கண்ணீரில் தத்தளிக்கிறது தத்தெடுக்கப்பட்ட கிராமம்: நடிகர் கிருஷ்ணா மறைவால் சோகம்!

By சந்தனார்

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மரணம், புர்ரிப்பாலம் கிராமத்தையே நிலைகுலையச் செய்திருக்கிறது. அவர் பிறந்து வளர்ந்த மண் அதுதான். அவரது உறவினர்களும் பால்ய நண்பர்களும் அங்கு வசிக்கிறார்கள். அதையெல்லாம்விட முக்கியமான விஷயம், அந்தக் கிராமத்தைத் தத்தெடுத்து பராமரித்துவந்ததுதான். கிராமத்தினரின் சுக துக்கங்களிலும் அவர் பங்கேற்றார். அதுமட்டுமல்ல, தான் நடித்த படம் ஒன்றின் தலைப்பில் அந்த கிராமத்தின் பெயரை இடம்பெறச் செய்தார். இன்று அவரது இழப்பைத் தாங்க முடியாமல் தத்தளிக்கிறார்கள் புர்ரிப்பாலம் கிராமத்து மக்கள்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெனாலி நகர் அருகே உள்ளது புர்ரிப்பாலம். அந்த கிராமத்தைச் சேர்ந்த கட்டாமனெனி ராகவய்யா சவுத்ரி - நாகரத்னம்மா தம்பதியின் மகனாக, 1943 மே 31-ல் பிறந்தார் கிருஷ்ணா. தனது 22-வது வயதில் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்குச் சென்றார். 1960-களில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். என்.டி.ஆர் போன்ற மூத்த நடிகர்களின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. தங்கள் மண்ணைச் சேர்ந்த இளைஞனுக்குக் கிடைத்த அந்த வெற்றியால் புர்ரிப்பாலம் கிராம மக்கள் பெருமிதமடைந்தனர்.

தனது கிராமத்துக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், 1979-ல் ‘புர்ரிப்பாலம் புல்லோடு’ எனும் திரைப்படத்தில் நடித்தார். எஸ்பிபி - பி.சுசீலா பாடிய ‘புர்ரிப்பாலம் புல்லிவாத்னி’ எனும் பாடலும் அந்தப் படத்தில் இடம்பெற்றது.

பெயரளவில் மட்டும் நன்றிக்கடனைச் செலுத்தவில்லை கிருஷ்ணா. அந்தக் கிராமத்தையே தத்தெடுத்துக்கொண்டார். அங்கு ஒரு பள்ளியை நிறுவினார். ஆலயம் எழுப்பினார். சமூகக் கூடம், தியான மண்டபம் எனப் பல கட்டிடங்களை உருவாக்கித்தந்தார். புயலால் அந்தக் கிராமம் பாதிக்கப்பட்டபோது கிராம மக்கள் அனைவருக்கும் உணவளித்தார்.

அந்த நற்பணியை அவரது மகன் மகேஷ் பாபுவும் தொடர்கிறார். இலவச மருத்துவ சிகிச்சைக்கான அட்டையை கிராம மக்களுக்கு வழங்கியிருக்கிறார் மகேஷ் பாபு. ஆந்திர மாநிலத்தின் எந்த ஒரு மூலையில் உள்ள மருத்துவமனையிலும் அவர்கள் இலவசமாக மருத்துவ வசதி பெற முடியும்.

இன்றைக்கும், கிருஷ்ணாவுக்குச் சொந்தமாக ஒரு வீடு அந்தக் கிராமத்தில் இருக்கிறது. எனினும், அங்கு அவரது குடும்பத்தினர் யாரும் வசிக்கவில்லை. அதேசமயம், சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம், ஒரு நடிகராக இல்லாமல் ஊர்க்காரராகவே இருந்தார் கிருஷ்ணா. பால்ய நண்பர்கள் அவரைச் சந்தித்து பழைய நாட்கள் குறித்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார்கள்.

இன்றைக்கு அவரது அந்த வீட்டில் கண்ணீர் மல்கக் குழுமியிருக்கிறார்கள் புர்ரிப்பாலம் கிராமத்து மக்கள் - தலைமகனை இழந்துவிட்ட சோகத்துடன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE