ஆறிலிருந்து எழுபது வரை; ரஜினி சரிதம் - 82

By திரை பாரதி

‘பணக்காரன்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அப்பா விஜயகுமார் தன்னுடைய மகன்தான் முத்து என்பதைத் தெரிந்துகொண்டதும், “முத்து... இனிமே நீ ஏழையுமில்ல; மேனேஜரும் இல்ல. இந்த வீடு, வாசல், சொத்து, சொகம் எல்லாமே உனக்குதான் சொந்தம். நீ பணக்காரன்” என்று உணர்ச்சிவசப்பட்டு சந்தோஷத்துடன் பேசுவார். அதற்கு ரஜினி, “வீடு, வாசல், சொத்து, சுகம் இருக்கிறவன் மட்டும் பணக்காரன் இல்ல... யாருக்கு நல்ல தகப்பன், தாய், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள் இருக்காங்களோ... அவன்தான் உண்மையான பணக்காரன். எனக்கு எல்லாருமே இருங்காங்க. ஆனா, ஒன்னைத் தவிர... என் தாய் கழுத்துல ஒரு தாலி” என்பார்.

வசனத்தை மாத்தி எழுதுங்க...

இயக்குநர் பி.வாசு எழுதிய க்ளைமாக்ஸ் காட்சிக்கான வசனத்தை படித்துப்பார்த்துவிட்டு. “உண்மையான பணக்காரன் என்பதற்கான அர்த்தத்தை நம்ம ஆடியன்ஸுக்கு சொல்ல இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது. அதனால அதையும் மாத்தி எழுதுங்க” என்று சொல்லி, அந்த வசனம் எப்படி வரவேண்டும் என்பதையும் ரஜினியே சொன்னார். அதுதான் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம்” என்று கூறியிருக்கிறார் பி.வாசு.

“நானும் ரஜினியும் இணைந்த படங்களில் முக்கியமான ‘பன்ச்’ வசனங்களை கூர் தீட்டிக்கொடுத்தவர் ரஜினி சார்தான். படத்தின் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பு பாராட்டும்படியாக இருக்கும். அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் தன்மையைப் பொறுத்து வசனங்கள் எப்படி வரவேண்டும் என்பதை அவரே சொல்லச் சொல்ல ஆச்சரியமாக இருக்கும். அவரது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக வசனங்கள் அமைந்துவிட்டால், மனம்விட்டுப் பாராட்டுவார்” என்கிறார் வாசு.

ரஜினியின் வசன அறிவு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தால், “அவர் ஒரு சிறந்த வாசகர். படப்பிடிப்பு இடைவேளையில் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த புத்தகங்களை அவர் வாசிப்பதைப் பார்க்கலாம். அவர் வாசித்த புத்தகங்களை நமக்கும் பரிந்துரைப்பதுடன் நல்ல புத்தகங்களை நமக்கு பரிசாகவும் அளிப்பார்” என்கிறார் வாசு.

இரண்டு சூப்பர் ஸ்டார்கள்!

‘பணக்காரன்’ படத்தைத் தொடர்ந்து ‘மன்னன்’ படத்தில் மீண்டும் இணைந்தது பி.வாசு - ரஜினி கூட்டணி. இம்முறை, கன்னடத்தில் வெற்றி கண்ட ‘அனுராக அரளிது’ என்கிற படத்தைத் தமிழில் ரீமேக் செய்யலாம் என்று ஐடியா கொடுத்தார் ரஜினி. ஆனால், பி.வாசுவிடம் ஒரு நிபந்தனை விதித்தார். “இந்தப் படத்திலிருந்து மனைவி முதலாளி, கணவன் தொழிலாளி என்கிற ஒரு வரிக்கதையை மட்டும் நீங்கள் எடுத்துக்கணும். இது ரீமேக் என்பதே தெரியாமல் நீங்கள் திரைக்கதையை எழுத வேண்டும். அதேபோல், என்னுடன் இணைந்து காமெடி செய்வதற்கு ஒரு கேரக்டரை உருவாக்க வேண்டும். அந்தக் கேரக்டர் குறைந்தது 30 காட்சிகளாவது என்னுடன் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் ரஜினி.

இதற்கெல்லாம் சம்மதித்து வாசு உருவாக்கிய அந்த கேரக்டர்தான் கவுண்டமணி ஏற்று நடித்த முத்து கதாபாத்திரம். ‘மன்னன்’ படம் 1992 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி 200 நாட்கள் ஓடியது. அதில், ரஜினியின் நேர்மையையும் திறமையையும் பார்த்து காதலிக்கும் சக ஊழியர் கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். இளையராஜாவின் இசையில் வாலி, கங்கை அமரன் வரிகளில் எல்லா பாடல்களும் ஹிட்டடித்தன. குறிப்பாக, தாயின் பெருமையைப் பேசும் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் ஜேசுதாஸின் குரலில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் உருக்கியது.

ரஜினி - விஜயசாந்தியின் முதலிரவுப் பாடலாக இடம்பெற்ற ‘அடிக்குது குளிரு’ பாடலில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் வசனப்பகுதி போல் பேசியிருந்தார். கன்னடத்தில் ராஜ்குமாரும் மாதவியும் போட்டிபோட்டு நடித்திருந்த ‘அனுராக அரளிது’ படத்தின் ரீமேக் என்றபோதும், ‘மன்னன்’ படத்தின் கதையையே தெலுங்கிலும் இந்தியிலும் ரீமேக் செய்ய வாங்கிக் கொண்டார்கள். அதுதான் வாசு - ரஜினி கூட்டணியின் வெற்றி மந்திரம். மன்னன் படத்தின் ரீமேக் ‘கரானமொகுடு’ என்கிற பெயரில் தெலுங்கிலும் ‘வாட்லா’ என்கிற பெயரில் இந்தியிலும் தயாராகி அங்கேயும் ஹிட்டடித்தது.

ஒரு நிமிடத்தில் கதை சொன்னார்!

‘யார் அடக்குவது... யார் அடங்கிப்போவது?’ என்பதுதான் முதலாளியாக இருக்கும் மனைவிக்கும் தொழிலாளியாக இருக்கும் கணவனுக்கும் இடையிலான பனிப்போர். இதில் வரும் ஒரு காட்சியில் ரஜினியின் கன்னத்தில் கதாநாயகி ஓங்கி அறைய வேண்டும். ரஜினியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தால் அதை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட கதாநாயகி நடிகை யார் என்று வாசு ரஜினியைப் பார்த்துக் கேட்டபோது ஒரு நொடி கூட யோசிக்காமல், “வைஜெயந்தி ஐ.பி.எஸ்” என்று சொன்னார் ரஜினி. அதைக் கேட்டு, “வாவ்... சூப்பர் சார்... உங்களை அடிப்பதற்கு சரியான ஆள் அவங்கதான். தெலுங்குல லேடி சூப்பர் ஸ்டார்ன்னு கொண்டாடுற அளவுக்கு போயிருக்காங்க. ரொம்ப ஆப்ட்டா இருக்கும்” என்று வாசு ஓகே சொன்னார். அப்போதே வாசுவுக்கு முன்பாக விஜயசாந்திக்குப் போன் அடித்தார் ரஜினி.

“வணக்கம் மேடம்... வாசு சார் டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்றேன். கதைப்படி அது வுமன் சென்ட்ரிக் ஃபிலிம். அதுல நீங்க ஹீரோவா நடிச்சா நல்லா இருக்கும். எனக்கு அதுல செகண்ட் கேரக்டர்தான். அதாவது, செல்வத் திமிரும் வர்க்கத் திமிரும் தலைக்கு ஏறிட்ட ஒரு பெண் தொழிலதிபர். அவருடைய தொழிற்சாலையில் ஒரு மெக்கானிக்காக வேலைக்கு சேர்ந்து நல்ல பெயர் வாங்கும் ஒரு தொழிலாளியுடன் அவங்களுக்கு ஈகோ கிளாஸ் வருது. ஒரு கட்டத்துல ஈகோ முத்திப்போய் அந்த மெக்கானிக் கன்னத்துல அடிச்சுடுறாங்க. முதலாளின்னு தயங்காம அவரும் திருப்பி அவங்க கன்னத்துல அறைஞ்சிடுறார். அதை ஏத்துக்க முடியல அந்த பான் இன் கோல்டன் பிளேட் பொண்ணுக்கு. அடிபட்ட பெண் புலிமாதிரி கர்ஜிக்கிறாங்க. மெக்கானிக்கை அடக்குறேன் பேர்வழின்னு அவரையே கல்யாணம் பண்ணி தன் காலடியில போட்டு மிதிக்கப் பார்க்குறாங்க. அதுல கணவன் என்ன ஆகுறார்ங்கிறதுதான் கதை. நீங்கதான் கீ பிளேயர். ஃபர்பாமென்ஸுக்கு ஃபுல் ஸ்கோப் இருக்கு. என்ன சொல்றீங்க?” என்று ஒரு நிமிடத்தில் கதையைச் சொல்லி முடித்தார் ரஜினி. அவ்வளவு பிஸியாக இருந்த விஜயசாந்தியை ஒரேயொரு போன் காலில் ஓகே சொல்லவும் வைத்தார் ரஜினி.

இது கொஞ்சம்கூட நல்லா இல்ல...

‘மன்னன்’ படத்தை சிவாஜி புரடெக்‌ஷன் தயாரித்தது. பொங்கலுக்கு படம் ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார்கள். இரண்டு பாடல் காட்சிகளும் பல வசனக் காட்சிகளும் படமாக்க வேண்டிய சூழ்நிலையில் இயக்குநர் வாசுவுக்கு 14 நாட்கள் மட்டுமே கைவசம் இருந்தன. அதற்குள் படத்தை முடித்து இளையராஜா பின்னணி இசையைச் சேர்த்துக் கொடுத்ததும் தணிக்கைக்கு அனுப்ப வேண்டும். டிசம்பர் 30-ம் தேதி அன்று ‘மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ’ பாடல் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தார் வாசு. அப்போது அவருடைய அம்மா இறந்துவிட்டார் என்கிற தகவல் அவருக்கு மட்டும் சொல்லப்பட்டது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், டான்ஸ் மாஸ்டர் பாபுவிடம், எடுக்க வேண்டிய ஷாட்களை படம்பிடிக்கும்படி சொல்லிவிட்டு அம்மாவின் இறுதிச்சடங்கிற்குக் கிளம்பிவிட்டார் வாசு.

ஆனால், அடுத்த ஒருமணி நேரத்தில் ரஜினியின் காதுக்கு வேறொருவர் வழியாக துக்கச் செய்தி வந்து சேர்ந்தது. “வாசு படத்தோட எடிட்டிங் பார்த்துட்டு வர போயிருக்கார்ன்னு நினைச்சேன். ஆனா, அவங்க அம்மா இறந்துட்டு இருக்காங்க. நாம இங்க நடிச்சிட்டு இருக்கோம். இது கொஞ்சம்கூட நல்லா இல்ல. பேக் அப்” என்று சொல்லிவிட்டு நேரே வாசு வீட்டுக்குப் போய் முதல் ஆளாக அஞ்சலி செலுத்தினார் ரஜினி.

அதன்பின்னர், மூன்றாவது நாளே படப்பிடிப்பைத் தொடங்கிய வாசுவிடம், “இந்தப் படம் பொங்கலுக்கு வரலேன்னா கடல் வற்றிப்போயிடாது வாசு. தயவு செஞ்சு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க” என்றார் ரஜினி. அதற்கு வாசு, “சார்… தமிழ் மட்டும்ன்னா பரவாயில்லை. நாம டயலாக் கொடுத்து தெலுங்கு படமும் ஒரே நேரத்துல ஷூட்டிங் போயிட்டிருக்கு. நம்மால அதுவும் நின்னுடக்கூடாதே” என்றார்.

அதற்கு ரஜினி, “எல்லாரும் ஒரு நாள் கடவுள்கிட்டத்தான் போகப்போறோம்... உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே. நீங்க நான் ஸ்டாப்பா ஷூட் பண்ணினாலும் நான் உங்ககூட இருப்பேன்” என்று சொல்லிவிட்டு இரவு பகலாக தொடர்ந்து 48 மணி நேரம் நடித்துக் கொடுத்தார் ரஜினி. திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகி வெற்றி மகுடம் சூடிக்கொண்டது ‘மன்னன்’.

(சரிதம் பேசும்)

படம் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE