பள்ளி மாணவர்களுக்காக திரையிடப்படவிருக்கும் ‘தி ரெட் பலூன்’ குறும்படத்தின் கதை

By பா.ஜெயவேல்

மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி இன்று, ஆஸ்கர் விருது பெற்ற பிரெஞ்ச் குறும்படம் 'தி ரெட் பலூன்' திரையிடப்படவுள்ளது.

1956-ல் வண்ண திரைப்படமாக வெளிவந்த இப்படம் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது. இதன் திரைக்கதை மாணவர்களுக்கு மிகப் பிடித்தமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்படத்தின் கதை இதுதான்: பாஸ்கல் என்ற சிறுவன் பள்ளிக்குச் செல்லும் போது தெரு விளக்குக் கம்பத்தில் சிக்கிக்கொண்ட சிவப்பு ஹீலியம் பலூனை பார்க்கிறான். அந்த பலூன் மீது ஏக்கப்படும் சிறுவன் மின் கம்பத்தில் ஏறி அதை லாகவமாக எடுத்துக் கொள்கிறான். பள்ளிக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் பலூனுடன் சிறுவன் நின்றிருக்கும் போது, அந்த பலூன் காற்றில் அசைந்து அருகில் இருப்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறது. அதையெல்லாம் சிறுவன் பொருட்படுத்தாமல் மகிழ்கிறான்.

பேருந்து வந்ததும் பலூனோடு ஏற முயல்கிறான். ஆனால், அவனைப் பேருந்தில் நடத்துநர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சாலைகளில் வேகமாக ஓட்டமெடுத்து சிறுவன் பள்ளியைச் சென்றடைகிறான். பலூனோடு வரும் சிறுவனுக்குப் பள்ளியிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வெளியே வந்த சிறுவன், அங்கிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் அந்த பலூனை கொடுத்துவிட்டுச் செல்கிறான். பள்ளி முடிந்ததும் அந்த பலூனை மீண்டும் எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குகிறான். அப்போது பெய்யும் மழையில் பலூனை நனையவிடாமல் சாலையில் நடக்கும் ஒவ்வொருவரின் குடையிலும் அடைக்கலம் அதற்கு வேண்டுகிறான். விருப்பும், வெறுப்பும் கலந்த நிலையிலேயே அவர்கள் அந்த பலூனை குடைக்குள் அனுமதிக்கிறார்கள்.

பின்னர் வீட்டிற்குத் திரும்பியதும் அவனின் பாட்டி அந்த பலூனை வீட்டிற்குள் அனுமதிக்காமல் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசுகிறார். அந்த பலூன் சிறுவனுக்காக ஜன்னலின் அருகே காத்துக் கிடக்கிறது. பிறகு அந்த பலனுக்குச் சிறுவன் ஆறுதல் சொல்கிறான். அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு பலூன் வெளியே காத்துக் கிடக்கிறது.

மறுநாள் பள்ளிக்குச் செல்லும் போது அந்த பலூன் சிறுவன் கையில் சிக்காமல் அவனையே பின்தொடர்கிறது. பேருந்தில் பாஸ்கல் பயணம் செய்யும் போது அவனையே பலூன் பின்தொடர்வதைக் கண்டு அனைவரும் அதிசயிக்கிறார்கள். தெருவில் பலூனுடன் செல்லும் பாஸ்கல் நீல நிற பலூனை வைத்திருக்கும் சிறுமியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்போது இரண்டு பலூன்களும் ஒன்றை ஒன்று சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்கின்றன. இரு பலூன்களும் ஒன்றாகவே இருக்க ஆசைப்படுகின்றன. ஆனாலும் அவர்கள் தங்களுடைய பலூன்களை பிரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள்.

பாஸ்கல் பள்ளிக்குச் சென்றதும் மற்ற மாணவர்கள் பலூனைக் கண்டு கூச்சலிடுகிறார்கள். இதனால் பாஸ்கலை தனி அறையில் பள்ளியின் முதல்வர் அடைத்து வைக்கிறார். அப்போது பாஸ்கலை விடுவிக்கக் கோரி பள்ளி முதல்வரையே பலூன் சுற்றிச்சுற்றி வருகிறது. பள்ளி முடிந்ததும் பாஸ்கல் வீடு திரும்பும் போது அவனை மீண்டும் பலூன் பின் தொடர்கிறது. கடைவீதி, சாலை, பள்ளி, குடியிருப்பு என சிறுவனுடன் ஒன்றாகவே இணைபிரியாமல் பயணிக்கிறது பலூன். இதைக் கண்ட அப்பகுதி சிறுவர்கள், அவனிடமிருந்து பலூனை கைப்பற்ற முயல்கிறார்கள். அவர்களிடமிருந்து பாஸ்கல் தப்பி தன்னுடைய வீட்டிற்கு ஓட்டமெடுக்கிறான்.

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் தனது பாட்டியுடன் சர்ச்சுக்கு சென்று வீடு திரும்புகிறான் பாஸ்கல், அப்போது அப்பகுதி சிறுவர்கள் அவனை பின் தொடர்கிறார்கள். அவனிடமிருந்து பலூனைப் பறிக்க முயல்கிறார்கள். அவர்களிடம் சிக்காமல் பலூனை பாதுகாக்கச் சிறுவன் பலவழிகளில் போராடுகிறான். அவனை விடாமல் துரத்தும் சிறுவர்கள், ஒருவழியாக அவனிடமிருந்து பலூனைப் பறித்து உடைத்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

இதனால் பெருந்துயரடையும் சிறுவன் கவலையோடு அந்த பலூன் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறான். அப்போது பாரீஸ் நகரத்தில் சிறுவர்கள், பெரியவர்கள், நடை வியாபாரிகள் என அனைவரின் கைகளிலிருந்த வண்ண வண்ண பலூன்கள் தானாக விடுபட்டு பாஸ்கல் இருக்கும் இடத்தை நோக்கிப் படையெடுக்கின்றன. ஒட்டுமொத்தமாகத் தன்னை நோக்கி வரும் பலூன்களைக் கண்டு அந்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைக்கிறான். பலூன்கள் நெருங்கியதும், அதன் நூல்களை தன் கைகளால் இறுகப் பற்றுகிறான். பலூன்கள் வானை நோக்கி மெல்ல உயர்கின்றன. மகிழ்ச்சியாக அந்தரத்தில் பயணித்து அந்த சிறுவன் மகிழ்வதோடு அந்த படம் நிறைவடைகிறது.

இந்தப் படம் தான் இன்று பள்ளி மாணவர்களுக்காக திரையிடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE