ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 84

By திரை பாரதி

ரஜினியின் படங்களை வாங்கக்கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்தது. அதில் சிக்கிக்கொண்டது விஜயா வாகினி தயாரித்த ‘உழைப்பாளி’. சர்ச்சைக்குக்கு வித்திட்ட அப்படத்தின் கதையை, அம்மா சென்டிமென்ட், மற்றவர் உழைப்பின் பலனை அபரிக்க நினைப்பவர்களின் கதி, உழைப்பே உயர்வுக்கு ஒரே வழி என்பது உள்ளிட்ட பல கருத்துகளை வலியுறுத்தும் அம்சங்களைப் புகுத்தி தனக்கே உரிய பாணியில் திரைக்கதை எழுதியிருந்தார் பி.வாசு.

தமிழ்நாட்டில் தனக்கான இடம்

மூட்டை தூக்கும் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் ரவிச்சந்திரன், தனது உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்து கோடீஸ்வரர் ஆகிறார். அவருடைய மனைவியான சுஜாதாவுக்கு ராதாரவி, நிழல்கள் ரவி, எஸ்.எஸ்.சந்திரன் என மூன்று அண்ணன்கள். மூவரும் ரவிச்சந்திரனின் சொத்தை அபரித்துவிட துடிக்கிறார்கள். அதற்காக தாங்கள் தீட்டிய திட்டத்தின்படி ரவிச்சந்திரனைக் கொன்றுவிட்டு, அவரது மகனான சிறுவன் ரஜினியின் வாயிலும் விஷத்தை ஊற்றி கொல்ல முயற்சிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக தன்னுடைய அக்கா ஸ்ரீவித்யாவால் ரஜினி காப்பாற்றப்பட்டுவிடுகிறார். ஸ்ரீவித்யாவும் தன்னுடைய தாய்மாமன்களுக்கு பயந்து தலைமறைவாக வாழ்கிறார்.

ரஜினி வளர்ந்து பெரியவனாகிறார். ஒரு தொழிற்சாலையில் மூட்டை தூக்கி உழைக்கும் அவர், அங்கே தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குகிறார். மூட்டை தூக்கும் ரஜினிக்குக் கோட் சூட் போட்டு, ஒரு எஸ்டேட் பங்களாவுக்கு அந்த வீட்டின் வாரிசுபோல் நடிக்க வரும்படி அழைத்துச் செல்கிறார்கள். அப்போது அந்தச் சொத்து முழுமைக்கும் தான் தான் வாரிசு என்பதும் ரவிச்சந்திரன் தனது அப்பாதான் என்பதையும் தெரிந்துகொள்கிறார் ரஜினி. தன்னுடைய அம்மாவான சுஜாதா மனநலம் பாதித்த நிலையில் தாய்மாமன்களின் கண்காணிப்பில் தனிமையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. அம்மாவைக் காப்பாற்றி தாய்மாமன்களின் குற்றங்களை அம்பலப்படுத்தி அவர்களைச் சட்டத்தின் கையில் ஒப்படைக்கிறார் ரஜினி.

‘பணக்காரன்’ படத்திலும் இதே சாயல் கொண்ட கதைக்கரு இருந்தாலும் இதில், அம்மா சென்டிமென்ட் அக்கா சென்டிமென்ட் ஆகியனவும் உழைப்பின் பெருமையும் திரைக்கதையில் அதிக ஆதிக்கம் செலுத்தின. தமிழ்நாட்டு மக்கள் தனக்குக் கொடுத்த இடத்தைப் பார்த்து நெகிழ்ந்த ரஜினி, ‘உழைப்பாளி’ படத்தில், ரசிகர்கள் மீது, தான் வைத்திருக்கும் அன்பைத் தெரிவிக்க விரும்பிம்பினார். அதை உணர்ச்சிபூர்வமாகப் பேசவும் செய்தார்.

“எனக்குன்னு யாருமில்ல; வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தேன். இங்கே, கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் என் மீது பாசம் வெச்சிருக்காங்க. என் மனசுக்குப் பட்டதை சட்டுன்னு சொல்வேன்; பட்டுன்னு செய்வேன். நாளைக்கு நான் அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன்னு சொல்றாங்க. ஆனா நான் சொல்றேன், நேத்து என்னை ஆண்டவன் கூலியா வெச்சிருந்தான். இன்னிக்கு நடிகன் ஆக்கியிருக்கான். நாளைக்கு எப்படி இருப்பேன்னு தெரியாது. அது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும்” என்று வசனம் பேசினார் ரஜினி.

‘உழைப்பாளி’ வெற்றிபெற்ற பின், ரஜினி அரசியல் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தைத்தான் இப்படி சொல்கிறார் என ஊடகங்கள் பேசின. ஆனால், ‘நாளைப் பற்றி நான் எப்போதும் கவலைப்படுவதில்லை. இன்றைக்கான நாட்களில் நான் எப்படி வாழ்கிறேன்’ என்கிற கொள்கையைத்தான் ரஜினி இன்று வரை கடைபிடித்து வருகிறார்.

போதும் என்ற மனமே...

‘உழைப்பாளி’ படத்தில் ரஜினி மூட்டை தூக்கும் தொழிலாளியாக நடிக்கும் காட்சியைப் படமாக்கியபோது, தனது உதவி இயக்குநரை அனுப்பி, நிஜமாகவே ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியை படப்பிடிப்புத் தளத்துக்கு அழைத்து வந்திருந்தார் வாசு. ரஜினி வந்ததும் “சார்... மூட்டை தூக்குற சீன்’ முடிச்சுட்டு ஃபைட் சீன் லீடுக்கு போயிடலாம்” என்றார் வாசு. “ஓகே...” என்று ரஜினி சொன்னதும், தொழிலாளியைக் கூப்பிட்ட வாசு, “சாருக்கு மூட்டையை எப்படித் தூக்கி லாரியில போடணும்னு செஞ்சு காமிங்க” என்றார். அப்போது ரஜினி அந்தத் தொழிலாளியை நலம் விசாரித்தார்.

“அண்ணா... வாங்க. உங்கள சந்திச்சதுல சந்தோஷம். எங்க வேலை செய்றீங்க?”

“டிஎன்சிசி மாதவரம் குடோன்ல சார்...”

“சாப்டீங்களா..?”

“நாஸ்டா ஆச்சு சார்...”

“டீ குடிச்சீங்களா..?”

“இப்போதான் குடுத்தாங்க... சாப்டேன் சார்.”

“சூப்பர்… உங்கள மாதிரி தொழிலாளி கொஞ்ச நேரமாவது இப்படி ரிலாக்ஸ்ட்டா உட்காரணும். கொஞ்ச நேரம் இந்த சேர்ல உட்கார்ந்து... கால் மேல கால் போட்டு ஷூட்டிங்கை வேடிக்க பாருங்க.”

தயங்கிய தொழிலாளியை தனக்குப் போடப்ப்பட்டிருந்த மடக்கு சாய்வு நாற்காலியில் வம்படியாக உட்கார வைத்தார் ரஜினி. அவர் கையில் வைத்திருந்த மூட்டை தூக்கும் கொக்கியை வாங்கிய ரஜினி, கொக்கியால் மூட்டையின் வலப்புற ஓரத்தில் குத்தித் திருகி, இன்னொரு கையால் இடப்புற முனையைப் பிடித்து அப்படியே மூட்டையை ஒரு சுழற்றுச் சுழற்றி முதுகில் வைத்தார். அப்படியே பத்தடி தூரம் நடந்துபோய் அலேக்காக மூட்டையை லாரியில் கிடத்தினார். அந்தத் தொழிலாளி, வாசு மட்டுமல்ல... படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.

அப்போது ரஜினி சொன்னார். “சார்... இதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல சார். 19 வயசுல 6 மாசம் மூட்டை தூக்கியிருக்கேன். நூறு மூட்டை தூக்கினா 10 ரூபா சார். ஒரு மூட்டைக்குக் கூலி பத்து பைசா. 3 மணி நேரத்துல 100 மூட்டை தூக்கிடுவேன். குடோன் முதலாளி, ‘டே.,. குடுகா... (பொடியா) இன்னும் ஒரு நூறு மூட்டை தூக்கினா இன்னொரு 10 ரூபாய் சம்பாதிக்கலாம்ல?’ என்று என்னை போகவிடாமல் தடுப்பார். ஆனா, நான் நிக்கமாட்டேன். நமக்கு என்ன தேவையோ அதுக்கு இந்த 10 ரூபா போதும்னு கிளம்பிடுவேன்” என்றார் ரஜினி.

ரஜினியின் போதும் என்கிற இந்த மனப்பாங்கு மூட்டை தூக்கிய காலம் தொடங்கி இன்று வரை அப்படியே இருக்கிறது என்கிறார் இயக்குநர் பி.வாசு.

“நான் ரஜினி சாரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று அவருடைய போதும் என்கிற மனது. அதே ரஜினிதான் சென்னையில் பாம் குரோவ் அருகில் இருந்த இடத்தை, ஒரு படத்துக்கு 25 ஆயிரம் சம்பளம் வாங்கிய காலத்தில் 25 லட்சத்துக்கு வாங்கினார். அதற்காக வாங்கிய கடனை அடைக்க இரவு பகலாக படங்களில் நடித்து தான் நினைத்ததைச் சாதித்தார். அதுதான் ரஜினியின் நெஞ்சுரம்” என்கிறார் வாசு.

தடையை மீறி வாங்கப்பட்ட ’உழைப்பாளி’

‘உழைப்பாளி’ படம் தயாரானதும் விநியோகஸ்தர்களுக்காக படத்தைப் போட்டுக்காட்ட ஒரு பிரத்யேகக் காட்சியை ஏற்பாடு செய்தார் நாகி ரெட்டியார். ஆனால், ‘அந்தக் காட்சிக்கு யாரும் போகக் கூடாது; போனால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று எச்சரித்தது விநியோகஸ்தர்கள் சங்கம். அதையும் மீறி பல விநியோகஸ்தர்கள் வந்தார்கள். படத்தின் கதையும், படத்துக்கு இளையராஜா இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களும் ஈர்ப்புடன் இருப்பதைப் பார்த்து காட்சி முடிந்த கையோடு தங்களது பகுதிக்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டார்கள் விநியோகஸ்தர்கள். வாங்கப்படாத ஏரியாக்களில் எல்லாம் விஜயா வாகினி நிறுவனமே நேரடியாக ரிலீஸ் செய்தது.

சந்திரமுகி ஷூட்டிங் ஸ்பாட்...

1993 ஜூன் மாதம் நான்காவது வாரத்தில் வெளியான ‘ உழைப்பாளி’ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம் குவிந்தது. வாங்காத விநியோகஸ்தர்கள் ரஜினி மீதும் இனிமேலும் தடை விதித்தால் நாங்கள் சங்கத்தில் இருக்கமாட்டோம்... வேறு சங்கம் தொடங்குவோம் என்று பிரச்சினை செய்ய, ரஜினி மீதான தடை நீக்கப்பட்டு, ‘செகண்ட் ரன்’ ரிலீஸில் முன்பு படத்தை வாங்காத விநியோகஸ்தர்களும் படத்தை வாங்கி வெளியிட்டு லாபம் பார்த்தார்கள். இத்தனை பெரிய வெற்றிக்குக் காரணமாக இருந்த ரஜினி - பி.வாசு கூட்டணி, மீண்டும் ‘சந்திரமுகி’யில் இணைந்தது.

(சரிதம் பேசும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE