ஏதேனும் சிறியதான வழக்கில் குற்றம்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால், ‘’இரண்டு மாதங்களுக்கு கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்கவேண்டும்’’ என்றும் ’’மக்கள் அன்றாடம் புழங்குகிற பார்க் முதலான இடங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்’’ என்றெல்லாம் நீதிபதிகள் இன்றைக்கு வினோதமான தண்டனைகளைத் தருகிறார்கள். இப்படியொரு விஷயத்தை, 1972-ம் ஆண்டிலேயே தீர்ப்பாக வழங்கிய சினிமா இருக்கிறது. ‘இந்த தண்டனையே உண்மையான நீதி’ என்பதை உணர்த்தியதுதான் ‘நீதி’ திரைப்படம்.
லாரி டிரைவர் ராஜா நல்லவர்தான். ஆனால், குடித்துக் கொண்டே இருப்பார். குடித்துக் கொண்டே லாரி ஓட்டுவார். ஒருநாள் வழியில்... தவறான தொழில் செய்யும் வீட்டுக்குச் சென்று, கும்மாளமிட்டுவிட்டு, பிறகு மீண்டும் லாரியை எடுக்கிறார். பாட்டிலைத் திறக்கிறார். குடிக்கிறார். தூக்கமின்மையாலும் போதையாலும் கண்மண் தெரியாமல் லாரியை ஓட்டிச் செல்கிறார்.
அப்போது, பனியும் கூடியிருக்கிறது. வழியில் சென்றுகொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது மோதுகிறார். இறங்கி வந்து பார்த்தால் அவர் இறந்துகிடக்கிறார். தன் குற்றத்தை உணர்ந்து கூனிக்குறுகி நிற்கிறார் ராஜா. போலீஸ் கைது செய்கிறது. நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. விசாரணையில், நடந்ததை ஒப்புக்கொள்கிறார் ராஜா.
விவசாயி மீது வண்டியை விட்டு மோதிக் கொன்றதற்காகவும் மது போதையில் வண்டி ஓட்டியதற்காகவும் இரண்டு ஆண்டு தண்டனை தரவேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக, அந்த நீதிபதி, விவசாயிக் கணவரை இழந்து நிற்கும் விதவை சீதா, விவசாயியின் சகோதரி, விவசாயியின் குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட தந்தை, பார்வையில்லாத தாயார் ஆகியோர் ஆதரவின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால், அந்தக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்றும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து, அவர்களுக்காக உழைக்கவேண்டும் என்று புரட்சியான தீர்ப்பை வழங்குகிறார்.
ஆனாலும் அவர் கைதிதான். குற்றவாளிதான். அவரை கண்காணிக்க, தப்பிச் செல்லாமல் இருக்க, காவலும் போடப்பட்டிருக்கிறது. வேண்டாவெறுப்பாக அவர்களின் வீட்டுக்குச் செல்கிறார் ராஜா. அவர்கள் அனைவரும் ராஜாவை வெறுக்கிறார்கள். ஒதுக்குகிறார்கள். புறக்கணிக்கிறார்கள். வீட்டு வாசலில் ஒண்டிக்கொள்கிறார் ராஜா. அதைத் தாண்டி வீட்டுக்குள் வர அவருக்கு அனுமதி மறுக்கிறார்கள். அவரும் இதையெல்லாம் சட்டைபண்ணாமல் அவர் பாட்டுக்கு ஆரம்பத்தில் ஜாலியாகத்தான் இருக்கிறார்.
போகப்போக, அந்த வீட்டுக் குடும்பச் சூழல் அவரை உறுத்துகிறது. மனம் கனத்துப் போகிறார் ராஜா. ஆரம்பத்தில் அங்கிருந்து தப்பிச் செல்லப் பார்க்கிறார். போலீஸ் பிடித்துவிடுகிறது. ஒருபக்கம் தப்பித்தால் போலீஸ் பிடிக்கிறது. இன்னொரு பக்கம், மொத்த வீட்டாரும் ஒதுக்கி அவமானப்படுத்துகிறார்கள். இந்தநிலையில், அந்தக் குடும்பத்தின் நிலை கண்டு, அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறார்.
அந்தக் குடும்பத்துக்கு விளைநிலம் ஒன்று இருக்கிறது. அந்த நிலத்தில் வேலை செய்ய குடும்பத்தலைவன் இல்லாத நிலை. இயற்கை விவசாய முறையில் பயிர் செய்ய நிலத்தில் களமிறங்குகிறார் ராஜா. அதை அந்தக் குடும்பம் எதிர்க்கிறது. அதையெல்லாம் கடந்து, நிலத்தில் வேலை செய்கிறார்.
அந்த ஊரில், சிறுவர் சிறுமிகளுக்கு பயாஸ்கோப் காட்டி பிழைப்பு நடத்தும் ராதாவைச் சந்திக்கிறார் ராஜா. இருவரும் பார்த்துக்கொள்ள, அங்கே மலருகிறது காதல். ராஜாவின் நல்ல மனதைப் புரிந்துகொண்டு, அவருக்கு உதவியாக இருக்கிறார் ராதா.
