காதலர்களுக்குத் தடையாக வில்லக்கூட்டம் இருப்பதொன்றும் தமிழ் சினிமாவில் புதிதில்லைதான். வில்லனுக்குப் பதிலாக வில்லி. அதுவும் காதலியின் சித்தியே வில்லித்தனம் பண்ணி காதலர்களைச் சேரவிடாமல் இம்சை பண்ணுகிறார். அப்படியென்றால் ஆபத்பாந்தவனாக அங்கே ஒருவர் வருவார்தானே! அவரின் பெருமுயற்சியால், காதலர்கள் இணைவதை, மிகுந்த பொருட்செலவிலும் மிகமிகப் பிரம்மாண்டமாகவும் சொன்ன படம்தான் ‘செந்தூரப்பூவே’.
எண்பதுகளில் கமல், ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜயகாந்த் இருந்தார். அப்போதே தொடர்ந்து பல படங்கள் வந்துகொண்டிருந்தாலும் இன்னும் உயரம் தொடுவதற்கு, ’ஊமை விழிகள்’ மிக முக்கியமான காரணமாக இருந்தது. திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான படம் ’ஊமை விழிகள்’. அப்போதெல்லாம் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பட வாய்ப்பு கேட்டு வந்தால், எவரும் தரமாட்டார்கள். ஏளனமாகப் பேசி அனுப்பிவிடுவார்கள். ஆனால் விஜயகாந்த் மட்டும் திரைப்படக் கல்லூரி மாணவரான ஆபாவாணனை நம்பினார். ‘ஊமை விழிகள்’ எடுப்பதற்கு தன்னாலான உதவிகளையெல்லாம் செய்தார். படமும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அதன் பின்னரும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு விஜயகாந்த் வாய்ப்பு வழங்கினார். அதன் பின்னர் திரையுலகமே அவர்களை வியந்து பார்த்தது
ஆபாவாணன் அடுத்தடுத்து படங்கள் பண்ணினார். மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்க இருக்கும் படத்துக்கு விஜயகாந்தின் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்தார். அவரிடம் கேட்க, சம்மதித்தார். அப்படி உருவானதுதான் ‘செந்தூரப்பூவே’. விஜயகாந்த் நாயகனாக, கொஞ்சம் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார்.
ராம்கியும் நிரோஷாவும் காதலர்கள் (அநேகமாக, இவர்கள் இருவருக்கும் இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் காதல் மலர்ந்திருக்கும் என்பதாக நினைவு). நிரோஷாவின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம். அவருடைய சித்தி ராஜ்ஜியம்தான் வீட்டிலும் ஊரிலும்!
சித்தி வேறு யாருமல்ல... அறுபது, எழுபதுகளில், மாடர்ன் தியேட்டர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் கிளப் டான்ஸ் ஆடியும் கதாநாயகியாகவும் நடித்த விஜயலலிதாதான். ’லேடீஸ் வில்லத்தனம் பண்ணினா எடுபடுமா?’ என்றுதான் படம் தொடங்கும்போது எல்லோரும் நினைத்திருப்போம். ஆனால் படத்தில் அடுத்தடுத்து விஜயலலிதாவின் உருட்டலும் மிரட்டலும் நமக்கே பீதியைக் கிளப்பிவிடும்.
‘பரமேஸ்வரா’ என்று அடியாளைக் கூப்பிட்டு ஒரு பார்வை பார்ப்பார். பார்த்துக்கொண்டிருக்கிற நாமே பதறுகிறோமென்றால், ராம்கியின் நிலையையும் நிரோஷாவின் நிலையையும் யோசித்துப் பாருங்கள். பதுங்கிப் பம்முவார்கள். அந்த ஊரில், யாரிடம் நிறைய பேசிக்கொள்ளாமல், முகத்தில் தாடியும் தோளில் சால்வையுமாக இருக்கும் விஜயகாந்த், ராம்கி - நிரோஷாவுக்கு ஆதரவு தருவார். அவர் முன்னாள் ராணுவ வீரர். படத்தில் அவரின் பெயர் செளந்தரபாண்டியன். எல்லோரும் ‘கேப்டன் கேப்டன்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.
ராம்கி - நிரோஷா காதலுக்கு விஜயகாந்துக்கு ஆதரவாக டாக்டராக இருக்கும் சந்திரசேகரும் உதவ முன்வருவார்.
விஜயகாந்துக்கு ப்ளாஷ்பேக்கும் உண்டு. அவரின் மனைவியாக ஸ்ரீப்ரியா. சில காட்சிகளே வந்தாலும், தன் முதிர்ச்சியான நடிப்பால் மனதை அள்ளிவிடுவார். நிரோஷாவின் கண்கள் தனி அழகுடன் இருக்கும். ஆனால் எப்போதும் பயந்துகொண்டிருக்கும் அந்தக் கண்களைப் பார்க்க நமக்கு ‘ஐயோ பாவம்’ என்றிருக்கும். ஸ்டண்ட் நடிகர் அழகு என்பவருக்கு, கவனிக்கத்தக்க கதாபாத்திரம் இப்படத்தில் கிடைத்தது!
ஆபாவாணன் படங்களென்றாலே மிகப்பெரிய அளவில் நட்சத்திரக் கூட்டம் இருக்கும். இதிலும் அப்படித்தான். விஜயகாந்த், ஸ்ரீப்ரியா, ராம்கி, நிரோஷா, விஜயலலிதா, சந்திரசேகர், சி.எல்.ஆனந்தன், சார்லி, ஆனந்தராஜ், செந்தில், பசி நாராயணன், கருப்பு சுப்பையா, வெள்ளை சுப்பையா என ஏகப்பட்ட பேர் நடித்திருப்பார்கள்.
படத்தின் முதல் காட்சி. ஆஸ்பத்திரி. அங்கே நோயாளி ஒருவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு. அவற்றையெல்லாம் மீறி, அங்கிருந்து தப்பித்து, நீலாம்பூர் எனும் கிராமத்துக்கு வருவார்.
அவர்தான் விஜயகாந்த். அங்கே, ராம்கியும் நிரோஷாவும் ஊரை விட்டு ஓடுவதற்காக ரயிலேறுவார்கள். விஜயகாந்துக்கு, தலையில் அடிபட்டதில், மூளை நரம்பில் பிரச்சினை. இன்னும் பத்து அல்லது பனிரெண்டு நாள்தான் உயிருடன் இருப்பார் என டாக்டர் சந்திரசேகர் சொல்கிறார். தண்டவாளத்தைக் கடக்கும்போது, தலைவலி. துடிக்கிறார். கிறுகிறுத்துப் போகிறார். தப்பிக்கப்பார்த்த ராம்கி காப்பாற்றுகிறார். பிறகுதான் அவர்களின் காதலைச் சேர்த்துவைக்கிற முடிவில் இறங்குகிறார் விஜயகாந்த்.
படத்தின் மிகப்பெரிய பலம், விஜயகாந்தும் விஜயலலிதாவும்தான். ‘புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்’ என்று டைட்டில் போடுவார்கள். ‘மீண்டும் விஜயலலிதா’ என்று டைட்டில் போடுவார்கள். இதையடுத்து படத்தின் சண்டைக் காட்சிகள் மிரளவைக்கும். ராம்கி நல்ல ஆக்ஷன் நடிகராகவும் இதில் மிளிர்ந்திருப்பார். மனோஜ் கியான் இசையில் எல்லாப் பாடல்களும் பெரிய ஹிட்டடித்தன.
காட்டாறு போல் பாய்ந்து வரும் ஆறு, பாறைப்பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன் என கதைக்களத்தின் அனைத்து அம்சங்களும் நம்மை ஈர்த்துவிடும். ’ஆத்துக்குள்ளே ஏலேலோ’ என்ற பாடல் நம்மை கிராமத்துக்கே அழைத்துச் செல்லும். ‘தோப்புக்குள்ளே பூ மலரும் நேரம் வந்தாச்சு’ என்ற டைட்டில் பாடலே நம்மை கிராமத்துக்குள் ‘வருக வருக’ என வரவழைக்கும். ’கிளியே இளங்கிளியே...’ என்ற பாடல் அப்போது திரும்பத் திரும்பக் கேட்கும் லிஸ்ட்டில் உள்ள பாடலாக இருந்தது. இதேபோல, ‘சின்னக்கண்ணன் தோட்டத்துப் பூவாக’ என்ற பாடலும் திருவிழாவிலும் கல்யாண வீடுகளிலும் ஒலித்தது. ஜெயச்சந்திரன் பாடிய ‘சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை’ என்ற பாடலை, தங்களின் சோகத்துக்கான மருந்தாகவே ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். ’முத்துமணி பல்லாக்கு’ பாடலும் ’வரப்பே தலையணை’ பாடலும் ஈர்த்தன. எல்லாவற்றையும் விட முக்கியமாக, ‘செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா’ என்ற பாடல் அதிரிபுதிரி ஹிட்டாகியிருந்தது.
படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் அசத்தியது என்றபோதும் க்ளைமாக்ஸில், ரயில் சண்டைக் காட்சி நம்மை ஆச்சரியப்படுத்தி, விழிகளை விரிய வைத்தன. வாய் பிளந்து பார்க்கும் வகையில் ரயில் சண்டை எடுக்கப்பட்டிருந்தது. ரயிலைப் பிடித்துக்கொண்டு, தொங்கியபடி வருகிற காட்சிகளை விஜயகாந்த் டூப் போடாமலேயே நடித்தார் என்று அன்றைக்குப் பத்திரிகைகள் அதிசயித்து எழுதின. இந்த சண்டைக் காட்சிக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்த ரசிகர்களெல்லாம் உண்டு.
படத்தை அருண்பாண்டியன், ஆபாவாணன் என்று நான்குபேர் சேர்ந்து தயாரித்தார்கள். பி.ஆர்.தேவராஜ் இயக்கினார். விஜயகாந்தின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்களில் இதுவும் ஒன்று.
படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ராதிகா, அவரின் அம்மா கீதா, அவரின் சகோதரர்கள் முதலானோருக்கு ‘நன்றி’ தெரிவித்து கார்டு போடுகிறார்கள். அதேபோல், நடிகர் மம்முட்டிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம.நாராயணனுக்கும் நன்றி என்று போடுகிறார்கள். பலரின் உதவியும் பங்களிப்பும் கொண்டு 1985 செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வெளியான ‘செந்தூரப்பூவே’ பல தியேட்டர்களில் 100 நாளைக் கடந்தும் ஓடியது. சில தியேட்டர்களில் வெள்ளிவிழா கொண்டாடியது!
இன்னொரு விஷயம்... 1991-ல் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்துக்குப் பிறகுதான் ‘கேப்டன் கேப்டன்’ என்று அழைக்கப்பட்டார் விஜயகாந்த். ஆனால், 1985-ல் ‘செந்தூரப்பூவே’ படத்தி்லேயே ‘கேப்டன்’ கேரக்டரில் நடித்தார்.
அதே வருடத்தில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை விஜயகாந்த் கொடுத்தார் என்றாலும் விஜயகாந்துக்கும் விஜயலலிதாவுக்கும் ராம்கி - நிரோஷா ஜோடிக்கும் ‘செந்தூரப்பூவே’ மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது.