மன்னர் காலப் படங்களில் எப்படி தனித்துவம் பெறுகிறது ‘பொன்னியின் செல்வன்’?

By கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் புத்தக நேசர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படம் வெளியாகிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் பிரம்மாண்ட வரலாற்றுப் புனைவுத் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.200 கோடி வசூலித்திருப்பதாகப் படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 1950-களில் அமரர் கல்கி, தன்னுடைய ‘கல்கி’ வார இதழில் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களில் ஐந்து பாகங்கள் கொண்ட நூல் தொகுப்பாக வெளியாகிக் கடந்த எழுபது ஆண்டுகளில் ஒவ்வொரு தலைமுறையிலும் லட்சோப லட்சம் வாசகர்களால் படிக்கப்பட்டுவருகிறது.

இவ்வளவு பெரிய கதையைத் திரைப்படமாக்கும் முயற்சி இப்போது வெற்றிபெற்றிருக்கிறது. இந்தப் படம் பெரும்பாலான பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதாகவே தெரிகிறது. அதே நேரம் ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்கள், படிக்காதவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரிலும் படத்தால் திருப்தியடைந்தவர்களும் திருப்தியடையாதவர்களும் இருப்பதைக் காண முடிகிறது.

சிறந்த காட்சி அனுபவம்

கதையைப் படித்தவிட்ட பலர் தாங்கள் பெரிதும் நேசித்த அருள்மொழிவர்மன், வந்தியத் தேவன், குந்தவை, நந்தினி, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் ஆகிய கதாபாத்திரங்களையும் தாங்கள் மிகவும் ரசித்த கதைத் தருணங்களையும் பிரம்மாண்டத் திரையில் கண்டு பரவசமடைந்திருக்கிறார்கள். அதே நேரம் முதல் பாகப் படத்தில் பாதிக் கதைதான் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறபோதிலும் கதையின் பல முக்கியக் கதாபாத்திரங்களுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதில் ‘பொன்னியின் செல்வன்’ வாசகர்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல் கதையைப் படிக்காதவர்களில் சிலர் முக்கிய நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் செயல்களுக்கான காரணங்கள், பின்னணி ஆகியவை புரியவில்லை என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் திரைப்படங்களில் குறிப்பாக மன்னர் கால வரலாற்றுப் புனைவுகளில் இடம்பெற வேண்டிய உச்சங்கள், உணர்வெழுச்சியைத் தரும் தருணங்கள் பெரிதாக எதுவும் இல்லை என்றும் அதிருப்தியடைகிறார்கள். அதே நேரம் அவ்வளவு பெரிய கதையை மூன்று மணி நேரத் திரைப்படமாக்குவதில் உள்ள சவால்களைப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர். திரைக்கதை சார்ந்த குறை நிறைகளைக் கடந்து படம் ஒரு சிறந்த காட்சி அனுபவத்தைச் சாத்தியப்படுத்தியிருப்பதைப் படம் பார்த்தவர்களில் பெரும்பகுதியினர் அங்கீகரித்திருக்கின்றனர். இதுனாலேயே ’பொன்னியன் செல்வன் - 1’ மிகப் பெரிய வசூல் சாதனையை நோக்கி வெற்றிநடைப் போட்டுக்கொண்டிருக்கிறது.

மாறாத அடிப்படைகள்

இந்தப் பின்னணியில் படத்தில் குறையாகச் சொல்லப்படும் சில விஷயங்களையே படத்தின் சாதக அம்சமாகப் பார்க்க முடியும். படத்தில் சினிமாவுக்குத் தேவையான உணர்வெழுச்சித் தருணங்கள் இல்லை என்பது கல்கியின் கதையில் இருப்பதை அப்படியே எடுக்கும் மணிரத்னத்தின் முனைப்பாகத் தெரிகிறது. அப்படி என்றால் கல்கி எழுதிய கதையில் இல்லாத காட்சிகளை எப்படிச் சேர்த்தார் எனும் கேள்வி எழலாம். ஐந்து பாகத்தில் உள்ள கதையை இரண்டு பாகத் திரைப்படமாக எடுப்பதற்கு மொத்தக் கதையின் சில பகுதிகளை - குறிப்பாகத் திரைப்படம் எனும் வடிவத்துக்குப் பொருந்தாத பகுதிகளை நீக்க வேண்டியிருக்கும். இதை மணிரத்னம் தன்னுடைய பேட்டிகளிலேயே குறிப்பிட்டிருந்தார்.

அப்படி நீக்கப்படும் பகுதிகளினால் கதையில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப, அனைவருக்கும் புரியும் வகையில் கதையை நகர்த்திச் செல்ல சில விஷயங்களைப் புதிதாகச் சேர்க்க வேண்டியிருந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக பழையாறில் இருக்கும் குந்தவை காஞ்சியில் இருக்கும் அண்ணன் ஆதித்த கரிகாலனைச் சென்று சந்திக்கும் காட்சி நாவலில் இல்லை. ஆனால் ஆதித்த கரிகாலன் காஞ்சியிலிருந்து கிளம்பி வருவதற்கான காரணத்தைச் சொல்ல அந்தக் காட்சி தேவைப்பட்டிருக்கலாம் (அவன் காஞ்சியிலிருந்து கடம்பூருக்குச் செல்வதும் அதன் பிறகு கொல்லப்படுவதும் இரண்டாம் பாகத்துக்கு விட்டுவைக்கப்பட்டுள்ள பகுதிகள்).

இதிலிருந்து ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். கல்கியின் நாவலை வரிக்கு வரி அப்படியே திரைப்படமாக்க முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அதனால் திரைக்கதையில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அந்த மாற்றங்கள் கதையைத் தெளிவாகச் சொல்வதற்கு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனவே தவிர சினிமா ரசனைக்காக எதுவும் சேர்க்கப்படவில்லை. கதையின் அடிப்படைச் சட்டகத்திலும் கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்களிலும் மணிரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகிய திரைக்கதை ஆசிரியர்கள் எந்த மாற்றத்தையும் விளைவிக்கவில்லை. இந்த அணுகுமுறை சினிமாவாக ‘பொன்னியின் செல்வனை’ மேம்படுத்தியிருக்கிறதா கீழிறக்கியிருக்கிறதா என்பது தனி விவாதத்துக்குரியது.

மன்னர்களும் மனிதர்களே

‘பொன்னியின் செல்வன் - 1’ படத்தில் சோழ மன்னர் குலத்தவரையும் மக்களையும் அவர்தம் வாழ்க்கையையும் கல்கியின் கதையில் உள்ளபடி மட்டுமல்ல மிகவும் யதார்த்தமாகச் சித்தரிக்கும் தீவிர முனைப்பு தென்படுகிறது. 24 போர்களில் 64 விழுப்புண்களைக் கொண்ட பழுவேட்டரையர், வீரபாண்டியன் தலையைக் கொய்த ஆதித்த கரிகாலன், அந்தப் போரில் அவனுக்குத் துணை நின்ற வந்தியத்தேவன், சிங்கள மன்னன் மகிந்தனைத் தோற்கடித்த அருள்மொழிவர்மன் உட்பட அனைவரும் நம்மைப் போன்ற சாமானிய மனிதர்களாகவே இருக்கிறார்கள். போரில் வென்ற பிறகு ஆண்கள் குடித்துவிட்டு ஆடும்போது சிலர் பெண்களைப் போல் சேலையைச் சுற்றிக்கொண்டு ஆடுகிறார்கள்.

போரில் நீண்ட காலம் துணையின்றிச் செலவிடுவதற்கான வடிகாலாக இத்தகைய ஆட்டத்தைப் பார்க்க முடிகிறது. உடல்நலம் குன்றியிருக்கும் சுந்தர சோழருக்கு சீனர்களைப் போன்ற முக அமைப்புகொண்ட மருத்துவர்கள் இன்றைய ‘அக்குபஞ்சர்’ மருத்துவத்தைப் போல் முதுகு முழுவதும் ஊசிபோன்ற ஒன்றைக் குத்தி எடுத்து மருத்துவம் பார்க்கிறார்கள். அரண்மனைகளும் கோட்டைகளும் அசலானவையாக இருக்கின்றன. அவற்றின் உள்புறங்களில் விளக்குகள் அளிக்கும் ஒளியிலிருந்து எவ்வளவு வெளிச்சம் கிடைக்குமோ அவ்வளவு வெளிச்சம்தான் வருகிறது.

அதுமட்டுமல்ல சுந்தர சோழரின் அரண்மனையில் ஒரு முக்கிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது பிற்பகுதியில் பணிப்பெண்கள் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருப்பது மங்கலாகத் தெரிகிறது. வெளிப்புறங்களில் சாதாரண மக்கள் சிலர் மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்கின்றனர். பூங்குழலியின் படகில் இலங்கைக்குச் செல்லும் வந்தியத்தேவன் அவள் கடலுக்குள் குதித்து பிடித்துவரும் மீனை உண்கிறான்.

யதார்த்தம் எனும் தனித்துவம்

சினிமாவில் உணர்வெழுச்சித் தருணங்களுக்காக சாகசத்தைச் சேர்க்கிறோம் எனும் பெயரில் ஆதித்த கரிகாலன் ஒற்றையாளாகப் பல நூறு பேரைக் கொல்வது போலவும் அருள்மொழிவர்மன் யானைகளைத் தன் வலிமை கொண்டு அடக்குவதுபோலவும் காண்பித்திருந்தால் அது சினிமா ரசிகர்கள் சிலரைத் திருப்திப்படுத்தியிருக்கலாம். ஆனால் உண்மையில் வாழ்ந்து சென்ற மனிதர்களாகிய அவர்களை மனிதர்களாகவே உருவகித்து எந்த மிகைநாயக குணாதிசயங்களையும் சேர்க்காமல் தன்னுடைய அபாரமான எழுத்துத் திறனாலேயே அவர்கள் மீது தலைமுறைகளைக் கடந்து பலகோடி வாசகர்களின் மனங்களில் பிரம்மாண்ட நாயகர்களாக உருக்கொள்ள வைத்த கல்கிக்கு உரிய நியாயம் செய்வதாக இருந்திருக்காது.

இத்தகைய யதார்த்த அணுகுமுறை இதுவரை தமிழ் சினிமாவில் வந்த மன்னர் காலப் படங்களிலிருந்து இந்தப் படத்தைத் தனித்துக் காண்பிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி இனி வரும் காலங்களில் இதுபோன்ற அணுகுமுறையுடன் அரசர் காலத் திரைப்படங்கள் வருவதற்குத் தூண்டுதலாக அமையக்கூடும். பிரம்மாண்ட செட்கள், ஒற்றை நாயகனின் வீர சாகசங்கள் நிறைந்த போர்க் காட்சிகள், நீண்ட நெடிய வசனங்கள், மிகை உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள் என்பதுபோன்ற கிளிஷேக்களிலிருந்து மன்னராட்சி காலகட்டத்தைக் கொண்ட சினிமாக்கள் விடுபடுவதற்கான தொடக்கமாக இது அமையட்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE