’குடியிருந்த கோயில்’ என்கிற எம்ஜிஆர் படம். ரசிகர்களால் மறக்கமுடியாத இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்ற பாடல் நல்ல மெலடியான பாடல் என ரசிக்கப்பட்டது. அந்தப் பாடலை எழுதியவர் பெண் பாடலாசிரியர் என்பது பரவலாகப் பேசப்பட்டது. இந்தப் பாடலை ரோஷ்னாரா பேகம் என்பவர் எழுதினார். பிறகு ஏனோ இவர் பாடல்கள் எழுதவே இல்லை. என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. கவிஞரில் ஆண் பெண் பேதமில்லை என்றபோதும் தமிழ்த் திரையுலகில், பெண் கவிஞராக தனித்துவத்துடனும் மகத்துவத்துடனும் கோலோச்சிக்கொண்டிருக்கும் கவிஞர் தாமரை, வரிகளுக்காகவே கொண்டாடப்படுபவர். வசீகரச் சொற்களின் நாயகி!
கொங்கு தேசத்துக்காரர். இவருடைய அப்பா, நாடகமெல்லாம் எழுதினார். கவிதைகளெல்லாம் படைத்தார். இதனால், தாமரைக்கும் தமிழும் கவிதையும் இயல்பாகவே வந்தது. படிப்பிலும் முழுக்கவனம் செலுத்தினார். பொறியியல் பட்டதாரியானார். கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆறு வருடங்கள் பணிபுரிந்தார்.
ஆனாலும் தமிழின் மீதான காதல் பணிகளுக்குக் குறுக்கே நின்றது. ஆர்வத்துடன் படித்தாலும் கவிதையின் பக்கமே தாமரையின் மனம் சென்றது. சென்னைக்கு வந்தார். நிறையவே எழுதிக் குவித்தார். ’ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்’ எனும் கவிதைத் தொகுப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சிறுகதைகளும் எழுதினார். அந்தச் சிறுகதைகளிலும் ஒரு தாளலயம் இருந்தது. வார்த்தைகளின் அடுக்குகள், படிப்பவர்களைக் கட்டிப்போட்டன. ’என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தது. தாமரை, தனித்த அடையாளத்துடன் எல்லோராலும் அறியப்பட்டார்.
இவரின் கவிதைகளும் ஆளுமை மிக்க எழுத்துகளும் திரைத்துறையினரையும் ஈர்த்தன. இயக்குநர் சீமான் இயக்கிய ‘இனியவளே’ படத்தில், ’தென்றல் எந்தன் நடையைக் கேட்டது’ என்று எழுதினார். அந்த வார்த்தை நடைகளும் ஜாலங்களும் இன்னும் புகழ்கொடுத்தன. திரைப்படத்துக்குப் பாடல் எழுதினால், ஆங்கிலக் கலப்பு இல்லாமல், தமிழில் எழுதுவது என்பதில் மட்டும் தீர்மானமாக இருந்தார். அப்படிக் கிடைத்த வாய்ப்புகளைப் புறந்தள்ளினார்.
இயக்குநர் விக்ரமன் இயக்கிய ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில், ’மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா. மாலை எங்கள் தோட்டத்தைக் காணப் பூத்தாயா’ என்று எழுதினார். இவரின் சிந்தனைகளில் நவீனம் சலங்கைகட்டி ஆடியது. ஏ.ஆ.ரஹ்மான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘இஞ்சாருங்கோ’ என்று எழுதினார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பாடல்களின் மீது தீராக்காதல் உள்ளவர். படத்தின் தலைப்புகளையே பாடல் வரியில் இருந்துதான் எடுத்தாளுவார். அவர் இயக்கிய ‘மின்னலே’ படத்தில் ‘வசீகரா... வசீகரா என் நெஞ்சினிக்க' என்று எழுதினார் தாமரை.
'அடை மழை வரும் அதில் நனைவோமே/ குளிர் காய்ச்சலோடு சிநேகம்/ ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்/ குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்/ அது தெரிந்தும் கூட அன்பே/ மனம் அதையேதான் எதிர்பார்க்கும்/ எங்கேயும் போகாமல்/ தினம் வீட்டிலேயே நீ வேண்டும்/ சில சமயம் விளையாட்டாய்/ உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் என்ற வரிகளில் கிறுகிறுத்துப் போனார்கள் இளைஞர்களும் யுவதிகளும்! காதலின் ஆழத்தையும் அன்பின் அடர்த்தியையும் கவிதையாக்கிப் பாடலாக்கி உருக்கியெடுத்தார் தாமரை.
’காக்க காக்க’ படத்தில் எல்லாப் பாடல்களையும் தாமரை எழுதினார். ’ஒன்றா ரெண்டா ஆசைகள்/ எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா/ அன்பே இரவை கேட்கலாம்/ விடியல் தாண்டியும் இரவே நீளுமா/ என் கனவில் நான் கண்ட நாளிது தான் கலாபக் காதலா/ பார்வைகளால் பல கதைகள் பேசிடலாம் கலாபக் காதலா எனும் வரிகளும் புதிய சிந்தனை. ‘கலாபக் காதலனும்’ புதுசு!
’பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா/ உன் இனிய கண்ணியம் பிடிக்குதே/ கண்களை நேராய் பார்த்து தான்/ நீ பேசும் தோரணை பிடிக்குதே/ தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும்/
மிகப்பிடித்த பாடலொன்றை உதடுகளும் முணுமுணுக்கும்/ மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்/
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்/ உனது கண்களில்… எனது கனவினை… காணப்போகிறேன்’ என்ற வரிகள்... அவசர உலகிலும் கூட, நின்று நிதானித்து உள்வாங்கி உணர்ந்து சிலிர்க்கிற உண்மைக் காதலை எளிமையாகச் சொல்லின. ஒரு காதல் பாட்டு என்கிற நான்கரை நிமிடத்துக்குள் காவியம் படைத்திருப்பார் தாமரை.
கவுதம், ஹாரீஸ் ஜெயராஜ், தாமரைக் கூட்டணி அற்புதமான பாடல்களையெல்லாம் கொடுத்தது. அந்த அற்புதங்களை பதற்றமே இல்லாமல் பளிச்சென சாதனையாக்கிய எழுத்துகள்தான் தாமரையின் மன ஓட்டங்கள்!
கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில், 'பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே/ காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே/ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய்/ கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்/ என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே’ என்று எழுதினார்.
‘காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே/ காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே/ உன் விழியில் வழியும் பிரியங்களை/ பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை/ உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன்’ என்கிற வரிகளில் காதலர்களும் சரி... காதலிக்காதவர்களும் சரி... ஜில்லிட்டுத்தான் போனார்கள்.
’காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்/ தேடிப்பிடிப்பதுந்தன் முகமே/ தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதும் உன் முகமே/ என்னைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்/ நீ அறிந்து நடப்பதை வியப்பேன்/ உனை ஏதும் கேட்காமல்/ உனதாசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்’ என்ற வரிகள் அத்தனை அழகு. காதல் என்பது மதித்தல், பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல் என்பதை எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் தேன் தடவியும் சொட்டச்சொட்டக் கொடுத்திருக்கிறார் என்று வியப்பாகவும் அழகியலுடனும் இருக்கும்.
‘ஒரு பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் தெரியும்’ என்று அந்தக் காலத்தில் இருந்தே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு அன்பு மனதைப் புரிந்துகொள்ள, காதலும் அன்புமே போதுமானது. இதைப் புரிந்துகொள்ள, ஆணாகவோ பெண்ணாகவோ என்று பகுத்துப் பிரித்தெல்லாம் பார்க்கத் தேவையில்லை. ஒரு ஆணின் ஏக்கத்தையும் சின்னச்சின்ன ஆசைகளையும் தாமரையால் சொல்லமுடியும் போது, ஒரு பெண்ணின் அபிலாஷைகளையும் விருப்பங்களையும் இன்னும் தெளிவுறவே சொல்ல முடியும்.
இத்தனைக்கும் கதாபாத்திரங்களின் தன்மை, சூழல், வயது எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் பாடல்களை உருவாக்கியிருப்பார் தாமரை. அப்படி உருவாக்குவதுதான் ஒரு பாடலாசிரியரின் கடமை. அதேசமயம், பாடலாசிரியராக மட்டுமே இருந்துவிடாமல், எல்லாப் பாடல்களுக்குள்ளேயும் கவிஞராக மனதை நுழைத்துத் துளைத்து எழுதுகிறார் தாமரை. அதனால்தான் ஒவ்வொரு பாடலும் உயிரோட்டமாக, இன்றைய தலைமுறையினரின் காலர் டியூனாக, டயலர் டியூனாகவெல்லாம் தாமரையின் வரிகள் ராஜாங்கம் பண்ணிக்கொண்டிருக்கின்றன.
இப்படி தாமரையின் பாடல்களையும் வரிகளையும் வரிக்கு வரி சொல்லி வியந்துகொண்டே இருக்கலாம். அத்தனை வரிகளிலும் ஜீவனைப் புகுத்திப் புகுத்திக் கொடுத்திருப்பார்.
வீட்டுக்குத் தெரியாமல்தானே காதல் செய்வார்கள். யாருக்கும் தெரியாமல்தானே சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் தாமரையின் வரிகளைக் கவனியுங்கள்.
‘வாரணம் ஆயிரம்’ படத்தின் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன். முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன். ‘வெட்டுடா அவளை, குத்துடா அவளை’ என்றெல்லாம் பாடல் வருவதற்கு மத்தியில் காதல் எனும் மெல்லிசான, இழை இழையான கண்ணுக்குத் தெரியாத அணுஅணுவான உயிர்ப்பானதொரு உணர்வை, அத்தனை கவிதையையும் கொட்டி, ஆசைப்பட்டிருப்பார் தாமரை.
’நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை/ நீருக்குள் மூழ்கிடும் தாமரை/ சட்டென்று மாறுது வானிலை/ பெண்ணே உன் மேல் பிழை/ நில்லாமல் வீசிடும் பேரலை/ நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை/ பொன்வண்ணம் சூடிய காரிகை/ பெண்ணே நீ காஞ்சனை/ ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி/ என் உயிரை உயிரை நீ ஏந்தி/ ஏன் சென்றாய் சென்றாய் எனைத் தாண்டி/ இனி நீதான் எந்தன் அந்தாதி’ என்கிற ஒவ்வொரு வரிகளையும் வார்த்தைகளையும் கவனித்தால் கவிஞர் தாமரையின் தமிழ் ஆளுமையை உணர்ந்து சிலிர்க்கலாம்.
’ஏதோ ஒன்று என்னை ஈர்க்க/ மூக்கின் நுனி மர்மம் சேர்க்க/ கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா/ நீ நின்ற இடமென்றால் விலை ஏறிப் போகாதோ/ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ’ என்று சொல்லிவிட்டு, அடுத்த வரியில்... ‘என்னோடு வா வீடு வரைக்கும்/ என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்’ என்று காதலர்களுக்குள் புது ரூட் சொல்லி, பெற்றோர், வீடு, காதல், திருமணம் எனும் அழகிய கூட்டை அறிவுரையாக இல்லாமல், காதல் பாதையிலேயே பயணித்துச் சொல்லியிருக்கிற தாமரையின் வரிகள், மனதில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டே இருக்கின்றன.
’இவள் யாரோ யாரோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே/ இது பொய்யோ மெய்யோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே/
’தூக்கங்களை தூக்கிச் சென்றாய் ஏக்கங்களை தூவிச் சென்றாய்/ உன்னைத் தாண்டிப் போகும்போது வீசும் காற்றின் வீச்சு வேறு/ நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே/ நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே/ காதல் எனைக் கேட்கவில்லை கேட்டால் அது காதல் இல்லை/ என் ஜீவன் ஜீவன் நீதானே/ எனத் தோன்றும் நேரம் இதுதானே/ நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே’ என்கிற வரிகளில் காதல் பூக்கிறது. அன்பு பெருகுகிறது. மதித்தல் அதிகமாகிறது. காதலர்கள், இனிதே வாழ்கிறார்கள்... தாமரையின் வரிகளைப் போலவே!
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ‘மல்லிப்பூ’ வாசத்துக்கு எல்லையே இல்லை. மிகப்பெரிய வைரல் பாடலானது. நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிற தாமரை, தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்.
புதிதுபுதிதாக, அதேசமயம் பழைமை மிக்க தமிழ்ச் சொற்களை இனிக்க இனிக்க, தமிழ் மணக்க மணக்கச் சொல்லிக்கொண்டே இருக்கும் கவிஞர் தாமரையின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 10).
‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’யாய் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கவியே!