ஒளிப்பதிவாளர் ஜீவா: கண்களையே லென்ஸ்களாக பாவித்த கலைஞன்!

By வி. ராம்ஜி

ஆல்பத்தைப் புரட்டிக்கொண்டு வரும்போது ஏதேனும் ஒரு புகைப்படம், பார்ப்பவர்களை ரொம்பவே ஈர்த்துவிடும். ‘அட...’ என்று சொல்லவைக்கும். ‘படம் கண்ல ஒத்திக்கிற மாதிரி இருக்கு’ என்று சொல்லிப் பாராட்டுவார்கள். ஒரு ஆல்பத்தின் ஒரு புகைப்படத்தையே இப்படிச் சொல்லும்போது, இரண்டரை மணி நேர சினிமா மொத்தத்தையும் ‘கண்ணில் ஒற்றிக்கொள்வது மாதிரி’ கொடுப்பதுதான் ஒளிப்பதிவுக் கலையின் செப்படிவித்தை!

அப்படி கலையைக் காதலித்து, ஒவ்வொரு காட்சியையும் காதலில் லயித்து எடுக்கிற ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் நம் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறார்கள். ஒரு இயக்குநரின் கண்களாக செயல்படுபவர் ஒளிப்பதிவாளர். ஒரு ஒளிப்பதிவாளரின் இதயமாகவே செயல்படுபவர் இயக்குநர் என்பார்கள். அந்த வகையில், கண்களாகவும் இதயமாகவும் இருந்து நம் நினைவுகளில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஒளிப்பதிவில் கவிதை படைத்த ஜீவா!

ஒளிப்பதிவாளர் ஜீவா

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ஜில்லாவின் கடைக்கோடி ஊரான திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா. சிறுவயதில் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம். பின்னர் இளம் வயதில் சினிமாவின் மீது காதல். தேடலுடன் சென்னைக்கு வந்தவரை அப்படியே வாரியெடுத்துக் கொண்டார் பி.சி.ஸ்ரீராம்.

1987ம் ஆண்டு வந்து, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்த அந்தப் படம்... இன்று வரைக்கும் எப்போது பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு காட்சியும் நுணுக்கிநுணுக்கி செதுக்கப்பட்டிருக்கும் மகா பிரம்மாண்டப் படம்... ‘நாயகன்’தான் ஸ்ரீராமிடம் முதன்முதலாக உதவி ஒளிப்பதிவாளராக ஜீவா பணியாற்றிய முதல் படம்! முதல் படமே முத்தாய்ப்பான படமாக, ஆகப்பெரிய வேலைகள் கொண்ட, வேலைகளைக் கற்றுகொள்ளத்தக்க படமாக அமைந்ததுதான் ஜீவாவுக்குக் கிடைத்த முதல் சந்தோஷம்!

மணிரத்னத்தின் ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’ படங்களிலும் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் என்று பெயரும் புகழும் பெற்ற ஏ.வின்சென்ட், எப்படி பின்னாளில் இயக்குநரானாரோ, ஒளிப்பதிவு மேதை என்று கொண்டாடப்பட்ட எம்.கர்ணன் எப்படி இயக்குநரானாரோ, பாலுமகேந்திரா எப்படி இயக்குநரானாரோ, அதேபோல பி.சி.ஸ்ரீராமும் ‘மீரா’ படத்தை இயக்கினார். அதுவரைக்கும் உதவியாளராக இருந்து நுட்பங்களைக் கற்றறிந்தார். ஸ்ரீராமின் திறமையை சீடராக இருக்கும்போது ஜீவாவின் திறமையை அறிந்துகொண்ட கேரளத் திரையுலகம், மோகன்லால் நடிப்பில் உருவான ‘அபிமன்யு’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியது.

ஷங்கருடன் ஒளிப்பதிவாளர் ஜீவா

இன்றைக்கு இருக்கிற பெரும்பாலான ஒளிப்பதிவாளர்கள் பலர், பி.சி.ஸ்ரீராமின் பட்டறையிலிருந்து வந்தவர்கள்தான். அந்த வகையில் அவருடைய முதல் சிஷ்யர் எனும் பெருமை ஜீவாவுக்கு உண்டு.

இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது முதல் படத்துக்கு பி.சி.ஸ்ரீராமை புக் செய்யச் சென்றார். ‘ஏன் நான் வேணும்னு அடம்புடிக்கிறீங்க. ஜீவாவைப் போடுங்க. அவன் நல்லாப் பண்ணுறான். இப்பவே அவனைப் புடிச்சிக்கங்க. பின்னாடி பெரியாளா வந்துருவான்’ என்று ஸ்ரீராம் சொல்ல, அதன்படியே ஜீவாவை புக் செய்தார். அவர்கள் இணைந்த முதல் படம் ‘ஜென்டில்மேன்’.

அப்பளக் கம்பெனி, ரயில் சேஸிங், ஷாப்பிங் மால் சண்டைக் காட்சி என முதல் படத்திலேயே மிரட்டியிருப்பார் ஜீவா. அடுத்த படமான ‘காதலன்’ படத்துக்கும் ஜீவாவையே புக் செய்தார் ஷங்கர். கவர்னர் பங்களா, கலாக்ஷேத்திரா நடனம், ‘முக்காலா முக்காபுலா’ பாட்டு, ‘என்னவளே என்னவளே’ பாட்டு, ஆந்திராக் காட்சிகள் எனக் காட்சிகளை கவிதையாக்கியிருப்பார். கமலும் ஷங்கரும் இணைந்த ‘இந்தியன்’ படத்திலும் இப்படித்தான் ஜாலங்கள் காட்டி ஒளிப்பதிவில் மிரட்டியிருப்பார் ஜீவா.

இயக்குநர் வஸந்த் எப்போதும் கவிதையாகப் படமெடுப்பார். அஜித்தும் சுவலட்சுமியும் நடித்த ‘ஆசை’ படம் முழுக்கவே கவிதை மாதிரி தன் ஒளிப்பதிவால் கதை சொல்லியிருப்பார் ஜீவா. ‘நல்லாருக்குடா. நல்லாப் பண்றே. இன்னும் நிறைய்ய இருக்குடா’ என்று ஜீவாவைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம் பி.சி.ஸ்ரீராம்.

குருவின் பெயரைக் காப்பாற்றினார் சிஷ்யன் ஜீவா. அமிதாப் தயாரிப்பில் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ‘உல்லாசம்’ படத்தின் பல காட்சிகளின் ஒளிப்பதிவின் நுட்பத்தையும் இயல்பான வெளிச்சத்தையும் இழைத்துக் காட்டியிருப்பார்.

‘இந்தியன்’ படத்தில் இரண்டு கமலைக் கொண்டு ஒளிப்பதிவு செய்த ஜீவாவுக்கு, எஸ்.ஜே.சூர்யாவின் ‘வாலி’ படத்தில் இரண்டு அஜித்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டுகிற பணி! ‘ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்தஜாமத்தில்’ பாடலாகட்டும், ஊட்டி லோகேஷன்களாகட்டும், சிம்ரனையும் அஜித்தையும் ஜோதிகாவையும் காட்டுகிற ஷாட்டுகளாட்டும், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கும். அதுதான் ஒளிப்பதிவின் சூட்சுமம். ஜீவாவின் ஜாலம்!

தொடர்ந்து நிறைய படங்கள். ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் வெரைட்டி காட்டிக்கொண்டே வந்தவர், ஒருகட்டத்தில், குருவைப் போல் இயக்குநரானார். ’12பி’, ‘உன்னாலே உன்னாலே’, ’உள்ளம் கேட்குமே’ என்று படங்களை இயக்கினார். இந்த மூன்று படங்களும் வெவ்வேறான கதைக்களங்களைக் கொண்டவை. அதுமட்டுமா? மூன்றுமே கதை சொல்லும் பாணியிலும் வேறுபட்டிருந்தன.

இன்னொரு விஷயம்... கே.பாலசந்தர் போல, பாரதிராஜா போல, பாலுமகேந்திரா போல, தைரியமாக புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். ஷாம், ஆர்யா, வினய், அஸின் முதலானோரெல்லாம் ஜீவா அறிமுகப்படுத்தியவர்கள்தான்!

‘12 பி’ மாதிரி முன்னும்பின்னுமாக செல்லக்கூடிய திரைக்கதை உத்தி அப்போது புதியதுதான். அதை ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் வெகு அழகாக, கலர் மாற்றங்கள், காட்சி மாற்றங்கள் என மிகக் கூர்மையாகவும் கோர்வையாகவும் படைத்திருப்பார் ஜீவா.

நான்கு நிமிடப் பாடலை, நாம் டிவிக்களில், ஒரு நிமிட விளம்பரம் பார்த்து ரசிப்போமே... அதுபோல், நான்கு நிமிடப் பாடலையும் ஸ்டைலிஷாக எடுத்து, அதற்குள் லைட்டிங்கில் புதிய உத்திகளையெல்லாம் செய்திருப்பார். ‘ஜீவா படம்னா முழுக்கவே ஸ்டைலிஷா இருக்கும்’ என்று ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

ஜெயம் ரவியை வைத்து ‘தாம்தூம்’ என்றொரு படமும் ஆர்ப்பாட்டமில்லாமல் அப்படித்தான் எடுக்கப்பட்டது. ஆனால் இயக்குநர்களின் கண்களாகவும் இதயமாகவும் இருந்த ஜீவாவின் இதயம் தன் துடிப்பைத் தடக்கென வெளிநாட்டிலேயே நிறுத்திக் கொண்டது. 1963 செப்டம்பர் 21-ம் தேதி பிறந்த ஜீவா, 2007 ஜூன் 25-ல் மறைந்தார்.

"ஜீவாவின் கண்களே கேமரா போலவும் லென்ஸ் போலவும்தான் இருக்கும். ஒரு காட்சியைச் சொல்லும்போது அந்தக் கண்கள் அப்படியே கிரகித்துக் கொள்ளும். அந்தக் கண்களில் ஒரு மேஜிக் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த மேஜிக்கை தன் காமராவுக்குள்ளும் லென்ஸுக்குள்ளும் அப்படியே கடத்திக்கொண்டுவருவார் ஜீவா. அற்புதமாக ஒளிக்கலைஞன் அவர்" என இயக்குநர் ஷங்கர் தன் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

‘ஜீன்ஸ்’ படம் வெளியாகி இருந்த சமயம். ஷங்கரை விழா ஒன்றில் பார்த்த பி.சி.ஸ்ரீராம் பேசிக்கொண்டிருந்தார். ‘’வாய்ப்பு இருந்தால் சேர்ந்து பணியாற்றுவோம்’’ என்று ஸ்ரீராம் சொல்ல, ’‘முதல் படத்திலும் கேட்டேன். ‘இந்தியன்’ படத்துக்கும் கேட்டேன். அப்போது மறுத்துவிட்டீர்களே சார்” என்று ஷங்கர் கேட்டார். ’’உங்கள் முதல் படம், ஜீவா அப்படியொரு படத்துல அறிமுகமாகணும். அதேபோல, ‘இந்தியன்’ நீங்க, கமல் சார்னு சேர்ந்து பண்ற படம். அப்படியொரு வாய்ப்பு ஜீவாவுக்குக் கிடைச்சா, இன்னும் தொழில் கத்துக்குவான்; உயரத்துக்குப் போவான். அதனாலதான் என் ஜீவாவுக்காக நான் ஒத்துக்கலை” என்று ஸ்ரீராம் விளக்க, நெகிழ்ந்து போனார் ஷங்கர். நல்ல குரு - அற்புத சிஷ்யன்!

ஒளிப்பதிவில் கவிதை எழுதிய ஜீவாவை, திரையுலகமும் நினைத்துக்கொண்டே இருக்கும். ரசிகர்களும் பூரித்து சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE