ஒரு நடிகரின் முதல் படத்தைக்கூட அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் 50-வது படம், 100-வது படம், 150-வது படம் என்பதையெல்லாம் கணக்காக நினைவில் வைத்துக்கொண்டு, அந்தப் படத்தைக் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர், சின்னப்பா, கிட்டப்பாக்களெல்லாம் முதல் சூப்பர் ஸ்டார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அதன் பின்னர், தமிழ் சினிமாவில் எம்ஜிஆரும் சிவாஜியும் கோலோச்சிய காலமாக இருந்தது. இவர்கள் இருவருமே ஏராளமான படங்களில் நடித்தார்கள். பலவருட காலம், தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில், எம்ஜிஆரும் சிவாஜியும் 100-வது படத்தையும் கடந்து நடித்தார்கள். எம்ஜிஆர் ஒருகட்டத்தில் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடித்தார். சிவாஜி இருநூறு படங்களைக் கடந்தும் நடித்தார். ‘மக்கள் திலகம்’, ‘புரட்சி நடிகர்’ என்றெல்லாம் கொண்டாடப்பட்ட எம்ஜிஆரின் 100-வது படமாக அமைந்ததுதான் ‘ஒளிவிளக்கு’.
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனும் எம்ஜிஆரும் இணைந்த படம் ‘ஒளிவிளக்கு’. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார் எம்ஜிஆர். அதேபோல், எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். ஆனால், ஜெமினியின் பிரம்மாண்டமான தயாரிப்பாக எம்ஜிஆரின் 100-வது படமாக வெளியானது ஒளிவிளக்கு.
இந்தி படத்தின் ரீமேக் இது. சாணக்யா இயக்கினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். திருட்டு, கொள்ளைகளைச் செய்யும் கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு. ஆனால், அன்பும் கருணையும் கொண்டவர். இரக்க குணமும் உண்மையும் கொண்டவர். ஒரு ஊரின் பங்களாவுக்குக் கொள்ளையடிப்பதற்காக வருவார் எம்ஜிஆர்.
இப்போது உலகெங்கும் கரோனாவும் ஊரடங்கும் வந்தது போல், அப்போது ஒரு நோய். ஊரே காலி செய்துகொண்டு போயிருக்கும். பங்களாவுக்குள் சாவகாசமாக கொள்ளையடிக்க நுழைவார். அங்கே படுத்தபடுக்கையாக, நோயாளியாக இருப்பார் செளகார் ஜானகி. அவரை மட்டும் விட்டுவிட்டு, உறவுகள் நோய்க்காகப் பறந்தோடியிருக்கும். கொள்ளையடிக்க வந்த எம்ஜிஆர், செளகாரின் நிலையைப் பார்த்து இரக்கப்படுவார். அவரை அழைத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு வருவார்.
எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்கெனவே காதல். செளகார் ஜானகியோ இளம் விதவை. ஊரிலும் எம்ஜிஆரையும் செளகாரையும் வைத்து தப்பாகப் பேசுவார்கள். அதற்காக, வீட்டை விட்டு அனுப்பமாட்டார் எம்ஜிஆர். அதேசமயம், கொள்ளைச் செயலைக் கண்டித்து, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்துவார் செளகார் ஜானகி.
கொள்ளைக் கூட்டத்தில் இருந்து எம்ஜிஆரால் விடுபடமுடிந்ததா. செளகார் ஜானகியின் நிலை என்ன. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்தார்களா என்பதுதான் மீதிக்கதை. ஜெமினியின் வண்ணத்தில், அட்டகாசமான கலர்ப்படமாக வந்திருந்தது ‘ஒளிவிளக்கு’.
எம்ஜிஆர் அழகு என்பதைச் சொல்லவே வேண்டாம். இந்தக் கலர்ப்படத்தில், எம்ஜிஆரும் அழகு; எம்ஜிஆரின் காஸ்ட்யூமும் அழகு. முக்கியமாக, எம்ஜிஆர் சட்டைக்கு மேலே ‘டை’ போலவும் இல்லாமல், கர்ச்சீப் போலவும் இல்லாமல் ஒரு துணியை ‘டை’போல, கர்ச்சீப் போல கழுத்தைச் சுற்றிப் போட்டிருப்பார். பின்னாளில் ‘என் கலையுலக சிஷ்யன்’ என்று எம்ஜிஆரால் சொல்லப்பட்ட கே.பாக்யராஜ், ‘தூறல் நின்னுபோச்சு’ படத்தில் கழுத்தில் மப்ளர் போட்டிருப்பார். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில், எம்ஜிஆர் அணிந்தது போலவே ‘டை’ போல, கர்ச்சீப் போல ஒரு துணியை அணிந்திருப்பார்.
அதேபோல ஜெயலலிதாவும் அழகுப்பதுமையாகவே வலம் வருவார். எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் செளகார் ஜானகி, இந்தப் படத்திலும் மிக அருமையாக நடித்திருந்தார். அசோகன், சோ, மனோகர், வி.எஸ்.ராகவன் முதலானோர் நடித்திருந்தார்கள்.
படத்துக்கு வசனத்தை சொர்ணம் எழுதியிருந்தார். பல இடங்களில் எம்ஜிஆர் பேசுகிற வசனங்கள் கரவொலி எழுப்பும் வகையில் அமைந்திருந்தன. எல்லாப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார். எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.
எந்தப் படத்திலும் செய்யாத ஒன்றை இந்தப் படத்தில் செய்திருந்தார் எம்ஜிஆர். படத்தில் குடித்துவிட்டு, ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?’ என்ற பாடலுக்கு நடித்திருப்பார். அந்தக் காலத்தில், ‘வாத்தியாரு இதுல குடிச்சிட்டு பாடுற மாதிரி வைச்சிருக்காங்கப்பா’ என்று கிசுகிசுப்புடன் பேசிக்கொண்டார்கள். அதேபோல், பிரம்மாண்டமான செட் போடப்பட்டு, ‘ருக்குமணியே பறபறபற’ என்ற பாடல், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டது.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். போலீஸ் துரத்திக்கொண்டு வரும்போது, இருவரும் குறவர் கூட்டத்துக்குள் புகுந்து, அவர்களைப் போல் உடை உடுத்திக்கொண்டு, ஆடுவார்கள்; பாடுவார்கள்.
இப்படிச் சொல்லும்போதே, அந்தப் பாடல் என்ன என்பதை எல்லோரும் கண்டுபிடித்திருப்போம்தானே! ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க புதுப்பாட்டுப் படிக்கும் வானம்பாடிதானுங்க’ என்ற பாடல், பட்டிதொட்டிசிட்டியெங்கும் போய்ச்சேர்ந்தது.
68-ம் ஆண்டில் வெளியான இந்தப் பாடல், 77ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சி அமைப்பதற்கான ஓட்டுவங்கியாகவும் மாறியது என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு இந்தப் பாடல் இன்றுவரைக்கும் செம குத்தாட்டப்பாடலாகவும் கட்சிப் பிரச்சாரப் பாடலாகவும் அமைந்திருக்கிறது.
படத்தின் டைட்டிலில், முதலில் எம்ஜிஆர் பெயர், அடுத்து செளகார் ஜானகியின் பெயர், இதையடுத்து ஜெயலலிதாவின் பெயர் போடுவதாக இருந்தது. இதைத் தெரிந்துகொண்ட ஜெயலலிதா, எம்ஜிஆரிடம் இதுபற்றிச் சொன்னார். எம்ஜிஆர் ஜெமினி வாசனிடம் பேசினார். ஆனால் வாசன், சீனியர் நடிகை என்பதாலும் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதாலும் செளகார் ஜானகி பெயரைப் போட்டபிறகுதான் ஜெயலலிதாவின் பெயர் போடப்படும் என உறுதியாகச் சொன்னார். பிறகு எம்ஜிஆர் என்ன சொன்னாரோ... என்ன நடந்ததோ... செளகார் ஜானகிக்கு இதை முன்கூட்டியே ஜெமினி தரப்பில் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுவிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார் ஜானகி எனும் வரிசையில் டைட்டில் போட்டார்கள். இதை செளகார் ஜானகி பேட்டியொன்றில் மனம் திறந்து குறிப்பிட்டுள்ளார்.
ஒளிவிளக்கு’ படத்தின் இன்னுமொரு பாடல், சரித்திரம் படைத்தது. 68-ம் ஆண்டு படம் வெளியாகும்போது, பாடல் ரசிக்கப்பட்டது. 77-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார். 84-ம் ஆண்டு உடல்நலம் குன்றியது. சிகிச்சைக்காக அமெரிக்கா வரை சென்றார். அந்தசமயத்தில், இந்தப் பாடல் மீண்டும் மிகப்பிரபலமானது. ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ என்று தொடங்கி, ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்’ என்கிற வரிகளுடன் வருகிற பாடல், தமிழகத்தில் எங்குபார்த்தாலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
‘படத்தில் எம்ஜிஆருக்கு தீவிபத்து ஏற்பட்டு, காயமாகிவிடும். மரணத்துடன் போராடுகிற அந்தவேளையில், செளகார் ஜானகி இந்தப் பாடலைப் பாடுவதாகக் காட்சி. 84-ம் ஆண்டு, அமெரிக்காவில் இருக்கும் எம்ஜிஆர், நலம் பெற வேண்டும் என இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. தியேட்டர்களில், யார் படங்கள் ஓடினாலும், படம் தொடங்குவதற்கு முன்னதாக, இந்தப் பாடலும் காட்சியும் ஒளிபரப்புவார்கள். ரசிகர்கள், திரைக்கு முன்னே சென்று, தரையில் மெழுகுவத்தி ஏற்றியும் சூடம் ஏற்றியும் தங்களின் பிரார்த்தனையை வெளிப்படுத்தினார்கள்.
1936-ம் ஆண்டு நடிக்க வந்த எம்ஜிஆர், 68-ம் ஆண்டில்தான் 100-வது படத்தைச் செய்தார். 52-ம் ஆண்டில் நடிக்க வந்த சிவாஜி, 64-ம் ஆண்டிலேயே ‘நவராத்திரி’ எனும் 100-வது படத்தைத் தந்திருந்தார்.
எம்ஜிஆரின் 100-வது படமாக அமைந்த ‘ஒளிவிளக்கு’ மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்று சிலர் சொல்லுவார்கள். வெள்ளிவிழாப் படமாக அமையாவிட்டாலும் நல்ல வசூலைப் பெற்ற படம் என்று சிலர் சொல்லுவார்கள். 1968-ம் ஆண்டு, செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி, 54 ஆண்டுகளாகின்றன.
எதுஎப்படியோ... ஜெமினியின் தயாரிப்பில், எம்ஜிஆரின் 100-வது படமாக வந்த ‘ஒளிவிளக்கு’, தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியல் களத்திலும் முக்கியத்துவம் கொண்ட படமாக ஆகிவிட்டது என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது!