சுருளிராஜன்: கஞ்சத்தனமில்லாமல் நகைச்சுவை தந்த காமெடிக் குரலோன்!

By வி. ராம்ஜி

ஒரு படத்துக்கு நாயகன்தான் மிக முக்கியமானவர். அதாவது கதைக்கு அவர்தான் அவசியம். கதை என்பதே அவருக்கானதாகத்தான் இருக்கும். அவரைச் சுற்றியே இருக்கும். அதனால்தான் அவர் கதாநாயகன். ஆனால், அந்த ஹீரோவுக்கு ஒரு துணைக் கதாபாத்திரத்தை படத்தில் எப்படியேனும் நுழைத்து விடுவார்கள். அந்தத் துணைபாத்திரம் என்பது கூடுமானவரையில், நகைச்சுவையாக, ஜாலியாக, கலாட்டாவாக, கிண்டலாக, கேலியாக ஏதேனும் ஒவ்வொரு டைமிங்கிற்குத் தக்கபடி எதையாவது சொல்லி, கதையின் ஓட்டத்தை இன்னும் வேகப்படுத்தும். அல்லது சோகமும் துக்கமுமாக இருக்கிற கதைகளுக்குள் ஒரு ரிலாக்ஸ் தரும். அதனால் தான் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் காமெடி நடிகர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இப்படி, ஜெய்சங்கர், ஜெய்கணேஷ், கமல், ரஜினி, விஜயகுமார் உள்ளிட்டோருடன் எழுபதுகளில் மிகப்பெரிய ரவுண்டு வந்து, நம்மை குபீரெனச் சிரிக்கவைத்த தனித்துவ காமெடி நாயகன் சுருளிராஜன்!

தேனி மாவட்டத்தில் சுருளி அருவியும் அதன் அருகில் உள்ள சுருளியாண்டவர் கோயிலும் பிரசித்தம். பெரியகுளத்தில் 1938-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சங்கராந்தி என்ற பொங்கல் திருநாளில் பிறந்த தன் மகனுக்கு சங்கரலிங்கம் என்று பெயரிட்டார் தந்தை பொன்னையா பிள்ளை. சுருளியாண்டவர் தான் இவர்களுக்கு குலசாமி. பண்ணை ஒன்றில் கணக்கெழுதும் வேலை அப்பாவுக்கு.

ஒரு தருணத்தில், சங்கரலிங்கத்தின் பதின் பருவத்திலேயே அப்பா இறந்து போக, மதுரையில் இருக்கும் அண்ணன், அடைக்கலம் கொடுத்தார். அவரின் அரவணைப்பில் இருந்துகொண்டு, சின்னசின்ன வேலைகளைப் பார்த்து வந்தார். இது வாய்க்கும் வயிற்றுக்குமே போதவில்லை. போதாக்குறைக்கு, புத்தி முழுக்க கலையில் இருந்தது. நாடகத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு முதல் காரணம்... எவருக்குமே இல்லாத அவரின் தனித்துவம் மிக்க குரல்! அப்படியொரு குரல் அபூர்வம். அந்தக் குரலுக்குள்ளேயே நகைச்சுவை இழைந்து, இணைந்திருப்பதை பிறகுதான் அவரே உணர்ந்துகொண்டார். ‘நல்ல வாழ்க்கையைக் கொடுப்பா சாமீ’ என குலதெய்வத்தின் பெயரையே தன் பெயராக்கி, சுருளிராஜன் என்றானார்.

நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு அடுத்து வேறென்ன ஆசையாக இருக்கமுடியும்? திரையுலகம்தான். ரயிலைப் பிடித்தார். வாய்ப்பைப் பிடிக்க மதுரையில் இருந்து கோடம்பாக்கத்துப் படையெடுத்தார். கலைஞர் கருணாநிதியின் ‘காகிதப்பூ’ எனும் நாடகத்தில் 1959-ம் ஆண்டு நடித்தார். அந்த நாடகம் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, சுருளிராஜனின் நடிப்பு ரசிக்கப்பட்டது.

சிட்டாடல் ஜோஸப் தளியத்திடம் நடிகர் ஜெய்சங்கர் எப்போதுமே நன்றியுணர்வுடன் நடந்துகொண்டார் என்பார்கள். ‘இரவும் பகலும்’ படத்தில், ஜெய்சங்கரை ஜோஸப் தளியத் அறிமுகப்படுத்தினார்.

