வார்த்தையில் இருந்துதான் வாழ்க்கை தொடங்குகிறது: இயக்குநர் ராஜூமுருகன் பேட்டி!

By KU BUREAU

கோவில்பட்டி: சமூகத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தையில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது. சாதி ரீதியாகவும் மற்ற எல்லா தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதுதான் ஒரு நல்ல படைப்பின் வேலையாக இருக்கும் என இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாவட்ட காவல்துறை மற்றும் வானம் என்டர்டைமென்ட் இணைந்து உருவாக்கிய ’திரு’ குறும்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா தனியார் விடுதியில் நடைபெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் கலந்து கொண்டு வெளியிட்டார்.

பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “உலகம் முழுவதும் சிறந்த படைப்புகள் என்பது அன்பையும், உலகம் முழுவதும் சிறந்த படைப்புகள் மனிதத்தையும், சமத்துவத்தையும் பேசுவதுதான். அதை செய்றவங்க எங்கெங்கிருந்தோ கிராமங்களில் இருந்து ஏதோ ஒரு மண்ணிலிருந்து ரொம்ப ரூட்டடா கிளம்பி வரவங்க தான். அதில் ஒருவர் தான் அருந்ததி அரசு அப்படிங்கிற இந்த தோழர். தூத்துக்குடியில் இருந்து இப்படி ஒரு படைப்பை வைத்திருக்கிறார். நம்ம சமூகத்துல வார்த்தையில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது. சாதி ரீதியாகவும் மற்ற எல்லா தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதுதான் ஒரு நல்ல படைப்பின் வேலையா இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஏதோ ஒரு காலத்துல வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு கொண்டிருந்த திருநங்கையர்கள் இன்றைக்கு திருநங்கையர் அப்படின்னு அழைக்கப்படுவதற்கான ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. எவ்வளவோ நிறைய தோழர்கள் சேர்ந்து தான் இந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அந்த வகையில் இந்த ’திரு’ படம் மேலும் திருநங்கையர்களின் வாழ்க்கையில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒலிபாய்ச்சும் ஒரு படைப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த படத்திற்கும், இந்த பாடலுக்கும் இப்படியான நிகழ்வுகளுக்கும் மக்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இப்படி ஒரு சிறப்பான முன்னெடுப்பை எடுத்து இருக்கிறது ரொம்ப மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த நேரத்தில் இந்த மாதிரி நிறைய படைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் அடுத்து முழு நீள திரைப்படத்திற்கும் வரவேண்டும் என்பது எனது விருப்பம்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE