ஷோபா எனும் அதிசய நாயகி!

By வி. ராம்ஜி

கவர்ச்சி காட்டியெல்லாம் நடிக்கவில்லை. எளிமையான தோற்றம். நடித்த படங்கள் 25-ஐத் தாண்டவில்லை. தலைமுறைகள் பல கடந்துவிட்டன. ஆனாலும் அவரை மறக்கவில்லை ரசிகர்கள். மறக்கவே முடியாத நடிகைதான் அவர். காரணம்... அந்த முகம். நம் தெருவில் நாம் அடிக்கடி சந்திக்கிற பெண்ணைப் போன்றதொரு முகம். நம் வீட்டுப் பெண்ணைப் போன்ற, வெள்ளந்திச் சிரிப்பு. எந்தக் கல்மிஷமோ விகல்பமோ பொய்யோ இல்லாத இயல்பான சிரிப்பு. நம் சகோதரியைப் போன்றதொரு சிரிப்பு. குழந்தைத்தனமான சிரிப்பு. அந்தக் குழந்தைமையும் கொஞ்சம் மேதைமைத்தனமும்தான் நம்மை வெகுவாக ஈர்த்தன. தமிழ் சினிமாவின் ரசிகர்கள் யாரோ எங்கேயோ இருந்துகொண்டு, அவர் பெயரை இன்றைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ‘அப்படியொரு நடிகைக்கு ஈடு இணையே இல்ல’ என்று சிலாகித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர் ... ஷோபா.

நூற்றாண்டு கண்ட சினிமா உலகில், நடிகைகளுக்கா பஞ்சம்? பக்கத்து மாநிலங்களிலிருந்தெல்லாம் வந்து நம் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் அந்த இடம் எப்படியான இடம் என்பதுதான் இங்கே முக்கியம்.

இந்தக் கால தலைமுறையினருக்கு, எழுபது - எண்பதுகளின் படங்கள் கூட, தெரியாமல் இருக்கலாம். ஆனால் எழுபதுகளின் இறுதியில் வந்து, எண்பது தொடங்கும்போதே நம்மைவிட்டுப் பிரிந்த நடிகை ஷோபாவை அடுத்தடுத்த தலைமுறையினரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுதான் ஷோபா எனும் நடிகைக்குக் கிடைத்த தனித்துவமான வெற்றி!

’முள்ளும் மலரும்’ ஷோபா

’கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளம்தான் பூர்விகம். ஒருவகையில், ஷோபாவும் கடவுளின் குழந்தைதான் போலும். ‘குழந்தை மகாலட்சுமி மாதிரி இருக்கா’ என்று சொல்லி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஷோபாவின் உண்மையான பெயரும் மகாலட்சுமிதான்! தமிழிலும் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார். பிறகு ஒரு இடைவெளிக்குப் பின்னர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

படத்தில் சுமித்ராதான் நாயகி. கமல் நாயகன். சரத்பாபுவும் நடித்திருப்பார். அனுமந்துவுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம். ஆனால் இவர்களையெல்லாம் கடந்து, நம் மனதுக்குள் தன் இயல்பான துறுதுறு நடிப்பால் முதலிடம் பிடித்து அசைக்க முடியாத சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டார் ஷோபா. யதார்த்தமான நடிப்பும் கள்ளமில்லாச் சிரிப்பும் குறும்புப் பார்வையும் பார்க்கிற எல்லோரையும் ஈர்ப்பதில், வியப்பென்ன இருக்கிறது?

பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் டீச்சர் வேடம். நடிப்பில் மிகச்சிறந்த பரிணாமம் காட்டி பிரமாதப்படுத்தினார். காட்டன் புடவை கட்டிய குழந்தையாகத்தான் ரசிகர்கள் பாசமும் நேசமும் கொண்டு கொண்டாடித் தீர்த்தார்கள். ‘பூவண்ணம் போல எண்ணும்’ பாடலில் முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருப்பார்.

ரஜினியுடன் ‘முள்ளும் மலரும்’ படத்தில் நடித்தார். மகேந்திரனின் இந்தப் படத்தில், தங்கை வள்ளியாகவே வாழ்ந்திருப்பார். ஷோபாவின் குரலில் உள்ள ‘மெஸ்மரிஸம்’ கூடுதலாக ரசிகர்களை ஈர்த்தது. ‘பாசமலர்’ சாவித்திரிக்குப் பிறகான தங்கைக் கதாபாத்திரத்தில், புதுவிதம் காட்டியிருப்பார்; பல இடங்களில் கலங்கவைத்திருப்பார். ‘அடிப்பெண்ணே... பொன்னூஞ்சலாடுது இளமை’ பாடலில் ஒரு பட்டாம்பூச்சியைத் துள்ளிப் பறப்பார்!

’நிழல் நிஜமாகிறது’ படத்தில் தாவணி. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் புடவை, ‘மூடுபனி’ படத்தில் மாடர்ன் டிரஸ். பாலுமகேந்திராவின் படம். எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் மூலக்கதை. இளையராஜாவின் நூறாவது படம். ‘பிரதாப்பின் முட்டைக்கண் பார்வையும் ஆக்ரோஷமும் சைக்கோத்தனமும் நமக்குள் பீதியைக் கிளப்பிவிடும். ஷோபா அவரிடம் சிக்கி சின்னாபின்னமாகிவிடுவாரோ’ என்று குலசாமியை வேண்டிக்கொண்டு ஷோபாவின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தபடி பார்த்த ரசிகர்களெல்லாம் இருக்கிறார்கள்.

ஷோபாவுக்கு மளமளவென படங்கள் வந்தன. ஆனால் எந்தப் படமும் சாதாரணப் படங்களில்லை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாகப் பேசப்பட்டார். இடைவெளியே இல்லாமல், பல படங்கள் கிடைத்தன. இயக்குநர் துரையின் ‘பசி’ படத்தில், அழுக்கு ஆடையும் குப்பைச் சாக்குமாக வலம் வந்த ஷோபாவை, இன்னும் கொண்டாடினார்கள். அரசாங்கமும் பாராட்டியது. ‘ஊர்வசி’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. நடிகை சாரதாவுக்குப் பிறகு அந்தப் பட்டத்தை வாங்கினார் ஷோபா.

விஜயகாந்துடன் நடித்த ‘அகல் விளக்கு’ படம் ஓடவில்லை. ஆனால், அந்தப் படம் இன்றைக்கும் நினைவில் இருப்பதற்கு ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் இளையராஜாவின் இசையும் விஜயகாந்த் - ஷோபாவின் இயல்பான நடிப்புமே காரணம். யூடியூபில் இந்தப் பாடலை இன்றைக்கும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிவகுமாருடன் நடித்த ‘ஏணிப்படிகள்’ படத்தில் நடிகையாகவே நடித்து அசத்தியிருப்பார். ‘பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து’ உள்ளிட்ட பாடல்களுக்கு இவரின் நடிப்பும் கவிதையாக இருக்கும். ஒரு திரைப்பட நடிகை சந்திக்கிற சோகங்களைச் சொல்லும் கதை இது. பின்னாளில், ஷோபாவின் நிஜ வாழ்வும் சோகமாகிப் போனதுதான் பெருந்துயரம். இளம் வயதுதான். எல்லாமே அவசரம் அவசரமாக வந்தது. மரணம் உட்பட!

1978-ம் ஆண்டு பாலசந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் கதையின் நாயகியாக அறிமுகமானார். 1980 மே 1-ம் தேதி விடியும்போது, அந்த நிலவு அஸ்தமித்திருந்தது.

ஷோபா எனும் கனவுலகின் நிஜ தேவதைக்கு, இறக்கும் போது 18 வயதுதான். அதற்குள் 17 படங்கள் வரை நடித்தார். ஒவ்வொரு படமும் அவரின் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த நாயகியாக ஒளிர்ந்தார். கன்னடப் படமான ‘கோகிலா’ படத்தில் கமலுடன் மோகனும் நடித்திருப்பார். இதில் ஷோபாவும் ரோஜாரமணியும் நடித்தார்கள். பாலுமகேந்திரா முதன்முதலாக இயக்கிய இந்தப் படத்திலும் ஷோபாவின் நடிப்பு, வெகுவாகப் பேசப்பட்டது.

நடிகை ஷோபா

ஷோபாவுக்கு முன்னர் நடித்த எந்த நடிகையரின் சாயலும் ஷோபாவிடம் இருக்காது. அதேபோல், இயல்பான, குழந்தைமையான முகம் கொண்ட வசீகரக் குரலில் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஈர்த்த ஷோபாவுக்கு நிகரான நடிகை, இன்னமும் வரவில்லை.

1962 செப்டம்பர் 23-ம் தேதி பிறந்த ஷோபாவுக்கு 60-வது பிறந்தநாள். அவரின் நூறாவது பிறந்தநாளின்போதும், யாரோ இப்படி ஷோபாவை எழுதிக்கொண்டும், சிலாகித்துக் கொண்டும், வியந்துகொண்டுமாகவே இருப்பார்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE