ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம்- 83

By திரை பாரதி

கோடம்பாக்கத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்று தியாகராய நகரையும் வடபழனியையும் இணைக்கும் என்.எஸ்.கிருஷ்ணன் சாலை. அவ்வாறு அது பெயர் மாறும் முன்பு, ஆற்காடு சாலையாக இருந்தது. அதற்கும் முன்பு, புலியூர் ரோடு. இச்சாலையின் இருபுறங்களிலும் ஏவி.எம், பரணி, விஜயா வாஹினி என பல ஸ்டுடியோக்கள் இருக்கின்றன. விஜயா வாகினி ஸ்டுடியோவுக்கு இந்தச் சாலையின் இருபுறங்களிலும் படப்பிடிப்புத் தளம், ஃபிலிம் லேப், படத்தொகுப்பு அறைகள் எல்லாம் உண்டு. பொம்மை, அம்புலிமாமா உள்ளிட்ட பத்திரிகைகளின் பதிப்பகப் பிரிவுகளும் இந்தச் சாலையில் தான் செயல்பட்டு வந்தன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ - முத்துராமன் நடித்த ‘வாணி ராணி’ விஜயா வாஹினி தயாரிப்பில் 1974-ல் வெளிவந்தது. அதன்பின்னர், சுமார் 20 ஆண்டுகள் தமிழில் படமே தயாரிக்காமல் இருந்தது விஜயா வாகினி நிறுவனம். பிறகு 1993-ல் ரஜினி கால்ஷீட் கொடுத்தால் மட்டும் படம் தயாரிப்பது என்கிற முடிவில் இருந்தது. இதையறிந்து நாகி ரெட்டியாரைச் சந்தித்த ரஜினி, “உங்கள் தயாரிப்பில் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால், எனக்கொரு நிபந்தனை உண்டு” என்றார்.

நாகி ரெட்டியார் ஆச்சரியமாக ரஜினியைப் பார்த்தார். “நான் சென்னை வந்த புதிதில் இந்தப் பகுதியில் இருக்கும் ஏவி.எம்., விஜயா வாஹினி, பிரசாத், பரணி ஸ்டுடியோக்களை பிரம்மிப்பாக பார்த்தபடி நடந்து சென்றிருக்கிறேன். விஜயா - வாகினி ஸ்டுடியோவின் மெயின் கேட் அவ்வளவு அழகாக, பிரம்மாண்டமாக இருக்கும். ஆஞ்சநேயர் கையில் கொடி பிடித்தபடி பறந்து செல்லும் உங்கள் நிறுவனத்தின் சின்னம் என்னைக் கண்கொட்டாமல் பார்க்க வைக்கும். ஆனால், தற்போது படங்கள் தயாரிக்கவில்லை என்றதும் மெயின் கேட்டைப் பூட்டி வைத்துவிட்டீர்கள். நான் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால், அந்த மெயின் கேட்டை நீங்கள் பழையபடி திறக்க வேண்டும். அதேபோல் உங்கள் நிறுவனத்தின் ஆஞ்நேயர் சின்னத்தையும் பெரிதாக வைக்க வேண்டும். நான் அந்த கேட்டின் வழியாக வந்து விஜயா வாகினி ஃப்ளோரில் நடிக்க விரும்புகிறேன்” என்றார் ரஜினி. இதைக் கேட்டு நெகிழ்ந்த நாகி ரெட்டியார், தனது இரண்டு கைகள் நிறைய தங்கக் காசுகளை அள்ளி ரஜினிக்கு அட்வான்ஸாகக் கொடுத்தார். அவர் இதுபோல் யாருக்குமே அட்வான்ஸ் கொடுத்தது கிடையாது.

எத்தனை பெரிய நிறுவனமாக இருந்தாலும் தான் நடிக்கும் படத்துக்கான கதையையும் இயக்குநரையும் ரஜினிதான் முடிவு செய்வார். “உங்க படத்துக்கு பி.வாசுதான் இயக்குநர், இளையராஜாதான் மியூசிக்” என்று நாகி ரெட்டியாரிடம் சொன்னார் ரஜினி.

எம்ஜிஆர் எப்படி கோட்டைவிட்டார்?

அதன்பிறகு நடந்தவற்றை பி.வாசு நம்மிடம் ஆச்சரியம் விலகாமல் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “வால்டர் வெற்றிவேல் படம் பார்த்துவிட்டு, ‘என்ன வாசு சார்... இந்தமாதிரி ஒரு படம் பண்ணீட்டிங்க. சத்யராஜ் சாருக்கு மட்டும்தான் அந்தக் கேரக்டரும் அந்தத் தலைப்பும்கூட பொருந்தும்’ன்னு சொன்னார்.

அதுமட்டுமில்ல... ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல எப்படி மேயின் கேட்டை திறந்துக்கிட்டு அறிமுகமானாரோ.. அதுமாதிரி, பூட்டிக்கிடந்த விஜயா வாகினி மெயின் கேட்டை திறக்க வச்சு அது வழியாதான் ஷூட்டிங் வருவேன்னு சொல்லி அதைச் சாதித்துக் காட்டினார் ரஜினி சார். எனது அப்பா பீதாம்பரம், ‘பாதாள பைரவி’ தொடங்கி விஜயா வாகினியின் ஆஸ்தான மேக்கப் மேனாக இருந்தவர். நாகி ரெட்டியார் முதலாளி என்றால் அவர் தொழிலாளிகளின் நலனின் அவ்வளவு அக்கறை கொண்டவர். குறைவைக்காமல் அள்ளிக் கொடுப்பவர். முதலாளி என்ற சொல்லுக்குப் பெருமை சேர்த்தவர். அப்படிப்பட்ட நிறுவனத்துக்கு தொழிலாளிகள் தங்களுடைய சிறந்த உழைப்பைக் கொடுப்பார்கள். இதனால், விஜயா வாகினியின் முதலாளிக்கு மட்டுமல்ல... அங்கே வேலைசெய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ‘உழைப்பாளி’ என்கிற கௌரவம் உண்டு.

இந்தப் பாரம்பரியத்தை மறக்கக்கூடாது என்பதற்காக நான் படத்துக்கு ‘உழைப்பாளி’ என்று தலைப்பு வைத்தேன். தலைப்பு மனதில் உதித்ததும் ரஜினி சாருக்கு போன் செய்து, ‘சார் டைட்டில் பிடிச்சிட்டேன்’ என்றேன். ‘என்ன டைட்டில்?’ என்று கேட்டார். ‘உழைப்பாளி’ என்றேன். ஒரு நொடி மௌனம் காத்த ரஜினி.. ‘வாவ்... எம்ஜிஆர் எப்படி இந்தத் தலைப்பை மிஸ் பண்ணார்... விவசாயி, தொழிலாளி இந்தத் தலைப்புக்கெல்லாம் ரொம்பப் பக்கத்துல இருக்கே..! தலைப்பு சூப்பர் சார்’ என்று சொல்லி ஆச்சரியத்துடன் பாராட்டினார்” என்றார் வாசு.

தடை விதித்த விநியோகிஸ்தர்கள் சங்கம்

இதற்கிடையில், ‘உழைப்பாளி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நேரத்தில் ரஜினிக்கு ‘ரெட் கார்டு’ போட்டது விநியோகஸ்தர்கள் சங்கம். முன்னணி நடிகர்களைத் தவிர, அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் சரிவர ஓடாத நிலை தொண்ணூறுகளில் ஏற்பட்டது. இது பணப்புழக்கம், பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியற்றால் வந்த விளைவு. அதனால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து எல்லாப் படங்களையும் பார்க்கும் போக்கு மந்த நிலையைச் சந்தித்தது. இதனால் தங்களுக்கு நஷ்டம் வருவதாகக் கூறி, அதை சரிசெய்ய நடிகர் - நடிகைகள் தங்களது ஊதியத்தை கணிசமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்களும் பட விநியோகஸ்தர்களும் நடிகர் - நடிகைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்கள்.

இது உடனடியாக திரையுலகில் பரபரப்பை உருவாக்க, இதற்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்போம் என்று கூறி நடிகர் - நடிகைகள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் தங்களுடைய சங்கங்கள் வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கூடிய கூட்டத்தில், “தயாரிப்புச் செலவுச் அதிகரிப்பதற்கு நடிகர்களின் வரைமுறை இல்லாத சம்பளம்தான் காரணமே தவிர, மற்ற எந்த செலவும் நமக்கு இவ்வளவு சுமை அல்ல” என்று நடிகர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், நடிகர்கள் தரப்பில் இந்த வாதம் ஏற்கப்படவுமில்லை, எடுபடவுமில்லை. “எங்களுக்கு இருக்கும் மார்க்கெட் மதிப்பு எவ்வளவு என்று கணக்குப்போட்டு பார்த்துத்தானே சம்பளம் தருகிறீர்கள். படம் விற்பனையாவது நடிகர்களாகிய எங்களது புகழை வைத்துத்தானே. அப்படியிருக்கும்போது அடிமடியிலேயே கைவைக்கிற மாதிரி எங்களுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்வது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்” என்று கேட்டார்கள்.

உடைத்துப் பேசிய ரஜினி

இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர, முத்தரப்பு கூட்டம் ஒன்றையை தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்தன. அதில் முத்தரப்பின் முக்கியஸ்தர்கள் அனைவருமே கலந்து கொண்டார்கள்.

ரஜினியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ரஜினி பேசும் நேரம் வந்தபோது, “கேளிக்கை வரி, உள்ளாட்சி வரி ஆகியவற்றைக் குறைக்கச் சொல்லி அரசாங்கத்திடம் கேளுங்கள். அதேசமயம், தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர் வாடகையையும் குறைக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்துவிட்டாலே போதும். நீங்கள் நடிகர்கள் தலையில் கைவைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதேநேரம், நடிகர்களால் சம்பளத்தைக் குறைக்க முடியாது” என்று தனது கருத்தை ஆணித்தரமாகக் கூறிவிட்டு, யாருடைய பதிலுக்காகவும் காத்திருக்காமல் கிளம்பிவிட்டார்.

அவரது பேச்சும் நடவடிக்கையும் விநியோகஸ்தர்களின் மத்தியில் கோபத்தைத் தூண்டியது. அதுபோன்றதொரு சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தது போலவே ‘ரஜினி நடித்த படங்களை வாங்கக்கூடாது’ என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதுடன். அவரது படங்களை வாங்கவும் தடைபோட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம். அப்போது அந்த சங்கத்துக்கு தலைவராக இருந்த சிந்தாமணி எஸ்.முருகேசன் தான் இந்த ரெட் கார்ட்டை ரஜினிக்கு எதிராகப் போட்டார்.

படத்திலேயே பதிலடி...

விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தீர்மானமும் ரஜினிக்கு எதிரான தடையும் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியதுடன் செய்தித்தாள்களில் ஹாட் டாபிக் ஆனது. ரஜினி - பி.வாசு - இளையராஜா - விஜயா - வாகினி என்கிற இந்தக் கூட்டணி தொடருமா? அறிவிக்கப்பட்டபடி ‘உழைப்பாளி’ தயாராகுமா என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனால், ரஜினியும் விஜயா வாகினி நிறுவனமும் சற்றும் பின்வாங்காமல் படத்தை வெகு விரைவாக எடுத்து முடித்தார்கள்.

படத்தில் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு காட்சியை வைத்தார் ரஜினி. கதைப்படி மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கும் அவர், மூட்டை தூக்கி முடித்து அதற்கான கூலியை வாங்கிவிட்டு வரும்போது, சம்பளத்தில் பத்தில் இரண்டு மடங்கை இடையில் இருப்பவர்கள் கமிஷனாகக் கேட்பார்கள். அவர்களை வெளுத்துக் கட்டுவார் ரஜினி. அந்த சண்டையின் முடிவில், “எதற்காக சண்டை போட்டே?” என்று ரஜினியின் அக்காவான ஸ்ரீவித்யாவின் கணவர் விஜயகுமார் வந்து கேட்பார். அதற்கு ரஜினி: “கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைச்சதுக்கு வாங்குற கூலியை குறைச்சுக்கவும் மாட்டேன்... உழைப்பாளிங்கள ஏமாத்துறவங்களப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கவும் மாட்டேன்” என்பார் ரஜினி. படம் தணிக்கை முடிந்து வியாபாரம் பேசப்பட்டது. ரஜினிக்கு ‘ரெட் கார்டு’ போட்டிருந்ததால்.. யாரும் ‘உழைப்பாளி’ படத்தை வாங்க முன்வரவில்லை. 20 வருடங்கள் கழித்து படமெடுக்க வந்த விஜயா வாகினி நிறுவனம், செய்வதறியாமல் திகைத்து நின்றது. அப்போது ரஜினி கூலாக நாகி ரெட்டியைப் பார்க்க வந்தார்.

(சரிதம் பேசும்)

படங்கள்: ஞனம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE