சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணியை நிறுத்தி நீர்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் மூலக்காடு, கோட்டையூர், பண்ணவாடி, கொளத்தூர் உள்ளிட்ட 4 இடங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, இந்தப் பகுதியில் 1 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடந்து வந்தது. டிப்பர் லாரியில் மண் எடுக்க அனுமதி மறுத்த நிலையில், டிராக்டர் மூலம் விவசாயிகள் மண் வெட்டி எடுத்து வந்தனர்.
இதனிடையே, கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 5 அடி அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், ஒரு சில இடங்களில் அனுமதித்த இடத்தை தவிர்த்தும் மண் அள்ளிச் சென்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 53 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், மதியம் 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வண்டல் மண் அள்ளும் பணியில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, இன்று காலை முதல் மண் எடுப்பதை நிறுத்தி நீர்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நீர்த்தேக்க பகுதியில் உள்ள 4 இடங்களிலும் இன்று காலை முதல் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
» வைரலாகும் மேயர் பிரியாவின் ட்வீட்... ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
» முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்ட வரையாடு மரணம்!
இதனிடையே, இன்று காலை வண்டல் மண் எடுக்க வந்த டிராக்டர்களை அதிகாரிகளும் போலீஸாரும் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் மண் எடுக்க வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து, வண்டல் மண் எடுப்பதற்காக யாரும் உள்ளே செல்லாத வகையில் நீர்வளத்துறை அதிகாரிகளும் போலீஸாரும் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.