`என் மகளை கண்டுபிடித்துக் கொடுங்கள்’‍- நடிகை மீரா மிதுனின் தாயார் சென்னை காவல் ஆணையரிடம் புகார்

By ரஜினி

’’என் மகள் நடிகை மீரா மிதுனைக் காணவில்லை. அவரைக் கண்டுப்பிடித்துக் கொடுங்கள்’’ என்று அவரின் தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் ’8 தோட்டாக்கள்’, ’நம்ம வீட்டு பிள்ளை’, ’தானா சேர்ந்த கூட்டம்’ முதலான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் கடந்த ஆண்டு பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுன், மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் பெற்ற நிலையில், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. அப்போது விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றபோது நடிகை மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல அவர் எங்குள்ளார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் அவரது குடும்பத்தாரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் தாயார் சியாமளா தனது மகளை கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்துத் தருமாறும் கூறி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவரை காணவில்லை என தற்போது அவருடைய தாயாரே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE