சந்தானமாகவே வாழ்ந்த ரஜினி!

By வி. ராம்ஜி

’அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்றொரு பாடல் அந்தக் காலத்தில் மிகப்பிரபலம். ரஜினி நடித்த ‘தர்மதுரை’ படத்தில் கூட ‘அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் பந்தம் என்ன’ என்கிற பாடலும் பாடலில் ரஜினியின் நடிப்பும் அசத்தலாக இருக்கும். ஒருவீட்டில், அக்கா இருந்தால் அவள் அம்மாவுக்கு இணையானவளாகவும் அண்ணன் இருந்தால் அவன் அப்பாவுக்கு நிகராகவும் இருப்பார்கள். நெகிழ்வும் பாசமுமாக இருக்கும் தருணத்தில், ‘எனக்கு என் தம்பி தங்கச்சிங்கதான் முக்கியம்’ என்று சொல்லிப் பூரிக்கும் அவர்கள், ‘இந்தக் குடும்பத்துக்காக நான் என் சந்தோஷங்களை ஆசைகளையெல்லாம் தூக்கியெறிஞ்சிருக்கேன் தெரியுமா?’ என்று விரக்தியில் கலங்குவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கலாம். ஆனால் இப்படியானவர்களுக்குப் பொதுவாக ஒரு பெயர் வைத்துக் கூப்பிடலாம். அது... ‘ஆறிலிருந்து அறுபதுவரை சந்தானம்’.

நம் வீட்டில், தெருவில், உறவுகளில், தோழமைக் கூட்டத்தில் ‘சந்தானம்’கள் ஏராளம். அதனால்தான் சோகமே வாழ்க்கையெனக் கொண்டு, வாழ்க்கையே வேஷமென அறிந்து வாழ்ந்த சந்தானத்தின் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து வர முடிவதே இல்லை.

தேங்காய் சீனிவாசனுக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். எல்லாம் நண்டும்சிண்டுமாய் இருக்கிற வயதில், விபத்தில் மரணத்தைத் தழுவுகிறார் தேங்காய் சீனிவாசன். அப்பாவுக்கு அடுத்து தலைச்சன் பிள்ளைதானே குடும்பத்தலைவன். ஆகவே மூன்று மகன்களில் மூத்த மகனாக இருப்பவன், படிப்பை நிறுத்துகிறான். தன் இரண்டு தம்பிகளும் தங்கையுமே உலகம் என வேலைக்குச் செல்கிறான். அப்போது அவனுக்கு ஆறு வயது. அவனுடைய பெயர் சந்தானம்.

கிடைக்கிற வேலைகளையெல்லாம் செய்கிறான். சைக்கிள் உயரம் கூட இல்லாதவன், குரங்குபெடல் போட்டு சைக்கிள் ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்ற முனைகிறான்.

அப்பா தேங்காய் சீனிவாசன் வேலை பார்த்த இடத்தில் அவரின் முதலாளி டி.கே.பகவதி, சந்தானத்துக்கு வேலை போட்டுக்கொடுக்கிறார். உண்மையாய் உழைக்கிறான் சந்தானம். நேர்மையாய் இருக்கிற சந்தானத்தை முதலாளிக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது. சம்பளத்தைக் கடந்தும் அவனுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உதவிகள் செய்கிறார்.

எல்லோரும் வளருகிறார்கள். வளரவளர, தேவைகளும் பெருகத்தானே செய்யும். அப்போது பள்ளி. இப்போது கல்லூரி. கடன் கடன் என்று வாங்கிக்கொண்டே இருக்கிறார் சந்தானம். முதலாளியைப் போலவே நண்பன் அழகப்பனும் அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டே இருக்கிறான். ‘நம் கஷ்டமெல்லாம் இப்போது விடியும், இப்போது விடியும்’ என்று தம்பிகள் மீது நம்பிக்கை வைத்துக் காத்திருந்தபடியே தன் கடமையைச் செவ்வனே செய்கிறான்.

தங்கைக்கும் திருமண வயது. தனக்குள்ளேயும் காதல் எட்டிப் பார்க்கிறது. உடன் வேலை செய்யும் பெண்ணைக் காதலிக்கிறான் சந்தானம். அவளும்தான். ஆனால், ‘தம்பிகளுக்காகவும் தங்கைக்காகவும் கடன் கடன் என்று வாழ்ந்துகொண்டிருப்பவனை கல்யாணம் செய்துகொண்டால் நம் நிலைமையும் மோசமாகிவிடும்; சந்தோஷம் என்பதே இல்லாமல் போய்விடும்’ என்று நினைக்கும் அவளும் விலகிப்போகிறாள்; வேறொருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

‘என் தங்கச்சிக்குக் கல்யாணமாகணும். அதுக்கு வரதட்சணை கொடுக்கணும். அதுக்காக நான் முதல்ல கல்யாணம் பண்ணி, வரதட்சணை வாங்கி அதைவைச்சே என் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணிவைச்சிடுவேன்’ என்று அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கணக்குப் போட்டு கல்யாணம் செய்துகொண்ட அண்ணன்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இங்கே!

சுருளிராஜன் ‘அப்படியொரு பொண்ணு இருக்குப்பா. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீனா, அஞ்சாயிரம் ரூபா தருவாங்க’ என்று சொல்ல, ‘யார், என்ன, எப்படி என்றெல்லாம் பார்க்காமல் படாபட் ஜெயலட்சுமியைத் திருமணம் செய்துகொள்கிறார் சந்தானம். ஆனால் அஞ்சாயிரமெல்லாம் கொடுப்பதாக அந்தக் குடும்பம் சொல்லவே இல்லை எனத் தெரியவரும். மீண்டும் கடன். தங்கைக்குத் திருமணம்.

ஒருபக்கம் படித்த மூத்த தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கிறது. கையும் பையும் நிறைந்திருக்கிற சம்பளம். ஆனால் எந்தக் கடனையும் அடைப்பதற்கு அண்ணனுக்கு உதவாமல், தன் இஷ்டத்துக்கு வாழ்கிறான். படித்து முடித்துவிட்ட தம்பியும் அதுவரை மூத்த அண்ணனே தெய்வம் என்றிருந்தது போய், இரண்டாவது அண்ணனிடம்தான் ‘பசை’ இருக்கிறது என்று ஒட்டிக்கொள்கிறான். ஆக, தன் கஷ்டத்தில் தம்பிகள் பங்கேற்கமாட்டார்கள் என்பது தெரிகிறது சந்தானத்துக்கு!

வறுமைக்கு வாக்கப்பட்ட அவனுக்கு சந்தோஷம், பிக்கலில்லாத மனைவி லட்சுமிதான். அவர்களுக்குக் கிடைத்த செல்வங்கள், பிள்ளைச் செல்வங்கள்தான். கட்டிக்கொடுத்த தங்கையும் ஏழை அண்ணனை வெறுக்கிறாள்; ஒதுக்குகிறாள். ’என்னடா இது சோதனை’ என்று வருந்திக்கொண்டிருக்கும்போதே, முதலாளி பக்கவாதத்தால் படுத்துவிடுகிறார். அடுத்த தலைமுறையான அவரின் மகன் கம்பெனி பொறுப்பேற்கிறான். ‘இதுவரை அப்பாகிட்ட வாங்கின பணத்தை செட்டில் பண்ணு; அப்புறமா வேலைக்கு வா’ என்று சொல்லிவிடுகிறான்.

காரை பெயர்ந்த வீட்டில் இருந்தவர்கள், குடிசைக்கு வருகிறார்கள். வேறு வழியின்றி மனைவி வேலைக்குப் போகிறாள். நண்பன் அழகப்பனின் உதவியால் அவன் வேலை பார்க்கும் அச்சகத்தில் பிழைதிருத்தும் வேலைக்குச் செல்கிறான் சந்தானம். ‘என்னடா கதை இது, நாமளே எழுதலாம் போல இருக்கே...’ என்று அலுத்துக்கொள்ளும் சந்தானம், தன் வாழ்க்கையையே கதையாக எழுதுகிறான். அங்கே, தீவிபத்து. குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு அவன் மனைவி உயிரிழக்கிறாள்.

இந்தச் சமயத்தில்தான் வாழ்வில் இரண்டு திருப்பங்கள். மனைவி கட்டிய இன்சூரன்ஸ் பணம் கைக்கு வருகிறது. தன் வாழ்க்கையையே கதையாக எழுத, எழுத்தாளர் எனும் பேரும்புகழும் கிடைக்கிறது. எழுதிக்குவிக்கிறார். பணம் கிடைக்கிறது. பேரும் புகழும் கிடைக்கிறது. வசதி வாய்ப்புகள் கிடைக்கின்றன. குழந்தைகளை நன்கு வளர்க்கிறார். வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்புகிறார். விருதுகள் குவிகின்றன. தம்பிகளும் தங்கையும் ‘என் அண்ணன் என் அண்ணன்’ என வந்து உறவாடுகிறார்கள். கடைசி காலத்தில் வாழ்ந்து ஜெயித்துவிட்ட, ஜெயித்து வாழ்ந்துவிட்ட நிறைவுடன் காலமாகிறார் சந்தானம். கனத்த இதயத்துடனும் கண்ணீர் நனைந்த கர்ச்சீப்புடனும் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.

‘சந்தானம் சந்தானம்’ என்றுதான் சொல்ல முடிகிறது. ‘ரஜினி’ என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. அப்படியே எந்த ரஜினி ஸ்டைலும் இல்லாமல், மிக இயல்பாக, அலட்டிக்கொள்ளாமல், சந்தானமாகவே வாழ்ந்திருப்பார் ரஜினி. எல்.ஐ.சி. நரசிம்மனும் சக்கரவர்த்தியும் தம்பிகள். இவர்களைப் பார்க்கிற போதெல்லாம் கோபமும் எரிச்சலும் வரும் நமக்கு. தங்கை ஜெயாவின் அலட்டல், நம்மையே ஆத்திரப்படச் செய்யும். லட்சுமியாக, சந்தானத்தின் மனைவியாக நடித்த படாபட் ஜெயலட்சுமி, எந்த ‘படாபட்’ பட்டாசுகளும் இல்லாமல், ‘கணவன் எவ்வழியோ அதுவே நம் வழி’ என்று சகலத்தையும் விட்டுக்கொடுத்து, அவனுக்காக வேலைக்குச் செல்லும் சாதாரண மிடில்கிளாஸ் பெண்களை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார்.

காதலியாக வரும் சங்கீதா கவனம் ஈர்ப்பார். ஆனால் நம் மனம் தொடமாட்டார். நண்பர் அழகப்பனாக சோ. காமெடியனாகவே நாம் பார்த்துப் பழகிவிட்ட அவருக்கு, அப்படியொரு குணச்சித்திரக் கதாபாத்திரம். நெகிழவைத்துவிடுவார். ரஜினி, சந்தானமாகவே அவதாரமெடுத்திருப்பார். இயலாமை, வெறுமை, வறுமை, கையறு நிலை, தன்னை மீறிப்போகிற உறவுகள், தனக்கென எதுவும் செய்துகொள்ளாத கழிவிரக்கம், மனைவிக்கு ஏதும் செய்ய முடியவில்லையே என்கிற வலி என சகலத்தையும் தாங்கிய முகத்துடன் சோர்வான நடையுடன் ஏக்கப்பார்வையுடன் நம்மைக் கதறடித்துவிடுவார்.

வழியில் ஒரு பெண்ணைக் காப்பாற்றி, திருடர்களிடமிருந்து அவளின் தாலியைப் பிடுங்கிக் கொடுப்பார் ரஜினி. ‘புள்ளகுட்டிங்களோட நல்லாருக்கணும்’ என்று அந்தப் பெண்மணி வாழ்த்துவார். அடுத்த காட்சியில், தீக்கிரையாகி இறப்பார் படாபட் ஜெயலட்சுமி. ‘புள்ளகுட்டிங்களோட நல்லாருன்னு வாழ்த்துனாளே... பொண்டாட்டி புள்ளைகளோட நல்லா இருன்னு சொல்லலியே...’ என்று அழுது நம்மையும் அழவைத்துவிடுவார் ரஜினி.

பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ். பஞ்சு அருணாசலம் தயாரிப்பு. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாமே அவர்தான். பாபுவின் ஒளிப்பதிவு. விட்டலின் எடிட்டிங் என இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஆக்‌ஷன் படங்களைக் கொடுத்து அசத்தியவர்... இங்கே ஆக்டிங் படம் கொடுத்து அசரடித்திருப்பார்.

இளையராஜாவின் இசையைச் சொல்ல வேண்டுமா என்ன? ‘ஜாண் பிள்ளையானாலும்’ என்றொரு பாடல். ’வாழ்க்கையே வேஷம்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் தன் குரலால் இன்னும் சோகம் இழைத்திருப்பார். ‘கண்மணியே காதல் என்பது’ பாடலை எஸ்பிபி-யும் ஜானகியும் போட்டிபோட்டுக்கொண்டு பாடி நம்மைக் கவர்ந்திருப்பார்கள்.

’அபூர்வ ராகங்கள்’ தொடங்கி கமலும் ரஜினியும் ஏராளமான படங்களில் சேர்ந்து நடித்தார்கள். இருவரும் சேர்ந்து நடிக்க சம்பளமும் கொடுத்து தேதியும் வாங்கிவிட்டார் பஞ்சு அருணாசலம். கமலும் ரஜினியும் பேசிக்கொண்டு தனித்தனியே நடிப்பது என முடிவு செய்தார்கள். பஞ்சு அருணாசலத்தை அழைத்து விஷயத்தைச் சொன்னார்கள். ‘அதனால என் கால்ஷீட் தேதில ஒரு படம் பண்ணுங்க, ரஜினி கொடுக்கற கால்ஷீட் தேதில ஒரு படம் பண்ணுங்க’ என்றார் கமல். பஞ்சுவும் சம்மதித்தார். ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் எடுத்தார். ஒன்றில் ஜி.என்.ரங்கராஜன் எனும் இயக்குநரை அறிமுகப்படுத்தி, கமல் நடிப்பில் ‘கல்யாணராமன்’ வெளியானது. அதேபோல், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ வெளியானது.

1979 செப்டம்பர் 14-ம் தேதி வெளியானது ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. படம் வெளியாகி 43 ஆண்டுகளாகின்றன. எப்படியெல்லாமோ பார்த்துப் பழகிய ரஜினி எனும் சூப்பர் ஸ்டாரை யாரால்தான் மறக்க முடியும்? அதேசமயம், ஏழை அண்ணனாக, கணவனாக, தம்பிகளால் புறக்கணிக்கப்பட்டவனாக, தங்கையால் அவமானப்படுத்தப்பட்டவனாக, மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து எழுத்தாளராக உயர்ந்து நின்று ஜெயித்த சந்தானத்தை, சந்தானமாகவே வாழ்ந்த ரஜினியை எப்படி மறக்க முடியும்? ஆறிலிருந்து அறுபது வயதுக்காரர்கள் என்றில்லாமல், எந்த வயதினராக இருந்தாலும் அவர்களால் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’யை மறக்கவே முடியாது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE