குன்னக்குடி வைத்தியநாதன் அசத்திய ‘கொட்டாம்பட்டி ரோடு’ பாட்டு!

By வி. ராம்ஜி

இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை வைத்துக்கொண்டு காட்டிய ஜாலத்தை ரசிகர்கள் இன்றைக்கும் சிலாகிப்பார்கள். பொதுவாக இசை நிகழ்ச்சி என்றால், அரங்கில் எங்கு உட்கார்ந்தாலும் கேட்கலாம். ஆனால் குன்னக்குடி வைத்தியநாதன் கச்சேரி என்றால் முன் வரிசையிலோ அல்லது அவர் முகம் தெரிகிற விதமாகவோ உட்காரவே ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். கச்சேரி ஆரம்பித்து சூடுபிடிக்கும்போது, இவர் வயலினை இப்படி வைத்துக்கொள்வார், அப்படி வைத்துக்கொள்வார். வயலினைப் பேசவிடுவார். பாடவிடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவரின் முகபாவனைகளுக்கும் சிரிப்புக்கும் குறும்புகளுக்கும் தனியே ரசிகக் கூட்டமே உண்டு. பக்திப் பாடல்கள், சினிமாப் பாடல்கள், சாஸ்திரியப் பாடல்கள் என்கிற பாடல்களையெல்லாம் எல்லைப் பிரித்துப் பார்க்காமல், கோடு கிழித்துக்கொள்ளாமல் ’எல்லாம் இசையே... இசை மட்டுமே’ என்று நமக்கு உணர்த்தியவர் குன்னக்குடி வைத்தியநாதன்.

வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன், சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அப்படி, குன்னக்குடி இசையமைத்து, அவரே பாடிய பாடல், இன்றைக்கு வரைக்கும் மிகப்பெரிய ஹிட் பாடலாக இருக்கிறது. அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம்... ‘தோடி ராகம்’.

இசை சம்பந்தப்பட்ட கதையொன்று குன்னக்குடி வைத்தியநாதனுக்குள் உருவானது. அந்தக் கதையை சினிமாவாக்குவதற்கு இன்னும் இன்னும் மெருகேற்றிவைத்திருந்தார். ஆனால் இசை சம்பந்தப்பட்ட கதை என்பதால் யாரை ஹீரோவாகப் போட்டால் நன்றாக இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை அவரால்!

அந்தச் சமயத்தில், திருச்சியில் ஒரு கச்சேரி. மிகப்பெரிய அளவில் கூட்டம். நள்ளிரவாகிவிட்டது. காரில் சென்னைக்குக் கிளம்பும் தருணத்தில், திருச்சி பேருந்து நிலையம் அருகே காருக்கு பெட்ரோல் போட்டார்கள். அப்போது பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அவரைப் பார்த்துவிட்டு, காரைவிட்டு இறங்கினார் குன்னக்குடியார். அழைத்துப் பேசினார். அவரும் மிகப்பெரிய இசைக்கலைஞர்தான். பிரபலம்தான். அவர் மதுரை டி.என்.சேஷகோபாலன்.

அப்போதெல்லாம் எக்ஸ்பிரஸ் பஸ் என்று தனியே உண்டு. ’’மதுரையில் எக்ஸ்பிரஸ் பஸ் கிடைக்கலை. சென்னை போகணும். திருச்சிலயாவது கிடைக்குமானு பாத்துக்கிட்டிருக்கேன்’’ என்றார் சேஷகோபாலன். ‘’வாங்க நம்ம கார்லயே போயிடலாம்’’ என்று அவரை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார் குன்னக்குடி வைத்தியநாதன்.

இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டார்கள். பேச்சு, பல திசைகளுக்கும் பரவியது. பிறகு தான் உருவாக்கி வைத்திருக்கும் கதையைச் சொன்னார் குன்னக்குடி. ‘’இந்தப் படத்துல உங்களைப் போல இசைஞானம் உள்ளவர்... அழகா இருக்கறவர் நடிச்சாத்தான் நல்லாருக்கும்’’ என்று அவர் சொல்ல... வெட்கத்தில் நெளிந்த சேஷகோபாலன் ‘வேணாம்ணா’ என மறுத்தார். ஆனாலும் குன்னக்குடியார் விடவில்லை.

டி.என்.சேஷகோபாலன், நளினி முதலானோர் நடிக்க ‘தோடி ராகம்’ படம் உருவானது. இயக்கம் ராம்கி என்கிறது டைட்டில் கார்டு. கிராமத்தில் நடக்கும் கதை. காதலையும் இசையையும் சொல்லும் கதை.

இசையின் உன்னதங்களை உணர்த்துகிற விதமாகவே இப்படத்தின் பாடல்களை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன். ‘தோடி ராகம் பாடினேன்’ என்றொரு பாடலும் உண்டு. வெகுஜன ரசிகர்களை எப்போதும் கவருகிற வித்தையை அறிந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். இந்தப் படத்திலும் அப்படியொரு பாடலைக் கொடுத்தார். அந்தப் பாடலை அவரே பாடினார். அதுதான் ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’ பாட்டு. ‘நான் ரொட்டியத்தான் திம்பேனா குட்டியத்தான் பாப்பேனா’ என்று நீளும் பாடல் அது.

‘மீசை எனக்கிருக்கு மோகம் நிறைஞ்சிருக்கு / சிங்காரத் தோப்பிருக்கு சிவந்த பழம் அங்கிருக்கு / சிணுங்காம அங்கே வந்தா வெக்கப்படாம வாங்கிக்கலாம்...’ என்று ’பிர்கா’வெல்லாம் விட்டு வெளுத்து வாங்கியிருப்பார்.

’இளநீரு காய்ச்சிருக்கு மரம் ஏற ஆளிருக்கு / தாகம் உனக்கிருந்தா தணிய வைக்க நானிருக்கேன் / பரிசம் போடணும்னா பக்கத்துலே வாடியம்மா’ என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பை உதிர்ப்பார். அதேபோல, ’முகமோ சிவந்திருக்கு மொழுமொழுன்னு உடம்பிருக்கு / இடையோ இளைச்சிருக்கு இளவட்டம் தனிச்சிருக்கு / இருட்டுமுன்னே கட்டிக்கவா விடியவிடிய ஒட்டிக்கவா’ என்று என்று நாட்டுப்புற பாடலாகப் பாடி பிரமிக்க வைத்திருப்பார் குன்னக்குடியார்.

1983 அக்டோபர் மாதம் 14-ம் தேதி வெளியானது ‘தோடி ராகம்’. கதையென்று பெரிதாக ஈர்க்கவில்லை. திரைக்கதையும் தொய்வாகவே இருந்தது. ஒளிப்பதிவும் வண்னங்களும் மாறிமாறி பல்லிளித்தன. படமும் சரியாக ஓடவில்லை. டி.என்.சேஷகோபாலன்தான் இன்னும் பாவம்... நளினியிடம் நாலடி தள்ளிநின்றே காதல் செய்தார். படம் முழுவதும் கூச்சமும் பயமும் அவர் கண்களில் தெரிந்தன.

ஏழே நாளில் தியேட்டரை விட்டு ஓடியது. ரிலீஸுக்குப் பின்னர் இந்தப் படத்தை எந்தத் தியேட்டரிலும் ஓட்டவில்லை. அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைக்கு ஒருமாதம் இருக்கும் போது, ஒருநாள் மட்டும் இரண்டுநாள் மட்டும் என்று சுமாரான படங்களையெல்லாம் தியேட்டரில் போடுவார்கள். அப்படிக்கூட ‘தோடி ராகம்’ திரையிடப்படவில்லை. ஆனால், ’கொட்டாம்பட்டி ரோடு’ பாடல் மட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பிக்கொண்டே இருப்பார்கள். காரைக்குடி, நத்தம், சிங்கம்புணரி, திண்டுக்கல், மேலூர், மதுரை, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இந்தப் பாடலை டீக்கடைகளில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். பாட்டுக்கச்சேரிகளில், இந்தப் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.

1983 அக்டோபர் 14-ம் தேதி வெளியானது ‘தோடி ராகம்’. இன்றுடன் 39 ஆண்டுகளாகின்றன. இந்தத் தலைமுறையினர் ஒருமுறை ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’ பாடலைக் கேட்டால், யாருக்குத் தெரியும்... காலர் டியூனாகவோ, டயலர் டியூனாகவோ கூட வைத்துக்கொள்வார்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE