காலைக்காட்சிக்கு படத்தைப் போட்டோம். முதல் நாள் கூட்டமே இல்லை. இரண்டாம் நாள் கொஞ்சம் வந்தது. மூன்றாம் நாள் கூடியது. நான்காம் நாளிலும் சனி ஞாயிறுகளிலும் பெருங்கூட்டம். கிட்டத்தட்ட 11 காட்சிகளுக்கு மேல் ஓடின.

ஜி.ராமநாதனின் இசையில் எல்லாப் பாடல்களும் முழு கர்நாடக சங்கீதத்தில் அருமையாக அமைந்திருந்தன. ஜானகியின் நடிப்பு வெகுவாக இருந்தது. மந்திரவாதி வருகிற காட்சிகளெல்லாம் பீதியைக் கிளப்பியது இசை. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ஏகத்தும் வசூலைக் கொடுத்தாள் ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி’.

1947-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8-ம் தேதி வெளியானது ‘ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி’. எம்ஜிஆரின் மனைவியும் முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகிக்கு இது நூற்றாண்டு வருடம். அவர் நடிப்பில் வெளியான ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ வெளியாகி, 75 வருடங்களாகின்றன.

’ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி’ படத்தைப் பார்த்துவிட்டு கடந்த தலைமுறையினர் கூட பார்த்து வியந்து, பிரமித்துக் கொண்டாடினார்கள். எண்பதுகளின் இறுதிவரை, தியேட்டர்களில், பழைய படங்களை இரண்டு நாள் மூன்று நாள் ‘கேப்’புக்காகப் போடுவார்கள். ‘புத்தம்புதிய காப்பி’ என்றே விளம்பரப்படுத்துவார்கள். ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு ரிலீஸான படம் மூன்று நாளோ, ஒருவாரமோ, இருபது நாளோ, முப்பது நாற்பது நாளோ ஓடும். அந்தப் படத்தை தியேட்டரில் இருந்து எடுத்துவிட்டால், பிறகு அந்தப் படத்தை அகண்ட திரையில் பார்ப்பது என்பது ‘கொம்புத்தேன்’ கதைதான்! ஒரே மாதத்தில் ஓடிடி-யில் பார்க்கலாம். அடுத்து வரும் பண்டிகை நாளில், ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, தியேட்டருக்கு வந்து சிலமாதங்களே ஆன...’ என்கிற அறிவிப்புடன் படத்தைப் போடுவார்கள்.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி’ போல், ஆயிரமாயிரம் நல்ல படங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் கொஞ்சம் இந்த ஓடிடி தளங்கள் வாங்கி, டிஜிட்டலைஸ்டு செய்து எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்கிற பட்டியலில் இணைத்து, பொக்கிஷமாக வைத்துவிட்டால், ஐம்பது, அறுபது, எழுபது வயதுக்காரர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் புண்ணியமும் கிடைக்கும். இந்தக் கால தலைமுறையினரும், அந்தக் கால படங்கள் எந்தத் தொழில் நுட்ப வசதிகளும் இல்லாமலேயே, எத்தனையெத்தனை ஜாலங்கள் பண்ணியிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும்!

நூற்றாண்டு விழாவையும் ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ படத்தின் 75-வது ஆண்டு விழாவையும் சேர்த்து ஜானகியைக் கொண்டாடுவோம். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு சல்யூட் அடிப்போம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE