நடிகையரின் வாழ்க்கையை, தி.மு. - தி.பி. என்று பிரித்துப் பார்ப்பது சினிமா உலகின் வழக்கம். திருமணத்துக்கு முன்னதாக நாயகியாக வலம் வந்த நடிகைகளை, திருமணத்துக்குப் பிறகு நாயகியாக ஏற்க மனம் வராது, சினிமாவுக்கு. அப்படியே வந்தாலும் ரசிகர்கள் பழைய கிரீடத்தைச் சூட்டமாட்டார்கள்.
திருமணத்துக்குப் பின், நடிப்புக்கு குட்பை சொன்ன நடிகைகளும் உண்டு. ஆனால், திருமணம் செய்துகொண்டு, கையில் கைக்குழந்தையும் வைத்துக் கொண்டு, முதல் படத்தில் நடிக்கச் சென்றார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. பெயருக்கு முன்னதாக, ஏதேனும் ஒரு பெயர் வந்து நிறைய நடிகர்களுக்கும் நடிகையருக்கும் அடையாளமாகவே மாறிப்போய்விடும். அப்படித்தான் ஜானகி, தன் முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், படத்தின் பெயரும் அவர் பெயருடன் இணைந்துகொண்டது. என்.டி.ஆருடன் நடித்த அந்தப் படம், ‘செளகார்’ அடைந்த வெற்றியால், ஜானகி, செளகார் ஜானகி என்றானார்.
ஜானகிக்கு ஆந்திரம்தான் பூர்விகம். மிகச்சாதாரண குடும்பம்தான் இவர்களுடையது. ஆல் இண்டியா ரேடியோவில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு 14 வயது. அந்தக் குரலில் தனித்துவம் இருந்தது. ஆளுமை தெரிந்தது. குரலால் ஈர்க்கப்பட்ட ஆந்திரத் திரையுலகம், ஜானகியின் வீடு தேடி வந்தது. நடிக்கும்படி கேட்டது. வீடு பதறியது. முடியாது என மறுத்தது. ‘’இது சரிப்பட்டு வராது. கல்யாணம் பண்ணி வைச்சிடவேண்டியதுதான்’’ எனும் முடிவுக்கு வந்தது. திருமணமும் நடந்தது. ஆனால், இந்தக் காலகட்டங்களில் புது வரவாக வயிற்றில் குழந்தை வளர, குடும்பத்தில் வறுமை ஏற்கெனவே பிறந்து வளர்ந்திருந்த வறுமை வீடு முழுக்க வியாபித்திருந்தது. குழந்தையும் பிறந்தது.
வேறு வழி தெரியாமல், எந்தக் கம்பெனி நடிக்க அழைத்ததோ, அந்தக் கம்பெனிக்கு கையில் குழந்தையுடன் சென்றார் ஜானகி. வாய்ப்பு மறுக்கப்பட்டது. தன் சூழல்களைச் சொல்லி விளக்கினார். மனமிரங்கிய நிறுவனம், தனது கிளை நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியது. படப்பிடிப்புத் தளத்தில் குழந்தை ஒரு பக்கம் இருக்க, ஜானகி இன்னொரு பக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் திரையில் ரசிக்கப்பட்டன. என்.டி.ஆருக்கு பெயர் வாங்கித் தந்த முக்கியப் படமாகவும் முதல் ஜோடி எனும் பெருமையும் ஜானகிக்குக் கிடைத்தது. ‘செளகார்’ படம்தான் செளகார் ஜானகியாக்கியது.
இதையடுத்து வரிசையாக தெலுங்கில் படங்கள் வந்தன. வெற்றி பெற்றன. குழந்தை வளரவளர, திரையுலகிலும் வளர்ந்தார் செளகார் ஜானகி. குடும்பத்தில் தாண்டவமாடிய வறுமை, தெறித்து ஓடியது.
தமிழிலும் படங்கள் கிடைத்தன. திருமணம் செய்துவிட்டு, குழந்தையும் பெற்றுக்கொண்டு, படத்தில் நடிக்கத் தொடங்கிய போது, செளகார் ஜானகிக்கு 18 வயதுக்குள்தான்! மளமளவெனப் படங்கள் வந்தன.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்கும் துணிச்சலும் திறனும் அவருக்குள் சுடர் விட்டு ஜொலித்தன. நாகேஸ்வர ராவுடன் நடித்தார். தமிழுக்கும் வந்தார். எம்ஜிஆர்., சிவாஜி படங்களிலும் ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். படங்களிலும் நடித்தார். இரண்டு நாயகிகள் சப்ஜெக்ட்டில் பெரும்பாலும் தியாகம் செய்யும் கதாபாத்திரமே இவருக்கு வழங்கப்பட்டன. ஆனால், தன் நடிப்பால் அந்தக் கேரக்டருக்கு மாறுபட்ட வண்ணங்கள் சேர்த்தார்; பிரகாசித்தார்.
’பார் மகளே பார்’, ‘பச்சை விளக்கு’, ‘பார்த்தால் பசி தீரும்’ என வரிசையாக படங்கள் வந்து ஜெயித்துக் கொண்டே இருந்தார். ‘பாக்கியலட்சுமி’ படத்தில் இவரின் நடிப்பைக் கண்டு உருகினார்கள் ரசிகர்கள். ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ என்று சிரித்த முகத்துடன் இவர் பாடிக்கொண்டே தன் துக்கத்தைப் பகிர்ந்து பாடியதை, விக்கித்துப் பார்த்தார்கள்.
எம்ஜிஆருடன் நடித்தபோதும் செளகார் ஜானகிக்குப் பெயர் சொல்லும் படங்கள் அமைந்தன. நடிப்பில் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆனால் அந்த ஸ்டைல், கேரக்டருக்குத் தக்கபடி உருமாறிக் கொண்டே இருக்கும். அதுதான் செளகாரின் ஸ்டைல்.
பொதுவாகவே, சினிமாவில் ஒரு நாயகன் அல்லது நாயகிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர கார் அனுப்பிவைப்பார்கள். அல்லது காருக்கு பெட்ரோலுக்குப் பணம் தருவார்கள். உதவியாளருக்கு சம்பளம், உணவு, தனி மேக் அப் உமனுக்கு சம்பளம், பேட்டா முதலானவற்றை தயாரிப்பாளர்களின் தலையில் சுமத்துவார்கள். ஆனால், செளகார் தன் காரில்தான் வருவார். பெட்ரோலுக்குப் பணம் வாங்கமாட்டார். தன் உதவியாளருக்கு தானே சம்பளம் தருவார். ஷூட்டிங் எங்கு நடந்தாலும், செளகாருக்கும் இன்னும் நான்கைந்து பேருக்குமான, டிரெடிஷனலான உணவு வகைகள் சுடச்சுட மதியத்தில் வந்துவிடும். பேசிய சம்பளத்தில் கறாரெல்லாம் காட்டமாட்டார். கடைசி நேரத்தில், ‘கொஞ்சம் குறைத்துக்கொண்டால் தேவலை’ என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார். ஒருவேளை, சரியாக படம் ஓடவில்லையென்றால், அடுத்த படத்தை அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கும்போது, ’’போன படத்துச் சம்பளத்திலேருந்து குறைச்சே கொடுங்க. அந்த நஷ்ட பாரத்தை நானும் கொஞ்சம் ஏத்துக்கறேன்’’ என்று செளகார் ஜானகியே முன்வருவார். அதுதான் செளகார் மனசு!
’உயர்ந்த மனிதன்’ படத்தில், மிகப்பெரிய செல்வந்தரின் மகளாகவும் அதேபோல் கோடீஸ்வரக் கணவரின் மனைவியாகவும் ஒரு மிடுக்குடன், ஒரு தோரணையுடன், ஒரு பந்தாவுடன், கொஞ்சம் அன்பும் நிறைய கறாருமாக சௌகார் நடித்திருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில்ல். தன் தங்கை சரோஜாதேவி, தவறானவனை விரும்புகிறாள் என்று துடிப்பதாகட்டும், அவனிடம் வெடிப்பதாகட்டும், கணவரின் மன உளைச்சல் கண்டு வருந்துவதாகட்டும் அத்தனை இயல்பாக நடித்திருப்பார். ஒருகட்டத்தில், தன் கணவனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது எனும் விவரம் தெரியும்போது, கணவரை மன்னிப்பது, கணவரின் நண்பரிடம் மன்னிப்புக் கேட்பது, முதல் மனைவியை அக்காவாக ஏற்றுக்கொள்வதும் என கடைசிப் பத்து நிமிடங்களில், மொத்த உணர்வுகளையும் சட்சட்டென்று கொட்டிக்கொடுத்து, நடிப்பை வழங்கியிருப்பார்.
இயக்குநர் கே.பாலசந்தரிடம் இரண்டு விஷயம் உண்டு. ஒன்று... நிறையப் பேரை அறிமுகப்படுத்துவார். தமிழ்த் திரையுலகில், அவர் அறிமுகப்படுத்தியவர்களே அதிகம். இன்னொன்று... ஏற்கெனவே நடிக்க வந்து, தன் இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தவர்களை ஒருபோதும் விடவும் மாட்டார். தொடர்ந்து பயன்படுத்தியும் வருவார். தன் நாடகங்களில் அனுபவத்துக்காகவும் கலைக்காகவும் நடித்து வந்த செளகார் ஜானகிக்கு, கே.பாலசந்தர் தன் முதல் படமான ‘நீர்க்குமிழி’ படத்தில் கண்ணியம் மிக்க டாக்டர் கேரக்டரைக் கொடுத்தார். அடுத்து ‘நாணல்’ படத்தில் இயக்குநரும் நடிகருமான கே.விஜயனுக்கு மனைவியாக, சிறைக்குற்றவாளிகளிடம் சிக்கிக்கொண்டு பயமும் பீதியுமாக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
செளகார் ஜானகிக்கு சோகம் தான் வரும் என்பதையெல்லாம் உடைக்கும் வகையில், ’எதிர்நீச்சல்’ படத்தில் காமெடியில் ராஜாங்கமே பண்ணியிருப்பார். பாலசந்தரின் இயக்கத்தில், ‘பாமாவிஜயம்’ படத்தில் மட்டும் என்னவாம். இந்தி தெரியும் என்பதை எவ்வளவு அலட்டலாகவும் ஸ்டைலாகவும் வெளிப்படுத்துவார், நினைவிருக்கிறதா?
‘காவியத்தலைவி’, ‘இரு கோடுகள்’ என்று இவர் நடித்த படங்களில் எல்லாம் நாயகிக்கு மிக முக்கியத்துவம் தந்த, மிக மிக முக்கியமான படங்கள். ‘ஒளிவிளக்கு’ படத்தில், எம்ஜிஆருக்கு ஜெயலலிதாதான் ஜோடி என்றாலும் செளகார் ஜானகியின் கேரக்டர்தான், எம்ஜிஆரையே நல்லவராக்கும்; திருத்தும்; புதுப்பாதையில் பயணிக்க ஆணிவேராக இருக்கும்.
நியாயப்படி டைட்டிலில், எம்ஜிஆருக்கு அடுத்து செளகார் ஜானகியின் பெயரையும் அதன் பிறகு ஜெயலலிதாவின் பெயரையும் போடுவதாகத்தான் ஜெமினி நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், இடையே என்ன நடந்ததோ... எம்ஜிஆருக்கு அடுத்து ஜெயலலிதாவின் பெயரைப் போடும்படி உத்தரவு வந்தது. அதன் பிறகுதான் செளகார் ஜானகியின் பெயர் போடப்பட்டது. இதை வருத்தத்துடன் செளகாரிடம் ஜெமினி நிறுவனம் முன் கூட்டியே சொல்லி, மன்னிப்பும் கேட்டது.
படத்தில் இவர் அணியும் ஆடைகள் எல்லாமே பெரும்பாலும் இவருடையதுதான். கதைக்கு ஏற்றார்போல, காட்சிக்குத் தகுந்தது போல, ஆடைகளை செலக்ட் பண்ணி எடுத்து வருவார்.
‘புதிய பறவை’ திரைப்படம். சிவாஜியின் சொந்தப் படம். இயக்குநர் தாதா மிராஸிக்கு செளகார் கதாபாத்திரத்துக்கு வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்ய விருப்பம். ஆனால், சிவாஜியோ, ‘’இந்தக் கேரக்டருக்கு செளகாரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. அவர்தான் நடிக்கவேண்டும். அவர் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும்’’ என்று உறுதியாக இருந்தார்.
அதன்படி, சிங்கப்பூர் கிளப்புகளில் பாடகியாகவும் சிவாஜிக்கு மனைவியாகவும் குடிகாரப் பெண்ணாகவும் பிறகு சிவாஜியை ஏமாற்றுகிற இன்னொரு செளகாராகவும் வந்து கலக்கி, மிரட்டி, நம்மையும் ஆவேசப்படச் செய்து, அப்ளாஸ் அள்ளியிருப்பார் சௌகார். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலுக்கு உண்டான கருப்பு நிற புடவை அவருடையதுதான். அவர் ஐடியாதான். இரண்டே மணி நேரத்தில் அந்தப் புடவைக்கு எம்பிராய்டரிங் போட்டுக்கொண்டு வந்து நடித்ததுதான் செளகாரின் டெடிகேஷன்; இன்வால்வ்மென்ட்!
முதல்வர் எம்ஜிஆர் உடலநலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டபோது, அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது உலக சாதனைதான். உலகில் வேறெங்கும் நடக்காததுதான்! ‘ஒளிவிளக்கு’ படத்தில் கதைப்படி விபத்தில் அடிபட்டு படுத்தபடுக்கையாகக் கிடக்கும் எம்ஜிஆரின் நலனுக்காக, ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்’ என்ற பாடலை சௌகார் உருகிப் பாடுவார். அந்தப் படம் வெளியான போது ஒலித்ததைக் காட்டிலும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஆருக்காக, தமிழகமெங்கும் அதிகமாக ஒலித்தது அந்தப் பாடல். தியேட்டரில் யார் நடித்த படம் ஓடிக்கொண்டிருந்தாலும், எடுத்ததும், எம்ஜிஆருக்குப் பிரார்த்தனை செய்யும்விதமாக, இந்தப் பாடல் காட்சியைத்தான் ஒளிபரப்பினார்கள்.
தமிழிலும் தெலுங்கிலும் தனித்துவம் கொண்ட நடிகையாகவே பார்க்கப்பட்டார் செளகார் ஜானகி. கே.பாலசந்தர் இயக்கிய ‘தில்லுமுல்லு’ படத்தில், தேங்காய் சீனிவாசனைத் தவிர அந்தக் கேரக்டருக்கு எவரும் உயிர் கொடுக்கவே முடியாது என்பது போலவே, செளகார் ஜானகியைப் போலவே எவரும் நடித்துவிடவும் முடியாது என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டாடின. அறுபதுகளின் மத்தியில் செளகாரை நடிக்க வைத்த பாலசந்தர், எழுபதுகளிலும் நடிக்கவைத்தார். எண்பதுகளிலும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் அற்புத ஜோடியாக செளகாரையும் பூர்ணம் விஸ்வநாதனையும் காட்டி, ரோல்மாடல் தம்பதியாக நம் மனதில் நிற்கச் செய்திருப்பார்.
ஏவி.எம். தயாரிப்பில், இயக்குநர் விசுவின் இயக்கத்தில், நடிகை லட்சுமியின் பண்பட்ட நடிப்பில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில், மனோரமாவையும் ‘கண்ணம்மா... கம்முன்னு கிட’ வசனத்தையும் மறக்கவே முடியாது, நம்மால்! வீட்டு வேலைக்காரப்பெண்மணியாக மனோரமா ஆகச்சிறந்த நடிப்பைத் தந்திருப்பார். தெலுங்கில், ‘சம்சாரம் அது மின்சாரம்’ எடுக்கப்பட்ட போது, மனோரமா நடித்த கேரக்டரில் அங்கே செளகார் ஜானகி வெளுத்துவாங்கினார். ‘அட, நம்ம செளகார் நம்ம செளகார்’ என்று ஆந்திரத் திரையுலகமே அப்படியொரு பெருமிதத்துடன் பூரித்துப் போனது.
‘ஹேராம்’ படத்தில் சிறிய காட்சியில் நடித்திருந்தார் செளகார் ஜானகி. அப்போது அவருக்கு உடல்நலமில்லை. ஆபரேஷன் செய்யவேண்டும். அந்தசமயத்தில், கமலின் மேனேஜர், ஆஸ்பத்திரிக்கு வந்து, படத்தில் நடித்ததற்கான முழுத்தொகையும் கொடுத்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறார். அதேபோல, ரஜினியின் வாழ்விலும் செளகாருக்கு தனியிடம் உண்டு. ‘தில்லுமுல்லு’ படத்தின் வீடு, செளகாருடையதுதான். அப்போதுதான் ரஜினியைச் சந்திக்க லதா வந்தார். பேசினார். காதல் மலர்ந்தது. அந்தக் காதலை செளகாருக்குச் சொன்னார் ரஜினி. இரு தரப்பிலும் பேசினார் செளகார்.
செளகார் ஜானகிக்கு மாநில விருதுகள், பட்டங்கள் என ஏராளமான கெளரவங்கள் கிடைத்திருக்கின்றனு! இத்தனை வயதிலும் ரசித்து ரசித்து அவரே சமைக்கிறார். ‘இன்னும் அந்த ருசியும் சுவையும் மாறவே இல்லை’ என்று வியக்கிறார்கள் உறவினர்களும் நண்பர்களும்!
அவருக்குப் போன் செய்தால், உடனே எடுத்துவிடுவார். அல்லது அடுத்த ஒருமணி நேரத்தில், ‘’வணக்கம், கூப்பிட்டிருந்தீங்களே... யாருங்க?’’ என்று கேட்டுவிடுவார்.
கரோனா காலத்துக்கு முன்பிருந்தே, அவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டுக்கொண்டே இருந்தேன். ‘’கண்டிப்பா ராம்ஜி சார். நான் பெங்களூருலதானே இருக்கேன். சென்னைக்கு வரும்போது, நிச்சயம் தரேன்’’ என்று சொல்லுவார். பிறகு, ’’பாருங்க, பேரக்குழந்தைகள், பழைய தோழிகள், நண்பர்கள்னு வீடு முழுக்க மனிதர்கள்தான். மன்னிக்கணும் ராம்ஜி சார். அடுத்த முறை தரேனே ப்ளீஸ்’’ என்பார். ‘’சார்லாம் வேணாம்மா... உங்க பையன் மாதிரி நான். பேர் சொல்லியே கூப்பிடுங்கம்மா’’ என்று சொன்னால், ‘’அது அப்படியே பழக்கமாயிருச்சு. ஷூட்டிங்ல இருக்கற டைரக்டர்லேருந்து லைட்மேன்ஸ் வரைக்கும் ‘சார்’ சொல்லியோ, ‘அண்ணா’ சொல்லியோ கூப்பிட்டே பழக்கமாயிருச்சு. இத்தனை வயசுக்குப் பிறகு மாத்திக்கமுடியுமா தெரியலையே...’’ என்று வெள்ளந்தியாகச் சிரிப்பார்.
1931-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பிறந்த செளகார் ஜானகிக்கு, 91-வது பிறந்தநாள். சகல ஆரோக்கியத்துடனும் அதே உற்சாகத்துடனும் அவர் இன்னும் இன்னும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ, வாழ்த்துவோம்!
வாழ்த்துகள் செளகார் அம்மா!