இந்தநிலையில், அந்த விளைநிலத்தை, உள்ளூர் பணக்காரர், அபகரிக்க முயலுகிறார். தவிர, இறந்துவிட்ட விவசாயியின் சகோதரிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் வதந்தி கிளப்புகிறார். அந்த ஊரில், இப்படி பலபேருடைய நிலத்தை அந்த ஆள் அபகரித்து வைத்திருப்பது தெரியவருகிறது ராஜாவுக்கு. போலீஸ் அதிகாரியின் உதவியுடன், விவசாயி குடும்பத்துக்கான நிலத்தையும் மீட்டு, விளைச்சல் செய்து அதிக லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறார் ராஜா. அதேசமயம், ஊர்மக்களின் நிலங்களையும் பணக்கார முதலையிடம் இருந்து மீட்டுக் கொடுக்கிறார்.
பிறகு, ராதாவின் குடிகாரத் தாத்தா தற்செயலாக இறக்க, அது ராஜாவின் தலையில் பழியாக வந்துவிழுகிறது. கைதாகிறார். அதேசமயம் நிலையையும் சூழலையும் விளக்கிச் சொல்கிறார் ராஜா. இந்தக் கட்டத்தில் ஊரின் செல்வந்தர், நிலத்தில் விளைந்த பயிரை எரித்து நாசம் செய்கிறார். ராதாவைக் கடத்துகிறார். விவசாயி மனைவியான விதவையையும் சீரழிக்க முனைகிறார். அப்போது காவல்துறையிடம் இருந்து தப்பி வந்து அனைவரையும் ராஜா காப்பாற்றுகிறார். அவரது நல்ல குணத்தை ஊர் புரிந்துகொள்கிறது. விவசாயியின் குடும்பமும் உணர்ந்துகொள்கிறது.
தண்டனைக் காலம் முடிகிறது. ‘இனி உனக்கு தண்டனை தேவையில்லை’ என்கிறார்கள். ராஜாவும் அந்த ஊரிலிருந்து கிளம்பத் தயாராகிறார். ஆனால், விவசாயி குடும்பமும் ஊரும் அவரை விட மறுக்கிறது. ‘போகக்கூடாது’ என தடுக்கிறது. இறுதியில், ராதாவைத் திருமணம் செய்துகொண்டு, அந்த ஊரில் அந்தக் குடும்பத்தில் ஒருவராக புது வாழ்க்கையைத் தொடங்குகிறார் ராஜா என்பதுடன் முடிகிறது ‘நீதி’ திரைப்படம்.
நாயகனின் பெயர் ராஜா என்றால் நாயகியின் பெயர் ராதா என்றால், படத்தைத் தயாரித்தவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி என்பதுதான் நமக்குத் தெரியுமே! விவசாயி மனைவியாக செளகார் ஜானகி நடித்தார். ராஜாவாக சிவாஜி. ராதாவாக ஜெயலலிதா. கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், காந்திமதி, எஸ்.வி.சுப்பையா, ஆர்.எஸ்.மனோகர், எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, சந்திரபாபு, வி.நாகையா, சிஐடி சகுந்தலா என பலரும் நடித்தார்கள்.
1971-ம் ஆண்டு வெளிவந்த ‘துஷ்மன்’ எனும் இந்திப்படத்தின் தமிழ் ரீமேக் இந்தப் படம். அநேகமாக, சிவாஜி ஒரே காஸ்ட்யூமில், நீலக்கலர்ச் சட்டையுடன் படம் முழுக்க வருவார். கவியரசர் கண்ணதாசன் பாடல்கள். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை.
’குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது/ கும்பகோணத்தில் மாமாங்கம் நடக்குது/ குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது/ கும்பகோணத்தில் மாமாங்கம் நடக்குது/ தூத்துக்குடியில் முத்துக்குளிக்கிற காட்சியை பாருங்க/ இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க/ சின்னப் பொண்ணு கையில் காசப் போடுங்க’ என்று ‘ஓடுது பார்’ என்ற பாடலை பி.சுசீலா பாடியிருப்பார்.
’வங்காளத்தில் சேனைப்போகும் வேகம் பாருங்க/ இந்திராகாந்தி அங்கே பேசும் மேடையை பாருங்க/ காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க/ கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க/ காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க/ கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க/ சந்திர மண்டல கப்பல் போகுது/ தத்துவம் பாடும் சிப்பிகள் ஆடுது/ மந்திரி சபைகள் ஒவ்வொரு நாளும் மாறுது பாருங்க/ இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க/ சின்னப் பொண்ணு கையில் காசப் போடுங்க’ என்று எழுதினார் கவிஞர்.