அதே படத்தில் சுருளிராஜனும் நடித்தார். அதற்கு முன்னதாகவே ஒரு காட்சியில் பத்துப்பதினைந்து பேர் கூட்டமாக நிற்க, அதிலொருவராகவெல்லாம் நடித்திருக்கிறார் சுருளிராஜன். இப்படி அவர் கூட்டத்தில் ஒருவனாக நடித்த படங்கள் ஏராளம். அதையெல்லாம் கடந்து, ‘இரவும் பகலும்’ கொஞ்சம் கவனம் ஈர்த்தது.

ஜெய்சங்கருக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தன்னுடன் நடித்தவர்களைப் பிடித்துவிட்டால், அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வார். அதுமட்டுமல்லாமல், “இந்தக் கேரக்டருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தியைப் போடுங்களேன்... இந்தக் கேரக்டருக்கு சுருளிராஜனைப் போடுங்களேன்” என்று தன் கருத்தைத் தெரிவிப்பார். ‘காதல் படுத்தும்பாடு’ படத்திலும் ஜெய்யுடன் நடித்தார் சுருளி.

அடுத்து கொஞ்சம் கொஞ்சமாகப் படங்கள் வரத்தொடங்கின. ‘திருமலை தென்குமரி’ படத்தை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் நிறையவே கிடைத்தன. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் கே.ஆர்.விஜயா நடித்து வந்த ‘ஆதிபராசக்தி’ சக்கைப்போடு போட்டது. சென்னையைச் சேர்ந்த மீனவராக, இவர் பேசிய மெட்ராஸ் பாஷைக்கு கைத்தட்டல் காட்சிக்குக் காட்சி தியேட்டர் அதிரும் வகையில் கிடைத்தபடி இருந்தன.

அவ்வளவுதான்... குலசாமி சுருளியப்பர் அருளாசியோ... ‘ஆதிபராசக்தி’ திருவிளையாடலோ... சுருளிராஜனைத் தேடி எல்லா இயக்குநர்களும் வந்தார்கள். எல்லா நடிகர்களும் “சுருளிராஜனை எப்படியாவது பிடிச்சு படத்துல போடுங்க” என்று சொல்லத் தொடங்கினார்கள். மினிமம் பட்ஜெட் இயக்குநர்கள், பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், விஜயகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த் முதலான நடிகர்கள், கமல், ரஜினி முதலான பெரிய நடிகர்கள் என எல்லோரின் விருப்பமும் சுருளிராஜனையே சுற்றிச்சுற்றி வந்தது.

‘சந்திரமுகி’ படம் முடிவானதும் ‘’எப்படியாவது வடிவேலுவை இதுல கொண்டாந்துருங்க’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் பி.வாசுவிடம் சொன்னார். அன்றைக்கு எம்ஜிஆர், சிவாஜி முதலானோர் படங்களில், மளிகைச் சாமான் லிஸ்ட்டில், முதலில் ‘மஞ்சள் தூள்’ சேர்ப்பது போல நாகேஷ் பெயரைச் சேர்த்தார்கள். நடிக்க வைத்தார்கள். அதேபோல், எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து சுருளிராஜன் மிகவும் பிஸியான நடிகரானார். உடம்பைக் குனிந்தும், கைகளை வளைத்தும், கீச்சுக்கீச்சென பேசுகிற குரலிலும், அந்தக் குரலுக்குத் தக்கபடி தன் உடம்பை வளைத்துத் திருப்புவதிலும் தனி முத்திரைப் பதித்தார் சுருளி. ’ஆயிரம் ஜென்மங்கள்’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘பாலாபிஷேகம்’ என எல்லாமே சுருளிராஜனின் முத்திரைப் படங்கள்.

இயக்குநர் எம்.ஏ.காஜா, சுதாகர், தீபா நடித்த ‘மாந்தோப்புக் கிளியே ‘படத்தை இயக்கினார். படத்தில், நாயகன் நாயகியை விட, சுருளிராஜன் ரொம்பவே பேசப்பட்டார். கஞ்சத்தனத்தின் உச்சத்தில் கலக்கியெடுத்திருந்தார். இந்தப் படத்தின் காமெடிகள், ரிக்கார்டுகளாக வந்து, விழாக்களில் ஒலிபரப்பப்பட்டன. சுற்றி அமர்ந்துகொண்டு, வயிறு குலுங்கச் சிரித்தார்கள் ரசிகர்கள்.

இயக்குநர் மகேந்திரனின் ‘ஜானி’ படத்தில் ரஜினியுடன் இருந்துகொண்டு இவர் செய்யும் சேட்டைகள் ரொம்பவே குலுங்கிச் சிரிக்கவைத்தன. இவருக்காகவே ‘முயலுக்கு மூணு கால்’ மாதிரியான காமெடிப் படங்கள் எடுக்கப்பட்டன. ஒரே வருடத்தில் 48 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்று பேரெடுத்தார் சுருளி. ஒவ்வொரு படத்திலும் அவரது காமெடி உச்சம் தொட்டுக்கொண்டே இருந்தது.

‘உல்லாசப்பறவைகள்’ படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்து, கலக்கினார். கமலுக்கு மனநல சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவேண்டும். ஆனால், நண்பர் சுருளிராஜனுக்கு மனநல சிகிச்சை என்று சொல்லி, நாடகமாடி, கமலுடன் வெளிநாடு சென்று அங்கே பண்ணுவதெல்லாம் அதகள காமெடிகள். ’சட்டம் என் கையில்’ படத்தில் கமலுடன் சேர்ந்து மெட்ராஸ் பாஷையில் கிச்சுகிச்சு மூட்டியிருப்பார். கிட்டத்தட்ட ‘ஜானி’யில் ரஜினியுடன் செய்த திருட்டு அபேஸ் விஷயங்களை முன்னதாக இதில் வேறுவிதமாகப் பண்ணி தன் தனித்துவமான நடிப்பால் கதாபாத்திரத்தை ஜொலிக்கச் செய்திருப்பார் சுருளிராஜன்.

தேவர் பிலிம்ஸ், சுருளிராஜனை நிறையவே பயன்படுத்திக் கொண்டது. ‘தாய் மீது சத்தியம்’ படத்தின் நகைச்சுவை தனித்துவம் மிக்கவை. இப்படி எத்தனையோ படங்களில் மனோரமா, காந்திமதி, சச்சு என்று பலருடன் நடித்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் யாருக்குப் பாடினாலும் அவர்களின் குரலுக்குத் தக்கபடி பாடுவார். சுருளிராஜனுக்குத் தகுந்தபடியும் அப்படிப் பாடிய பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட்டடித்தது. சங்கர் கணேஷ், சுருளிராஜனையே பாடவைத்ததும் நிகழ்ந்திருக்கிறது.

‘இரவும் பகலும்’ படத்தில் ஜெய்சங்கர் அறிமுகமானது போல் சுருளிராஜனுக்கும் வெளிச்சம் கிடைத்தது. ஏவி.எம். நிறுவனம், ரஜினியை வைத்து இயக்கிய ‘முரட்டுகாளை’ படத்துக்கு வில்லனாக யாரைப் போடலாம் என்று முடிவு செய்தபோதும் பஞ்சு அருணாசலம் ‘ஜெய்சங்கரை வில்லனாகப் போடலாம்’ என்று சொன்னார். அதேபோல, ஜெய்சங்கருடனேயே இருந்து கொண்டு குழி பறிக்கும் குள்ளநரித்தன கேரக்டரை யார் கொடுக்கலாம் என்று கேட்ட போது, ‘சுருளிராஜனைப் போடலாம்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘முரட்டுகாளை’ படத்தில் ஜெய்சங்கரின் வில்லத்தனத்தையும் மறக்கமுடியாது. சுருளிராஜனின் பழிக்குப் பழிவாங்கிகொண்டே நகைச்சுவை செய்யும் காமெடியையும் ரசிக்காமல் இருக்கமுடியாது.

எவரையும் இமிடேட் செய்யாமல் நடிப்பார் சுருளிராஜன். தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, அதில் பீடுநடை போட்டு, தமிழக மக்களின் மனங்களில் தனியிடம் பிடித்து, நம் மனங்களையெல்லாம் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொண்டவர் சுருளிராஜன்.

அந்த அற்புதக் கலைஞன் சுருளிராஜன், 1980-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இறந்த பிறகும் கூட இரண்டு வருடங்களுக்கு அவர் நடித்த படங்கள் வந்துகொண்டே இருந்தன. சுருளிராஜன் மறைந்து 42 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும், தமிழ்த் திரை வரலாற்றுப் பக்கங்களில், நகைச்சுவையில் தனித்துவம் பிடித்த சுருளிராஜனுக்கும் நிரந்தர இடம் இருக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE