நயன்தாரா: ‘லேடி விக்கிரமாதித்தன்!’

By வி. ராம்ஜி

’தன் நிலையில் சற்றும் மனம் தளராதவர் விக்கிரமாதித்தன்’ என்றொரு வாசகத்தை தன்னம்பிக்கையாளர்களுக்காகவும் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுக்காகவும் சொல்லுவோம். ‘விக்கிரமாதித்தன்’ என்பது ஆணாக இருக்கலாம். இங்கே, அந்தப் பெயருக்கான விஷயம், ஆண் என்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முயற்சியாளர் என்றும், தன் மீது அசைக்க முடியாதவர் என்பதாகவும்தான் பார்க்கவேண்டும். அப்படி தன் நிலையில் இருந்து கொஞ்சமும் வழுவாமல், நழுவாமல், ஒவ்வொரு படத்தின் மூலமும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டுக்கொண்டே இருக்கிறார்... முன்னேறிக் கொண்டே இருக்கிறார் நயன்தாரா!

கேரள தேசம், நம் தமிழ்த்திரையுலகிற்கு எத்தனையோ நல்ல நல்ல நடிகைகளை வழங்கியிருக்கிறது. நயனும் கேரளம்தான். 1984-ம் ஆண்டு பிறந்தார். 2003-ம் ஆண்டு, ’மனசினகாரே’ என்ற படத்தில் அறிமுகமாகும்போது, அவருக்கு 19 வயது.

பரபர சுறுசுறுவென திரைக்கதை அமைப்பதில் வல்லவரான இயக்குநர் ஹரி சரத்குமாரையும் நெப்போலியனையும் வைத்து ‘ஐயா’ என்ற படத்தை 2005-ல் இயக்கினார். தென்காசிக்குப் பக்கத்தில் நடக்கிற கதை. அப்படியே பக்கமிருக்கிற கேரளத்தில் இருந்து நயன்தாராவை, நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

’ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்/ இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்/ மணமாலை ஒன்ன பூ பூவாய் கோா்த்திருந்தேன்/ அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்/ சூரியன சூரியன சுருக்கு பையில்/ நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்

என்ற ஆடி நடித்து முதல் படத்திலேயே அவரின் சுருக்குப்பைக்குள் நம்மையெல்லாம் போட்டுக்கொண்டவர் நயன்தாரா.

மலையாளத்தில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மணிச்சித்திரத்தாழ்’, கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என பி.வாசு இயக்கத்தில் உருவானது. இந்தப் படத்தைப் பார்த்த ரஜினி, தமிழில் எடுக்க பி.வாசுவை கேட்டுக்கொண்டார். அப்படித்தான் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில், ‘சந்திரமுகி’ உருவானது. இதில் ‘சந்திரமுகி’யாக ஜோதிகா நடித்தாலும் நடிப்பில் தெறிக்கவிட்டிருந்தாலும், ரஜினிக்கு ஜோடியாக நயனும் கவனம் ஈர்த்தார்.

'கோழி... பற பற... கொக்கு... பற பற...’ என்றும் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக்கூடாதா’ என்றும் நயன்தாரா பாடல்களுக்கு நடனமாடிய விதமும் தன் புன்னகையால் ஈர்த்த விதமும் அவரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றது.

சூர்யாவுடன் ‘கஜினி’ படத்தில் அசின் முக்கிய ரோல்தான். ஆனாலும் படம் முழுக்க வருகிற நயன்தாரா கலக்கியிருப்பார். ’சிவகாசி’யில் அசின் நடித்தாலும் ஒரேயொரு பாடலுக்கு வந்து நடனமாடிவிட்டுப் போகிற அளவுக்கு மார்க்கெட் வேல்யூ உயர்ந்திருந்தது அவருக்கு! பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் முதன் முதலாக இணைந்த ‘சிவாஜி’ படத்துக்கும் ஒரு பாடலுக்கு ‘நயன்’ தேவைப்பட்டார்.

பாவாடை தாவணியிலும் பச்சக்கென பொருந்திக்கொள்வார். புடவையிலும் பாந்தமாக இருப்பார். சுடிதாரிலும் அழகு மிளிரும். மாடர்ன் உடைகளிலும் கிறங்கடிப்பார். ‘இதுதான்... இந்த மாதிரிதான்... இது மட்டும்தான்...’ என்கிற வரையறைகளெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை நயன்தாரா. சிம்புவுடன் நடித்த ‘வல்லவன்’ படத்தில் மிக அற்புதமான கதாபாத்திரம்.

இயக்குநர் ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ படத்தில் பொறுப்புமிக்க கேரக்டர். ரஜினியின் ‘பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியா செய்த கதாபாத்திரத்தை, அஜித்தின் ‘பில்லா’ படத்தில் ஸ்டைலிஷாகச் செய்து அப்ளாஸ் அள்ளினார் நயன்தாரா. அந்தப் படத்தின் காஸ்ட்யூமே கவர்ச்சியைத் தூக்கலாகவும் ஆங்கிலப் பட பாணியிலும்தான் கொடுக்கப்பட்டிருந்தது.

விஜய்யுடன் நடித்தார். அஜித்துடன் நடித்தார். தனுஷுடன் நடித்தார். ‘யாரடி நீ மோகினி’ படத்தில் இவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு, நயனுக்காகவே ஏழெட்டு முறை பார்த்தேன் என்று என்றவர்கள் உண்டு. சூர்யாவுடன் ‘ஆதவன்’, விஷாலுடன் ‘சத்யம்’, ஆர்யாவுடன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என ஆல் ரவுண்டர் நடிகையானார். எண்பதுகளில் ஸ்ரீப்ரியாவும் ஸ்ரீதேவியும் எல்லா நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்கள். அதேபோல கமலைத் தவிர அனைவருடனும் நடித்து அடுத்தடுத்த கட்டத்துக்குச் சென்று உயரம் போய்க்கொண்டே இருந்தார் நயன்தாரா.

உதயநிதி ஸ்டாலினுக்கும் ஜோடியாக நடித்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘தனி ஒருவன்’ படத்தில் இவரின் மிகச்சிறந்த நடிப்பைப் பார்க்கலாம். அதேபோல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் புதுச்சேரியில் வாழ்கிற பெண்ணாக, காதம்பரியாக நம்மைக் கலக்கியெடுக்கவும் செய்தார். கலங்கடிக்கவும் செய்தார். கிச்சுகிச்சு மூட்டவும் செய்தார்.

இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, “ஒவ்வொரு வருஷமும் நமக்கெல்லாம் வயசு கூடுதுல்ல. ஆனா நயன்தாராவுக்கு மட்டும் ஒவ்வொரு வருஷமும் குறைஞ்சிக்கிட்டே வருதுப்பா” என்று பலபேர் விமர்சித்தார்கள்.

நடுவே, அவருக்கும் துக்கங்கள். கலக்கங்கள். பிக்கல்கள். பிடுங்கல்கள். ஆனால், இதனாலெல்லாம் உடல் மெலியவுமில்லை; பூசின உடம்பாக மாறவுமில்லை. அதே பொலிவுடன், எதுகுறித்தும் இடிந்து போய்விடாமல், மிகப்பெரிய ஓட்டத்துக்குத் தயாராகும் வீராங்கனை போலவே, தன்னை நினைத்துப் பயணித்துக் கொண்டே இருந்தார்.

‘ஆமாம்... விக்னேஷ் சிவனும் நானும் காதலிக்கிறோம்’ என்று வெளிப்படையாகவே அறிவித்தார். அப்போதும் படங்கள் வந்தன. சொல்லப்போனால், பல வருடங்கள் கழித்து, பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வகையில், ‘இமைக்கா நொடிகள்’, ’கொலையுதிர்காலம்’, ‘டோரா’, ‘ஐரா’ என்று நயனுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் வரிசைகட்டின.

வருடங்கள் ஓடஓட வயது குறைந்துகொண்டே வந்தது. சம்பளமோ எகிறிக்கொண்டே போனது. நாளுக்கு நாள், படத்துக்குப் படம் மார்க்கெட் உச்சம் தொட டாப்கியரில் போய்க்கொண்டிருந்தது. அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் அந்தக் கதாபாத்திரத்தை அத்தனை நேர்த்தியாக, தனித்துவத்துடன் செய்திருப்பார் நயன்தாரா. ‘அண்ணாத்த’ படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக அமர்க்களப்படுத்தியிருப்பார். ’தர்பார்’ படத்திலும் அப்படித்தான்!

நான்காவது படத்தையே ரஜினியை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சன், தன் முதல் படத்தை பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதுவும் நயனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ‘கோலமாவு கோகிலா’ கொடுத்தார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக நடித்தும் பிரமிக்கவைத்தார் நயன்தாரா. கடந்த இருபது வருடங்களில் பக்திப் படங்கள், அம்மன் படங்கள் என்பவையெல்லாம் ‘அவுட் ஆஃப் வெர்ஷன்’ ஆகிவிட்ட நிலையிலும் க்ளாமரில் பட்டையைக் கிளப்பிய நயனை, அம்மனாகவும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள்!

விக்ரமுடன் ‘இருமுகன்’, விஜய்யுடன் ‘பிகில்’, சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர் லோக்கல்’, விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்று மிகப்பெரிய ரவுண்டு கட்டி தமிழ்த் திரையுலகில் விளையாடிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.

‘நெற்றிக்கண்’ இவரின் நடிப்பை நம்பியே எடுக்கப்பட்டு, கவனம் ஈர்த்தது. ‘அறம்’ படத்தை, இவரைத் தவிர வேறு எவரும் இந்த அளவுக்கு உள்வாங்கி செம்மை காட்டிவிடமுடியாது. இங்கே கலைமாமணி விருதுகளும் அக்கட பூமியான தெலுங்கில் நந்திவிருதுகளும் பெற்றிருக்கிறார் நயன். ’ஓ2’ என்ற படத்தில் தாய்மையின் தவிப்பை, மகனைக் காபந்து செய்ய நடத்துகிற போராட்டத்தை தன் நடிப்பால் தெறிக்கவிட்டிருப்பார்.

ஒருபக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் காதல் திருமணம், மற்றொரு பக்கம் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்புப் பணிகள் என்றும் பிறமொழிப் படங்களிலும் நேரமில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் நயன்தாரா, தனக்கென ஒரு ரசிகர்கூட்டத்தை எல்லா மாநிலங்களிலும் வைத்திருக்கிறார். அதனால்தான் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார்!

சர்ச்சைகளும் பிரச்சினைகளும் அவர் போய்க்கொண்டே இருக்கும்போதெல்லாம் பின்னால் இருந்தபடி துரத்திக்கொண்டே வரத்தான் செய்கின்றன. ஆனால், தன் நிலையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக முன்னேறிப் பயணித்துக் கொண்டே இருக்கிறார் நயன்தாரா.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றும் ‘லேடி விக்கிரமாதித்தன்’ என்றும் மனம் தளராமல் வெற்றிக்கொடி நாட்டி, ‘பரபர’வென பறக்க விட்டுக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு நவம்பர் 18 பிறந்தநாள்.

கைகொள்ளாத பூக்களுடன் வாழ்த்துகள் நயன் மேடம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE