ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 81

By திரை பாரதி

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. இரண்டு கதாநாயகர்கள் நடிக்க வேண்டிய அந்தக் கதைக்கு நடிகர்களையும் முடிவு செய்துவிட்டார் இயக்குநர் ஸ்ரீதர். ஒப்பந்தம் செய்யாதது மட்டும்தான் பாக்கி. அந்த சமயத்தில் அவரிடம் இரண்டு இளைஞர்கள் உதவி இயக்குநர்களாக இருந்தார்கள். இரண்டுபேருமே திரையுலகப் பின்னணி கொண்டவர்கள். ஒருவர், ‘பாசமலர்’ உள்ளிட்ட சிறந்த படங்களைத் தயாரித்தவரும் குணச்சித்திர நடிகருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகன் பாரதி (பின்னால் இயக்குநர் - நடிகர் சந்தான பாரதி). இன்னொருவர், எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருபெரும் சூப்பர் ஸ்டார்களுக்கு ஒப்பனைக் கலைஞராக நெடுங்காலம் பணிபுரிந்த பீதாம்பரத்தின் மகன் வாசுதேவன் (பின்னால் இயக்குநர் பி.வாசு).

இருவருமே இயக்குநர் ஸ்ரீதரை நெருங்கி, “சார்... ‘16 வயதினிலே’ படம் ஹிட்டாகி ஓடிக்கிட்டு இருக்கு அதுல நடிச்சிருக்கிற கமல், ரஜினி ரெண்டு பேரையும் நம்ம படத்துல போடலாம் சார்... இந்தக் கதைக்கு அவ்வளவு ஆப்டா இருப்பாங்க” என்றார்கள்.

ஸ்ரீதரோ கடுப்பாகிவிட்டார். “எனக்கே காஸ்டிங் அட்வைஸ் கொடுக்குற அளவுக்கு பெரிய மேதாவிகளாடா நீங்க..?” என்று கர்ஜித்தார். ஆனால், பாரதியும் வாசுதேவனும் அடங்குகிற மாதிரி தெரியவில்லை. “இல்ல சார்... அந்தப் படம் எவ்வளோ பெரிய ஹிட்! அதுல நடிச்ச அந்த ரெண்டு பேருக்கும் போற இடங்கள்ல எல்லாம் ஆல் கிளாஸ் அப்ளாஸ் சார். அதுவுமில்லாம, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ன்னு தலைப்பு வெச்சிருக்கீங்க. அவங்க யூத் மாஸை பிடிச்சிருக்காங்க சார். நம்ம கதைக்குப் பக்காவா செட் ஆகும்” என்றார்கள். “டேய்... சினிமாக்காரங்களோட பசங்ககிறதால விடுறேன். போய் மத்த வேலையப் பாருங்க. இல்லன்னா வேலையைவிட்டு அனுப்பிச்சுடுவேன்” என்றார் ஸ்ரீதர்.

உதவி இயக்குநர்கள் தந்த சாய்ஸ்

அதற்குமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று வருத்தத்துடன் பாரதியும் வாசுவும் அமைதியாக வேலையைப் பார்க்கப் போனார்கள். மறுநாள் அலுவலகத்துக்கு வந்த ஸ்ரீதர் இருவரையும் அழைத்து.. “டேய்... கமலையும் ரஜினியையும் போய் அழைச்சுக்கிட்டு வாங்க” என்றார். கமலின் நண்பனாக இருந்த பாரதி ஓடிப்போய் கமலை அழைத்துக்கொண்டு வர, வாசு தன்னுடைய பங்குக்கு ரஜினியை அழைத்துகொண்டு வந்தார். அப்படித்தான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் முதலில் பேசி முடிக்கப்பட்ட முன்னணி நடிகர்களுக்குப் பதிலாக கமலும் ரஜினியும் நடித்தார்கள்.

படப்பிடிப்பின்போது ரஜினி வேகமாக டயலாக் பேசும் விதம், மின்னல் வேக உடல்மொழி ஆகிவற்றைப் பார்த்த ஸ்ரீதர், “என்னய்யா இவன்... இப்படி ஷாட்டுக்கு ஷாட் வித்தை காட்றான். இவன் நடிப்பு பயிற்சி எடுத்தவனா? இல்ல சர்க்கஸ் ஆர்டிஸ்டா? தமிழை இவ்வளவு வேகமா பேசினா ஆடியன்ஸுக்குப் புரியாமா... இந்தப் பொடிப் பசங்களை நம்பினது சரியா வருமா?” என்று கேட்டாலும் போகப் போக ரஜினியின் நடிப்பையும் ஸ்டைலையும் ரசிக்கத் தொடங்கிவிட்டார்.

படப்பிடிப்பு முழுவதும் பாரதியும் வாசுவும் கமல், ரஜினி இருவருடைய நடிப்பையும் அணுவணுவாக ரசித்துக் கூற, அதைப் பார்த்து கொந்தளித்த ஸ்ரீதர், “டேய்... பசங்களா. இங்க வாங்க... நான் என்ன லென்ஸ் போடுறேன். எப்படி ஷாட் வைக்கிறேன்னு பார்த்து கத்துகிறதை விட்டுட்டு. நடிகன்களோட நடிப்பை ரசிக்கிறீங்களே. நீங்கள் சினிமா கத்துக்க வந்தீங்களா இல்ல சினிமாவை ரசிக்க வந்தீங்களா?“ என்று கேட்டார்.

அதற்கு வாசு, “சார் மொதல்லா நாங்க ரசிகர்கள்.” என்றார். “வெரிகுட்... இப்படி உண்மையச் சொன்னதுக்காக உன்னைப் பாராட்டுறேன்” என்றவர்.. ஒவ்வொரு சீனையும் எடுத்து முடித்ததும் வாசுவையும் பாரதியையும் பார்த்து “ஃபேன் பாய்ஸ்… ஓகேவாடா?” என்று கேட்பார். அவர்களும் அதை ரசித்தார்கள்.

தட்டிப்போன வாய்ப்பு

அப்படி கமல், ரஜினியை ரசித்த வாசுவும் பாரதியும் இணைந்து இயக்கிய முதல் படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’. அந்தப் படத்தில் பிரதாப் போத்தன் செய்த கதாபாத்திரத்தை ரஜினியும் சுரேஷ் செய்த கதாபாத்திரத்தை கமலும் செய்தால் சூப்பரா இருக்கும் என்று கருதிய இருவரும் முதலில் ரஜினியைச் சந்தித்துக் கதை சொன்னார்கள்.

“எங்களுக்கு நீங்கள் 7 நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும். உங்களுடைய போர்ஷனை ஷூட் செய்து முடித்துவிடுவோம்” என்றார்கள். ஆனால், அதே சமயத்தில் இயக்குநர் ஸ்ரீதரும் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டதால், அறிமுக இயக்குநர்களான பாரதிக்கும் வாசுவுக்கும் ரஜினியால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக பல உதவிகளைச் செய்தார் ரஜினி. பிரெசிடென்ஸி ஹோட்டலில் தங்கியிருந்த ரஜினி, காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தன்னுடைய அறையை திரைக்கதை விவாதத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும்படி அவர்களிடம் சாவியைக் கொடுத்துவிட்டு படப்படிப்புக்குக் கிளம்விட்டார். ஒரு கட்டத்தில், கமலும் நடிக்க முடியாது என்ற நிலை வந்தபோது, ஸ்ரீதரிடம் வாய்ப்புத் தேடி வந்துகொண்டிருந்த சுரேஷையே ஹீரோவாகப் போட்டு படத்தை எடுத்து வெற்றியும் கொடுத்தார்கள்.

இளைய திலகம் பிரபுவும் சிபாரிசு

அந்தப் படத்துக்குப் பிறகு வரிசையாக பல கன்னடப் படங்களை இயக்கி பிஸியான பி.வாசு, பிரபுவை வைத்து ‘என் தங்கச்சிப் படிச்சவ’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பினார். அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில், மீண்டும் பிரபுவை வைத்து ‘பிள்ளைக்காக’ படம் இயக்கினார். அந்தப் படமும் வெற்றிபெற்றது. இந்த சமயத்தில் அன்னை இல்லத்துக்கு வந்திருந்த ரஜினியிடம், “பி.வாசு திறமையான இளைஞர். அவருக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள்” என்று ரஜினியிடம் சிபாரிசு செய்தார் இளையதிலகம் பிரபு.

அப்போது “பாரதியையும் வாசுவையும் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அவருக்கு கால்ஷீட் கொடுப்பேன்” என்றார் ரஜினி. ஆனால், அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளுக்கு ரஜினியிடம் கால்ஷீட் இல்லாமல் போனதால், பி.வாசு அடுத்து விஜயகாந்தை வைத்து ‘பொன்மனச் செல்வன்’ படத்தையும் சத்யராஜை வைத்து ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ படத்தையும் இயக்கி வெற்றி கொடுத்தார்.

இந்த சமயத்தில் சத்யா மூவீஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.எம்.வீரப்பன் பி.வாசுவை அழைத்து “சத்யா மூவீஸுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. அதைச் சிறப்பிக்கும் விதமாக ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறோம்.. நீங்கள்தான் இயக்குநர்” என்றார். இன்ப அதிர்ச்சி அடைந்த வாசு, ரஜினி சாரே நமக்குச் சொல்லவில்லை. தயாரிப்பாளர் அல்லவா நமக்குக் கூப்பிட்டுச் சொல்கிறார் என்று நினைத்துப் பெருமைப்பட்டார் வாசு. அந்தப் படம் தான் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட ’பணக்காரன்’.

திரைக்கதையை அழகாக மாற்றிய பி.வாசு

அமிதாப் பச்சன் நடிப்பில் 1981-ல் வெளியாகி வெற்றிப்பெற்ற 3 மணிநேரப் படம் ‘லாவரிஸ்’. அதை தெலுங்கில் ‘நாதேசம்’ என்கிற தலைப்பில் ரீமேக் செய்திருந்தார்கள். லாவாரிஸ் படத்தை தமிழிலும் ரீமேக் செய்யலாம் என்பது ஆர்.எம்.வீரப்பனின் யோசனையாக இருந்தது. ஆனால், ரஜினிக்கு ‘லாவரிஸ்’ படத்தின் 3 மணி நேர நீளம் பிடிக்கவில்லை. இதைப் பற்றி வாசு என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் என்று பொருத்திருந்தார் ரஜினி. ‘லாவரிஸ்’ படத்தை பார்த்த வாசு, தேவையில்லாத கதாபாத்திரங்கள் எதற்காக இந்தக் கதையில் இத்தனை இருக்கின்றன என்று வெகுண்டு எழுந்தார்.

தமிழ் ஆடியன்ஸ்’ எதை ரசிப்பார்கள் எதை ஒதுக்குவார்கள் என்கிற வித்தையை ஸ்ரீதரிடமிருந்து வாசு கற்றுகொண்டிருந்தார். ஆனால், அவரது பாணியிலிருந்து விலகி முற்றிலும் தனக்கென ஒரு தனித்த பாணியை உருவாக்கிக் கொண்டிருந்தார். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதில் ‘எமோஷன்ஸ்’ தான் பிரதானமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் வாசு. ‘லாவாரிஸ்’ படத்திலிருந்து 3 கதாபாத்திரங்களை மட்டும் முதன்மையாகத் தேர்வு செய்துகொண்டு, மற்ற பெரிய கதாபாத்திரங்கள் பலவற்றையும் கழித்துக்கட்டினார். இறுதியில் வாசு எழுதிய திரைக்கதையைக் கேட்பதற்காக அவரை வீட்டுக்கு அழைத்தார் ரஜினி.

P.வாசு

மெழுவர்த்தி வெளிச்சத்தில் கதை...

மாலை 7 மணி. தனது போயஸ் கார்டன் வீட்டில் ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்ந்திருந்த ரஜினி, “வாங்க வாசு சார்..!” என்று வரவேற்று அழைத்துப்போய் உட்கார வைத்துவிட்டு “சிகரெட்...” என்று நீட்டினார். “இல்ல சார்.. எனக்குப் பழக்கமில்ல” என்றார் வாசு. “உடம்புக்குக் கெட்டது என்பதால் புகைக்கிறதில்லையா... இல்ல என் முன்னாடி புகைக்கக்கூடாதுன்னு தயங்ககிறீங்களா?” என்று கேட்டார் ரஜினி. “இல்ல சார்... இதுவரைக்கும் சிகரெட் பிடிச்சது கிடையாது” என்றார் வாசு. “சாரி சார்... நீங்க கதை சொல்லி முடிக்கிற வரைக்கும் நான் ஸ்மோக் பண்ண மாட்டேன். என்னால யாரும் பாசிவ் ஸ்மோக்கர் ஆகக்கூடாது” என்று எடுத்து சிகரெட்டை உள்ளே வைத்துவிட்டார் ரஜினி.

பிறகு, வாசுவின் தோள்மீது கைபோட்டுக்கொண்டு, “என்னை தயவு செய்து ஒரு சூப்பர் ஸ்டார்... பெரிய நடிகன் அப்படியெல்லாம் பார்க்காதீங்க. உங்க நெருக்கமான நண்பர்கள் பட்டியல்ல இந்த ரஜினியும் இருக்கான்னு நினைச்சுக்கோங்க…” என்றார். வாசுவுக்கு ரஜினியின் யதார்த்தம் புரிந்துவிட்டது. இயக்குநருக்கும் தனக்கும் ஆரோக்கியமான முரண்பாடுகள் வரலாம், ஆனால், ஈகோ இருந்துவிட்டால் அது படத்தை பாதிக்கும் என்கிற உண்மையை அறிந்தவராக ரஜினி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார்.

‘லாவாரிஸ்’ படத்திலிருந்து வாசு தனக்குத் தேவையான கதையை மட்டும் எடுத்துகொண்டு எழுதியிருந்த திரைக்கதைக் கேட்டு வியந்துபோனார் ரஜினி. தாயின் களங்கத்தைப் போக்கிட போராடும் ஒரு மகனின் கதையாக, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் செய்துவைக்கும் ஒரு மகனின் கதையாக அதை உருவாக்கியிருந்தார் வாசு. உறவுகள் புனிதமானவை. அவற்றைப் பணம் என்கிற போர்வைக்குள் போட்டுப் புதைத்துவிடக்கூடாது என்கிற நீதியை மிக அழகாக கதையாக்கி, அதற்கு ‘பணக்காரன்’ என்கிற தலைப்பும் கொடுத்த வாசுவைப் பார்த்து அசந்துதான் போனார் ரஜினி.

அந்த வசனத்தை மாற்றச் சொன்ன ரஜினி

‘பணக்காரன்’ படத்தில் ஒரு முக்கியமான காட்சியின் படப்பிடிப்பு சென்னையில் இருந்த ‘ஜெம்ஸ் கிரானைட்’ கம்பெனியில் நடந்தது. அன்றைக்கு, ரஜினி எத்தனை சிறந்த வசன கர்த்தா என்பதைத் தெரிந்துகொண்டார் வாசு. நடந்த சம்பவம் இதுதான். ரஜினி சோக நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்த ‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி... உண்மையில மெழுவர்த்தி’ பாடல் காட்சி முடிந்ததும் கௌதமி ரஜினியிடம் வந்து, “உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல முத்து! ஒருநேரம் சிரிக்கிறே... மத்தவங்களையும் சிரிக்க வைக்கிறே. இப்போ என்னடான்னா அழறே… என்னதான் உன்னோட பிரச்சினை?” என்று கேட்பார். அதற்கு, “இத்தனை நாள் நான் யாரை என்னோட அப்பான்னு நினைச்சேனோ... அவர் என்னோட அப்பா இல்ல; நானொரு அநாதைன்னு இவ்வளவு பெரியவனா வளர்ந்தபிறகு தெரியும்போது அந்த வேதனை என்னன்னு எனக்குத்தான் தெரியும்” என்று ரஜினி பேசும் டயலாக்கை எழுதியிருந்தார் வாசு.

அதைப் படித்துப் பார்த்த ரஜினி, “அநாதைங்கிற வார்த்தை ரொம்ப வலியானது சார். அதை ரொம்ப எளிமையா பயன்படுத்திட முடியாது. அதைச் சொல்றதுக்கு முன்னாடி நல்ல கனமான விஷயம் இருந்தாதான் அந்த வார்த்தையை அழுத்திகிட்டு இருக்கிறது பாரம் ஆடியன்ஸ் மனசுல இறங்கும். நிராதரவானவங்க மேல அவங்களுக்கு கருணையும் அன்பும் வரணும். அந்த மாதிரி இந்த வசனத்தோட தொடக்கத்தை மாத்த முடியுமா சார்? ஏன் சொல்றேன்னா... நாம பொறக்கறதுக்கு அப்பா - அம்மான்னு ரெண்டுபேர் காரணமாக இருக்காங்க. அதுவே நாம செத்துப்போயிட்டோம்ன்னா... நாம யாருன்னு நமக்கே தெரியாது சார். ஆனா, அப்பக்கூட நம்ம உடம்பை தூக்கிப்போட நாலுபேர் வர்றாங்க இல்லையா சார். இப்போ பாருங்க... நமக்குப் பொறப்பைக் கொடுத்த அப்பா - அம்மாவை நமக்குத் தெரியுது. ஆனா, நம்மள தூக்கிப் போடுற அந்த நாலுபேரை தெரியதில்ல சார்” என்றார்.

இதைக் கேட்டு வாசு கொஞ்சம் ஆடித்தான் போனார். எவ்வளவு முக்கியமான விஷயத்தை எவ்வளவு சிம்பிளாச் சொல்லிவிட்டார் ரஜினி. உடனே, “ரெண்டு நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க சார்” என்று கேட்டு வாங்கிக்கொண்ட வாசு, ரஜினியின் எண்ணத்தை மிக எளிதாக, மிகச் சிறு வசனமாக மாற்றி எழுதினார். அந்த வசனம் இதுதான்: “இந்த உலகத்துல எல்லா உயிரையும் ரெண்டு உயிர் கொண்டு வருது. நாலு உயிர் கொண்டு போவது. கொண்டு வர்ற உயிரை எல்லாருக்கும் தெரியும். ஆனா, கொண்டு போற உயிரை யாருக்கும் தெரியாது. நான் ஒரு அநாதை”.

இந்த வசனம் வரும் காட்சியில் அழுதுகொண்டே கைதட்டினார்கள் ரஜினியின் ரசிகர்கள். அவருடைய அட்டகாசமான நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘பணக்காரன்’ படத்தில் பெண் தோற்றத்தில் வந்து அசத்தினார் ரஜினி. தனது தாயின் திருமணப் பாடலாக ஒலித்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும் தான்..’ பாடல் திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடலாக மாறிப்போனது. அந்தப் பாடல் தொடங்கி அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தன. ரஜினியும் கௌதமியும் கடிகார முட்களுடன் இணைந்து பாடி ஆடிய, ‘இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது’ என்ற பாடல் புதுமையாக படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.

ரஜினியின் திரை வாழ்க்கையில் ‘பணக்காரன்’ விநியோகஸ்தர்களையும் திரையரங்கு உரிமையாளர்களையும் பணக்காரன் ஆக்கியது மட்டுமல்ல... ரசிகர்களையும் மனதளவில் பணக்காரர்கள் ஆக்கியது அப்படத்தின் க்ளைமாக்ஸ் வசனத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். அந்த வசனத்தை எழுத வைத்ததும் ரஜினிதான்!

(சரிதம் பேசும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE