காதல் படம் என்றாலே அந்தக் காலத்தில் ‘தேவதாஸ்’ படம் நினைவுக்கு வரும். கல் நெஞ்சம் கொண்டவர்களும், காதலிக்காதவர்களும் கூட ‘தேவதாஸ்’ சோகத்தில் கனத்துப் போய்விடுவோம். எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கின்றன. காதல் சொட்ட, கண்ணீர் மல்க அவற்றைப் பார்த்திருக்கிறோம். கைக்குட்டை நனைய அழுதிருக்கிறோம். பின்னர், துள்ளத்துடிக்கிற காதலாக இல்லாமல், ஆழமான, நிதானமான, பக்குவமான காதலையும் அந்தக் காதலுக்குள் இருக்கிற சிக்கல் சிணுங்கல்களையும் சொன்னவிதத்தில், நம் கண்ணுக்கு முன்னே வந்து நிற்பது ‘வசந்தமாளிகை’தான்!
பணக்கார- ஏழை காதல்தான். அங்கே வில்லனாக, பிரச்சினையாக இருப்பதும் இதுதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, சுயகெளரவமும் தன்மானமும் காதலுக்கு முட்டுக்கட்டையாக, தடையாக இருப்பதைச் சொன்னதில் வித்தியாசம் பெறுகிறது ‘வசந்தமாளிகை’.
அழகாபுரி ஜமீன். அதில் இளைய மகன் ஆனந்த்... சிவாஜி. ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் என்று எதுகுறித்த கவலையுமில்லாமல் வாழும் வாழ்க்கை அவருடையது! வாழ்க்கையை, அதன் போக்கில் விட்டு ரசிக்க ரசிக்க வாழ்ந்துகொண்டிருப்பார். அவரது வாழ்வில் குறுக்கிடும் விமானப் பணிப்பெண் லதா... வாணிஸ்ரீ.
சிவாஜியும் வாணிஸ்ரீயும் விமானத்தில்தான் சந்தித்திருப்பார்கள். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி என்றிருக்கிற பெரிய குடும்பத்தில், வாணிஸ்ரீயின் சம்பளம்தான் எல்லாமே. ஆனால் விமானப் பணிப்பெண் வேலை வேண்டாம் என்று வீடு சொல்லும். எனவே, வேறு வேலைக்கு முயற்சி செய்வார். அங்கே, அவரிடம் அத்துமீறுவார் ராமதாஸ். அங்கே, நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சிவாஜி, வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவார். பிறகு அவரின் நிலைமையை உணர்ந்து புரிந்து, தன்னுடைய காரியதரிசியாகவும் வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்.
ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன்மானமும் சுயகெளரவமும் கொண்டு வாழும் கதாபாத்திரம் வாணிஸ்ரீக்கு. அந்த அரண்மனையில் அவருக்கு ஏகத்துக்கும் இடைஞ்சல். குடைச்சல். ஆனால் அப்போதெல்லாம் வேலைக்கார வி.எஸ்.ராகவன் தடுத்துவிடுவார். வேலையிலேயே இருக்கச் சொல்வார். சிவாஜிக்கு அம்மா உட்பட எவருமே பாசம் காட்டுவதில்லை. ஒருகட்டத்தில், குடித்துக்கொண்டே இருக்கிற சிவாஜிக்கு, வீட்டிலேயே அவமானம். இவற்றையெல்லாம் புரிந்துகொள்வார் வாணிஸ்ரீ.
பிறகு சிவாஜி நல்லவர் என்பதையும் அவர் குடிப்பதும் பெண் சகவாசம் கொண்டிருப்பதும் தன் வலியையும் வேதனையையும் மறக்கத்தான் என்பதை அறிந்துகொள்வார். ’இனி குடிக்கக்கூடாது’ என்று சிவாஜியைத் தடுப்பார். பாட்டில்களை உடைப்பார். கோபத்தில் சிவாஜி பாட்டிலை எடுத்து வீசுவார். அது வாணிஸ்ரீ மீது பட்டு ரத்தம் வழிந்தோடும். அந்த ரத்தத்தை ஒரு கண்ணாடி தம்ளரில் பிடித்து, சிவாஜியிடம் ‘இதைக் குடிங்க. நல்ல போதையா இருக்கும்’ என்று சொல்லிச் செல்வார் வாணிஸ்ரீ. இதைக் கேட்டு, துக்கித்துவிக்கித்துப் போவார் சிவாஜி.
அப்போது ஒரு ஃப்ளாஷ்பேக். அம்மாவிடம் ஒட்டாமல், ஆயாவிடம் ஒட்டுதலாக இருப்பார் சிறுவயது சிவாஜி. ஆனால் இதையெல்லாம் தவறாகப் புரிந்துகொண்டு ஆயாம்மாவை சுட்டுக்கொன்றுவிடுவார்கள். அந்த ரத்தம், சின்னப்பையன் சிவாஜியை என்னவோ செய்யும். ஆயாம்மா இல்லாத தனிமை, அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் வெறுமை, இதையெல்லாம் பார்த்து குடியில் மூழ்கத் தொடங்கியதாகச் சொல்லும் சிவாஜி, ’‘இனி குடிக்கமாட்டேன்’’ என வாணிஸ்ரீயிடம் சத்தியம் செய்வார்.
பிறகு மெல்ல மெல்ல இருவருக்கும் உள்ளுக்குள்ளேயே காதல் மலரும். தன் காதலிக்காக, மிகப்பெரிய வசந்தமாளிகையை எழுப்புவார். அங்கே காதலையும் சொல்லுவார். இந்தச் சமயத்தில் வாணிஸ்ரீக்கு திருட்டுப்பட்டம் கட்டி, அவரை அங்கிருந்து துரத்துவார்கள். உண்மையெல்லாம் தெரிந்து, ’’நீ திருடியில்லை என்று நிரூபணம் செய்துவிட்டேன், வா வீட்டுக்கு’’ என்று சிவாஜி கெஞ்சுவார். ஆனால் வாணிஸ்ரீயின் தன்மானம்... மன்னிக்காது. சுயகெளரவம்... மனமிரங்காது.
ஒருகட்டத்தில், சிவாஜிக்கு உடல்நலமில்லாமல் போகும். ‘தடக்கென்று குடியை நிறுத்துவதும் தப்பு. தினமும் மருந்து போல் பயன்படுத்துங்கள்’ என மருத்துவர் சொல்ல, சிவாஜி ’’இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன்’’ என்று சொல்ல, இதைத் தெரிந்துகொண்டு வாணிஸ்ரீ வந்து, விஸ்கியைக் கொடுக்க, குடிக்க மறுப்பார்.
உடல்நலம் இன்னும் சீர்கெடும். ’இவர் நல்லா இருக்கணும்னா, நாம யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள வாணிஸ்ரீ சம்மதிப்பார்.
மனம் நொந்து போன சிவாஜி, வாணிஸ்ரீயை ஒருமுறை பார்ப்பார். வீட்டுக்கு வருவார். விஷம் அருந்துவார். அங்கே கல்யாணம் தடைபடும். வாணிஸ்ரீ சிவாஜியைக் காண ஓடோடி வருவார். மருத்துவத்தாலும் காதலாலும் பிழைத்த சிவாஜி, வாணிஸ்ரீயுடன் ‘வசந்தமாளிகை’யில் இல்லறத்தைத் தொடங்குவார் என்று படம் முடிய... சோகமும் ஆறுதலும் கொண்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.
சிவாஜி, வாணிஸ்ரீ, பாலாஜி, நாகேஷ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், பண்டரிபாய், சுகுமாரி, வி.எஸ்.ராகவன் என பலரும் நடித்த ‘வசந்தமாளிகை’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்திருந்தார் டி.ராமாநாயுடு. பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். தெலுங்கு ரீமேக் படமான இந்தப் படத்துக்கு, பாலமுருகன் வசனம். படத்தில் ஒவ்வொரு காட்சியில் இடம்பெற்ற வசனங்களும் கரவொலிகளை வாங்கிக்கொண்டே இருந்தன.
‘வேணாம்னா விலைமாதாக இருந்தாலும் தொடக்கூடாது. விருப்பம்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது’. ‘இதைத்தான் அவங்க பாசம்னு சொல்றாங்க. நீ மோசம்னு சொல்றே’. ‘உங்க அக்கா அகம்பாவம் பிடிச்சவ. வரமாட்டா. ஆனா உங்க அக்காகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்’. ‘இது இறந்துபோன காதலிக்காகக் கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடு இருக்கும் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்தமாளிகை’... இப்படி படம் நெடுக, வசனங்கள் கைதட்டல்களை அள்ளிக்கொண்டே போகும். வாணிஸ்ரீ பேசும் வசனங்களும் அப்படித்தான். அந்தக் காலத்தில் வாணிஸ்ரீக்காகவே இந்தப் படத்தை நான்கைந்து தடவை படம் பார்த்தவர்களெல்லாம் உண்டு.
வாணிஸ்ரீ புடவைக்கட்டிலும் கொண்டை ஸ்டைலிலும் ஈர்க்கப்பட்டு பெண்களே திரும்பத்திரும்ப படத்தைப் பார்த்தார்கள். நடிகர் சுரேஷ் ஒரு பேட்டியில், ‘’என் அம்மாவை அப்பா பெண் பார்க்கச் சென்றாராம். அப்போது அம்மாவிடம் அப்பா கேட்ட ஒரேயொரு கேள்வி...’வாணிஸ்ரீ மாதிரி புடவை கட்டத்தெரியுமா?’ என்பதுதான்’’ என்று தெரிவித்துள்ளார்.
நாகேஷ், ரமாபிரபா, வி.கே.ஆர் காமெடி கலகலக்கவைக்கும். அதேசமயம், கொஞ்சம் இரட்டை அர்த்த வசனங்களாகவும் காட்சிகளில் கொஞ்சம் விரசம் விரவியும் இருந்தன. இந்தப் படத்தில் வில்லன்களே இல்லை. அண்ணன், அம்மா வில்லத்தனம் செய்வார்கள். ஒருகட்டத்தில், தன்மானமே வில்லனாக விஸ்வரூபமெடுத்து நிற்கும்.
கே.வி.மகாதேவன் இசை. அத்தனைப் பாடல்களும் தேன். பாட்டெல்லாம் கண்ணதாசன். ‘ஓ மானிட ஜாதியே’, ‘ஏன் ஏன் ஏன்... ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’, ‘குடிமகனே பெருங்குடிமகனே...’, ’கலைமகள் கைப்பொருளே...’, ‘மயக்கமென்ன..’, ‘இரண்டு மனம் வேண்டும்’, ‘யாருக்காக இது யாருக்காக’ என்று எல்லாப் பாட்டுமே செம ஹிட்டு. ஒவ்வொரு பாடலுக்காகவும் ஒவ்வொரு தடவை வந்து பார்த்தவர்களும் சிவாஜி நடிப்புக்காக தினமும் வந்து பார்த்தவர்களும் உண்டு.
‘புதிய பறவை’யில் சரோஜாதேவியின் பெயர் லதா. இந்த ‘வசந்த மாளிகை’யில் வாணிஸ்ரீயின் பெயரும் லதா. ஆனால் அந்த ‘லதா’வை உச்சரிப்பதிலும் இந்த ‘லதா’வை உச்சரிப்பதிலும் ஏகத்துக்கும் வித்தியாசங்கள் காட்டியிருப்பார் சிவாஜி.
கோட்டும்சூட்டுமாக வலம் வரும் காட்சியெல்லாம் கொள்ளை அழகு. ‘அதில் நான் சக்கரவர்த்தியடா’ என்கிற பாடல் வரியில், கம்பீரமாக இடுப்பில் கைவைத்து நிற்கும்போது விசில் பறந்தது. ’மயக்கமென்ன...’ பாடலுக்கு சிவாஜியும் வாணிஸ்ரீயும் ‘ஸ்லோமோஷனில்’ வருவார்கள். ‘இப்படி வர்றது இதான் முதல் படம்பா’ என்று சொன்னவர்களும் உண்டு. அந்தப் பாடலில் வரும் ‘அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ எனும் கவிஞரின் வரிகளைச் சொல்லி, குடிப்பதை விட்ட கணவன்மார்களும் இருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம்... படத்தில் ஒரு பாடல் இடம்பெறவில்லை. ஆனால் அந்தப் பாடலும் இன்று வரைக்கும் ஹிட் பாடலாக இருக்கிறது. ‘அடியம்மா ராஜாத்தி சங்கதியென்ன... நீ அங்கேயே நின்னுக்கிட்டா என் கதியென்ன’ என்கிற பாடல் இந்தப் படத்தில்தான். ஆனால் காட்சி வடிவமாக எடுக்கப்படவில்லை.
1972 செப்டம்பர் மாதம் 29-ம் தேதி வெளியாகி, தமிழகத்திலும் இலங்கையிலும் சக்கைப்போடு போட்டது படம். சிவாஜியின் வெள்ளிவிழாப் படங்களில் முக்கியமான படம். முதலில் சிவாஜி இறுதியில் இறந்துவிடுவதாகத்தான் படம் எடுக்கப்பட்டு வெளியானதாம். அதைப் பார்த்துவிட்டு, ரசிகர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி கதறிவிட்டார்களாம். பின்னர், அவசரம் அவசரமாக இருவரும் சேருவது போல் எடுத்து, ‘சுபம்’ க்ளைமாக்ஸ் வைத்தார்களாம்.
படம் வெளியாகி 50 ஆண்டுகளாகின்றன. ‘வசந்தமாளிகை’க்கு இது பொன்விழா ஆண்டு! வைரவிழா ஆண்டு வந்தாலும் கூட ‘இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.