திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் குக்கிராமத்தில் முட்கள் நிறைந்த வயக்காட்டில் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டு அம்மா(ராதிகா), தங்கையுடன் வசிக்கிறான் முத்துவீரன் (சிலம்பரசன்). பட்டதாரியான முத்து தனது உறவினர் சேர்மதுரை (பவா செல்லதுரை) மூலம் பரோட்டா கடையில் வேலை பார்க்க மும்பைக்குச் செல்கிறான். ஆனால் அது வெறும் பரோட்டா கடையல்ல சட்டங்களால் தீர்க்க முடியாத தகராறுகளை அடிதடியாலும் வெட்டுக் குத்துக்களாலும் தீர்த்துவைக்கும் அடியாள் கூட்டத்தின் கூடாரம் என்பதைப் படிப்படியாகத் தெரிந்துகொள்கிறான்.
மும்பையில் வசிக்கும் தமிழ்ப் பெண் பாவையைக் (சித்தி இத்னானி) காதலிக்கிறான். முத்து வன்முறையிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால் அவன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டதன் நோக்கம் அடியாளாகப் பயன்படுத்தப்படுவதுதான் என்பதால் கார்ஜி (சாரா), குட்டி பாய் (சித்திக்) என இரண்டு கூட்டங்களுக்கு இடையிலான கேங் வாரில் சிக்கிக்கொள்கிறான். ரத்தம் தெறிக்கும் வன்முறை, யார் வேண்டுமானாலும் இறக்கலாம்; யார் வேண்டுமானாலும் துரோகியாகலாம் எனும் அச்சுறுத்தல் நிறைந்த நிழலுலகத்தில் முத்து என்னவாகிறான் என்பதே மீதிக் கதை.
இயக்குநர் கவுதம் மேனன் இப்படி ஒரு படத்தைக் கொடுப்பார் என்று இந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்புவரை அவரே நினைத்திருக்கமாட்டார். முற்றிலும் கவுதமல்லாத கவுதம் படம் ’வெந்து தணிந்தது காடு’. உயர்தட்டு வாழ்க்கை, ஆங்கிலம் கலந்த வசனங்கள், வாய்ஸ் ஓவர்கள் என அவருடைய படங்களின் வழக்கமான அம்சங்கள் எதுவும் இல்லாமல் தன் திரைப்படப் பாணிக்கு முற்றிலும் மாறுபட்ட கதையைத் தேர்ந்தெடுத்து அதைப் படமாக்கியிருக்கிறார். கதை எழுதியதோடு திரைக்கதை வசனத்திலும் பங்களித்திருக்கும் மூத்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மதிப்பளித்து செயல்பட்டிருக்கிறார் இயக்குநர். அதே நேரம் இப்படத்தை பெருமளவு பார்வையாளரின் ஈடுபாட்டைத் தக்கவைக்கும் படைப்பாகக் கொடுத்திருக்கிறார்.
படம் தொடக்கம் முதல் படிப்படியாக ஒரு சூழலுக்கு இட்டுச் செல்லும் நிதானத்துடன் நகர்கிறது. பெருமளவில் யதார்த்தமாக திரைக்கதையை நகர்த்திச் சென்றிருப்பதைப் பாராட்டலாம். அதே நேரம் படத்தின் நீளமும் காட்சிகள் மெதுவாக நகர்வதும் உறுத்தவே செய்கின்றன. இடைவேளை வரை கைதட்டி ஆர்ப்பரிக்கச் செய்யும் தருணங்கள் எதுவும் இல்லை என்றாலும் திரைக்கதை தொய்வின்றி நகர்வதால் பார்வையாளரின் கவனம் சிதறவில்லை. மேலும் இந்தக் காட்சிகள் இடைவேளைக் காட்சியில் நாயகன் எடுக்கப்போகும் விஸ்வரூபத்துக்கான சரியான பில்டப்புகளாகவே அமைந்திருக்கின்றன.
இரண்டாம் பாதியில் நிழலுலகப் பெரும்புள்ளிகளின் வாழ்க்கைமுறை, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உயிர் பறிக்கப்படலாம் எனும் சூழல் ஆகியவற்றால் சற்று பரபரப்பு கூடுகிறது. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு கதையை எப்படி நகர்த்திச் செல்வது என்பதில் தடுமாற்றம் தென்படுகிறது. குறிப்பாக கவுதம் மேனன் படங்களில் சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் காதல் காட்சிகள் இந்தப் படத்தில் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆதே நேரம் நாயகியை சுயமரியாதை மிக்க பெண்ணாகச் சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது. இறுதித் தருணங்கள் ‘ஏன் இந்த அவசரம்?’ என்று கேட்கவைக்கின்றன. இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் வேண்டுமென்றே ஒட்டப்பட்டதுபோல் தோன்றுகிறது.
ஜெயமோகனின் பல வசனங்கள் கதாபாத்திரங்களின் சூழலையும் உணர்வுகளையும் கடத்திவிடுகின்றன. கார்ஜிக்கும் முத்துவுக்கும் இடையிலான உரையாடல்கள் சுவாரசியமாக இருப்பதோடு நிழலுலகின் இயல்புகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அதே நேரம்‘இந்த மண்ணுதான் புலி’ என்பது போன்ற வசனங்கள் சினிமாவுக்குப் பொருத்தமில்லாத இலக்கிய ஆக்கங்களுக்கான மொழியாகத் துருத்தி நிற்கின்றன.
எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய காட்டில் வேகும் கிராமத்து இளைஞனாகவும் சரி பம்பாய் நிழலுலகில் படிப்படியாக உயரும் கேங்ஸ்டராகவும் சரி சிலம்பரசன் முற்றிலும் முத்துவீரனாகவே மாறியிருக்கிறார். அவருடைய நடிப்புப் பயணத்தில் இந்தப் படம் ஒரு மைல்கல் எனலாம். புதுமுகம் சித்தி இத்னானி கதாபாத்திரத்துக்கான தோற்றப் பொருத்தத்துடன் இருந்தாலும் என்றாலும் தமிழ் வசனத்துக்கான உதட்டசைவு பொருத்தமில்லை. அப்பு குட்டி நன்மயும் தீமையும் கலந்த வலுவான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். குட்டி பாய் கூட்டத்தில் அடிமையாக நடத்தப்படும் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு முழுமையான நியாயம் செய்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நிதானத்துக்கும் அழகையும், பரபரப்புக்கு வலுவையும் சேர்த்திருக்கின்றன. கதைப் போக்கில் நகரும் பாடல்கள் காதுகளுக்கு இனிமை. குறிப்பாக படத்தின் பல்வேறு முக்கியத் தருணங்களில் ரஹ்மான் குரலில் ஒலிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ உடனடியாக மனதுடன் ஒட்டிக்கொள்கிறது.
திரைக்கதையில் சில கோளாறுகள் இருந்தாலு ஒரு தாதா உருவாகும் கதையை கூடுமானவரை யதார்த்தமாகச் சொன்ன வகையில் ‘வெந்து தணிந்தது காடு’ வரவேற்கத்தக்க வருகை.