’பிறந்த நாளில் தலைவர் போடும் போஸ்டர் பாருங்க/ போஸ்டர் போடும் வேலைதனிலே மாஸ்டர் பாருங்க/ ஜெயித்தவங்க எம்எல்ஏவின் சிரிப்பை பாருங்க/ ஜெயித்த பின்னே கட்சி மாறும் அழகைப் பாருங்க/ என்றெல்லாம் எழுதினார் கண்ணதாசன்.
’மாப்பிள்ளையைப் பாத்துக்கடி மைனாக்குட்டி’ என்ற பாடல் டப்பாங்குத்துப் பாடலாக செம ஹிட்டடித்தது.
’மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி/ மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி/ எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு நைசா தட்டி/ கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ/ உன் கோட்டையிலே எனக்கும்
ஒரு மெத்தை இல்லையோ/ கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ/ உன் கோட்டையிலே எனக்கும் ஒரு மெத்தை இல்லையோ
’சாராயம் போய் விழுந்தா ஆராய புத்தி இல்லை/ யாரோடும் பேசுதடி யாரோடும் பேசுதடி ஏதேனும் கேட்குதடி/ மணக்கும் சின்னக்குட்டி/ இனிக்கும் வெல்லக்கட்டி/ அணைச்சு என்னைக் கட்டி/ குடுத்தா என்ன குட்டி/ உனக்கும் வெட்கமில்லே/ எனக்கும் துக்கமில்லே/ போதை பொல்லாதடி’ என்று கெட்ட ஆட்டம் போட்டு அசத்தினார் சிவாஜி.
’எங்களது பூமி காக்க வந்த சாமி/ எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி’ என்ற பாடலும் இனிமையான பாடலாக அமைந்தது.
படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டான பாடல் இதுதான்...
‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்/ இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்/ நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்/ இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்/ ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே/ ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே/ நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை பேசவில்லையே/ போதை வந்தபோது புத்தியில்லையே/ புத்தி வந்தபோது நண்பரில்லையே’ என்று சாதாரணமாக சொல்லிக் கொண்டு பிறகு தத்துவத்துக்குள் இறங்கிவிடுவார் கண்ணதாசன்.
’முதல் வாழ்வு வாழ ஒரு வீடு/ மறு வாழ்வு வாழ மறு வீடு/ இடைக்கால பாதை மணல் வீடு/ எது வந்த போதும் அளவோடு/ போதை வந்தபோது புத்தியில்லையே/ புத்தி வந்தபோது நண்பரில்லையே
’கடவுள் என் வாழ்வில் கடன்காரன்/ கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்/ ஏழைகள் வாழ்வில் விளையாடும்/ இறைவன் நீ கூட குடிகாரன்/ போதை வந்தபோது புத்தியில்லையே/ புத்தி வந்தபோது நண்பரில்லையே’ என்று டி.எம்.எஸ். ஸ்டைலாகப் படியிருப்பார்.
படம் முழுக்க சிவாஜியின் நடிப்பு புதுமாதிரியாக இருக்கும். சில சமயம் பார்த்தால் இரக்கமே இல்லாதவர் போல் நடந்துகொள்வார். சில தருணங்களில் கோபமாவார். சில நேரங்களில் அந்தக் குடும்பத்தின் வெறுப்பைப் பார்த்து நொந்துகொள்வார். ஒருகட்டத்தில் அனைத்தையும் சகித்துக்கொண்டு அடுத்தடுத்து வேலைகளில் இறங்கும் போது மொத்த முகபாவம், உடல்மொழி என அப்படியே உருமாறியிருப்பார். ஜெயலலிதாவுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பார்.
செளகார் ஜானகியின் நடிப்பு, அற்புதம். சுப்பையாவின் நடிப்புக்கும் காந்திமதியின் நடிப்புக்கும் சொல்லவேண்டுமா என்ன? மற்ற நடிகர்களும் தங்களின் பங்களிப்பை செம்மையாகவே செய்திருப்பார்கள். மனோகரின் வில்லத்தனம், நமக்கே ஆத்திரமும் கோபமும் அள்ளிக்கொண்டு வரும்.
சிவாஜியின் நடை, அவர் பார்க்கும் பார்வை, நடந்து வருகிற ஸ்டைல்... என அப்படியொரு கதாபாத்திரத்தில் அழகாகப் பொருத்திக் கொள்வதெல்லாம் அவருக்கு சர்வசாதாரணம். அசால்ட்டாக நடித்து அசத்தியிருப்பார். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான, சி.வி.ராஜேந்திரன் அழகாக இயக்கியிருந்தார்.
1972-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சில தியேட்டர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. நல்ல வசூலைக் குவித்து சாதனை படைத்தது. கே.பாலாஜி தயாரித்து சிவாஜி நடித்த படமென்றாலே, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த, ‘நீதி’ படம் வெளியாகி 50 வருடங்களாகின்றன.