முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் - ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ?’

By வி. ராம்ஜி

அந்தச் சிறுவன் பள்ளிக்கூடங்களுக்குச் சென்ற நாட்களைவிட, நாடகக் கொட்டகைகளுக்குச் சென்றதுதான் அதிகம். இசைக் கச்சேரிகளைக் கண்டு ரசிப்பதுதான் அவனது வழக்கம். அதுமட்டுமா? கச்சேரியில் கேட்ட பாடல்களை, தன் வீட்டிலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடத்திலும் அட்சரம் பிசகாமல் பாடிக்காட்டி அசத்தினான். திருச்சியில் வளர்ந்தாலும் மயிலாடுதுறை எனும் மாயவரம்தான் அச்சிறுவனின் பிறப்பிடம். மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் என்பதுதான் பெயர். பின்னாளில், இந்தப் பெயர், எம்.கே.தியாகராஜன் என்றானது. பின்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்றானது. எம்.கே.டி. என்றும் பாகவதர் என்றும் எல்லோரும் செல்லமாக அழைத்தார்கள்.

நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஸ்த்ரீபார்ட் என்று சொல்லப்படும் பெண் வேடத்தில் நடித்து, அனைவரையும் கவர்ந்தார். திருச்சியில் ரசிக ரஞ்சனி சபா ரொம்பவே பிரபலம். அதில் ‘அரிச்சந்திரா’ நாடகம் நடந்தது. அரிச்சந்திரனின் மகன் லோகிதாசன் வேடத்தில் கலக்கியெடுத்தார். அந்த நாடகம் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. நாடகத்தைப் பார்த்த மதுரை பொன்னு ஐயங்கார் என்பவர், அவரது குரல்வளத்தைக் கண்டு வியந்துபோனார். முறைப்படி சங்கீதத்தைக் கற்றுக்கொடுத்தார். இதைத் தொடர்ந்து எம்.கே.டி-யின் பாடல்களுக்கு மவுசு கூடியது. மேடைகளில் அவர் பாடத் தொடங்கினால், மொத்த கூட்டமும் அமைதியாகிவிடும். அவரின் சங்கதிகள் வசீகரித்தன. குரலில் ஏதோவொரு மாயாஜாலம் இருந்தது.

நாடகத் துறையில் அந்தக் காலத்தில் ஜாம்பவான் என்று புகழப்பட்டவர் நடராஜ வாத்தியார். இவர்தான் எம்.கே.டி-க்கு நடிப்புப் பயிற்சியை அளித்தவர். குரல்வளம், நிற்பது, நடப்பது, பார்ப்பது, வசன உச்சரிப்பு, பாடல்கள் என சகலத்திலும் தனித்துவம் கொண்டவராகத் திகழ்ந்த எம்.கே.டி-யை விழா மேடையில் ‘இனிமேல் இவர் எம்.கே.தியாகராஜன் இல்லை. எம்.கே.தியாகராஜ பாகவதர்’ என்று பட்டம் கொடுத்து வாழ்த்திக் கொண்டாடினார் நடராஜ வாத்தியார்.

இதே உத்வேகத்துடன் சென்னைக்கு வந்தவருக்குத் திரையுலகம் வாய்ப்பளித்தது. 1934-ம் ஆண்டு ’பவளக்கொடி’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ‘பவளக்கொடி’ திரைப்படம் 270 நாட்களைக் கடந்து ஓடியது.

அப்போதெல்லாம் மூன்று மூன்றரை மணி நேரம் படம் ஓடும். மாலையும் இரவும் மட்டுமே காட்சிகள் இருக்கும். அவரது படத்தை இடமில்லாமல், நின்றுகொண்டே பார்த்த ரசிகர்களெல்லாம் கூட உண்டு.

பாகவதர் வாழ்ந்த காலமே குறைவுதான். அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பதினைந்துதான். இதில் ஆறு படங்கள் தெறிக்கவிட்ட வெற்றிப் படங்களாகின. ’நவீன சாரங்கதாரா’, ‘சத்யசீலன்’ முதலான படங்களில் அவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக, ‘சத்யசீலன்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். ‘சிந்தாமணி’ படம் வெளியாகி சாதனை படைத்தது. ‘அம்பிகாபதி’ முந்தைய சாதனையையெல்லாம் முறியடித்தது. ‘திருநீலகண்டர்’, ‘அசோக்குமார்’, ‘சிவகவி’ என்று வரிசையாக வந்த படங்கள் எல்லாமே பாகவதரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அடுத்து வந்த ‘ஹரிதாஸ்’ அவரது மிகப்பெரிய அடையாளமானது.

அதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி... அப்படியொரு சாதனையை வேறு எந்தப் படமும் நிகழ்த்தவில்லை. ‘ஹரிதாஸ்’ படம் நிகழ்த்தியது. 1944-ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளியான ‘ஹரிதாஸ்’ திரைப்படம் மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடியது. படம் எடுத்த செலவைத் தாண்டி, பதினாறு மடங்கு வசூலைக் குவித்தது என்பது வரலாறு.

அப்போதெல்லாம் சினிமாவில் கண் மூடித் திறந்தால் பாட்டு தான். 22 ரீல் கொண்ட படத்தில், 54 பாடல்கள் இருக்கும். பாகவதரின் படங்களிலும் அப்படித்தான். இதில் 28 பாடல்களுக்கு மேல் தியாகராஜ பாகவதர் பாடியிருப்பார். இந்தப் பாடல்களைக் கேட்பதற்காகவும் இவரின் முகத்தைப் பார்ப்பதற்காகவும் தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன

’சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே...’ என்ற பாடல் பெரும் ஹிட்டானது. ‘பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி’ என்ற பாடல் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது. இன்றைக்கும் பல படங்களின் காட்சிகளில் பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கக் கேட்கலாம். நூற்றுக்கணக்கான படங்களில், ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஒலிபரப்பாகி, அடுத்தடுத்த தலைமுறையையும் ஈர்த்திருக்கிறது. ‘தீன கருணாகரனே நடராஜா’ என்ற பாடலும் அப்படியான மிகப்பெரிய வெற்றிப் பாடலாகத்தான் அமைந்தது. ’வதனமே சந்திரபிம்பமோ’ பாடலை முணுமுணுக்காத ரசிகர்களே இல்லை. ’கிருஷ்ணா முகுந்தா முராரே’ பாடலைக் கேட்டு மெய்யுருகிப் போனது மொத்தத் தமிழகமும்!

தமிழ் சினிமாவில், நடிகர்களின் சரிதத்தை எழுதினால், பாகவதரிடமிருந்துதான் தொடங்கியாக வேண்டும். தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு முதன்முதலில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்ததென்றால், அது அவருக்குத்தான். அவர் பேசினால் கரவொலி காது கிழியச் செய்தது. பாடினால், விசில் பறந்து வானம் தொட்டது.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்தான் என்று தமிழ் சினிமா தன் வரலாற்றைக் கல்வெட்டாகப் பதிவுசெய்து கொண்டாடியிருக்கிறது.

‘திரையுலகில் பாகவதரைப் போல் வாழ்ந்தவருமில்லை. வீழ்ந்தவருமில்லை’ என்பார்கள். ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கில் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானார்கள். 4 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார்கள். இதையடுத்து விடுதலையாகி வந்தார்கள். இதன் பின்னர், சினிமாவில் நடிக்கவே விருப்பமில்லாமல் இருந்தார். ரொம்பவே துவண்டுபோனார். அவர் நடித்த படங்களும் பெரிதாக ஓடவில்லை. அந்த வலி அவரது அஸ்தமனத்துக்கு வழிவகுத்தது.

1910 மார்ச் 1-ம் தேதி பிறந்த பாகவதர், 1959 நவம்பர் 1-ம் தேதி காலமானார். அவர் இறந்து, இன்றுடன் 63 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரை, எம்.கே.டி. என்று செல்லமாக அழைக்கப்படும் தியாகராஜ பாகவதரை ஒருபோதும் திரையுலகம் மறக்காது. ‘பாகவதரின் புகழ்’ தலைமுறைக்குத் தலைமுறை வளர்ந்துகொண்டே இருக்கும்; வாழ்ந்துகொண்டே இருப்பார் பாகவதர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE