மாலையில் மனதோடு பேசிய ’ஸ்வர்ணக் குரலழகி’ ஸ்வர்ணலதா!

By வி. ராம்ஜி

ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் செவிகளில் புகுந்து மனதை நிரப்பிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் புதுப்புது குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தக் குரலில் நாம் கட்டுண்டு போய்விடுவோம். இருபது வருடங்களுக்கு முன்பு, நள்ளிரவில் நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பாடலைக் கேட்டேன். அதற்கு முன்பு கேட்டிருந்தாலும் பார்த்திருந்தாலும், அப்போது, அந்த அமைதியில் என்னை என்னவோ செய்தது அந்தக் குரல்.

மறுநாள், வேலை பார்க்க நுழையும் போது, வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நண்பர்களுடன் டீக்கடைக்குச் செல்லும்போது, இரு சக்கர வாகனத்தில் நண்பனை பின்னே உட்காரவைத்துக்கொண்டு செல்லும் போது, உணவருந்தும் போது என அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன். அடுத்தடுத்த நாட்களில், அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் இந்தப் பாடலை முணுமுணுத்தபடியே இருந்தார்கள்."செம பாட்டுங்க இது" என்றார்கள். "என்னா குரல் இது" என்று பாராட்டினார்கள். அந்தப் பாடல்... ‘மாலையில் யாரோ மனதோடு பேச..!’. அந்தக் குழைவுக் குரலுக்கு சொந்தக்காரர்... ஸ்வர்ணலதா!

கடவுளின் தேசமாம் கேரளம்தான் ஸ்வர்ணலதாவின் பூர்விகம். தந்தை ஆர்மோனியம் வாசிப்பதில் கெட்டிக்காரர். பாடுவதிலும் சூரர். இதனால் சிறுவயதிலேயே பாட்டும் தாளமும் சங்கதியும் கீர்த்தனைகளும் வெகு லாகவமாக வந்துவிட்டிருந்தன ஸ்வர்ணலதாவுக்கு. கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் சென்றார்கள். அவர்களுடன் கூடவே இசையும் தொடர்ந்தபடி இருந்தது.

1973-ல் பிறந்த ஸ்வர்ணலதா, தனது 14-வது வயதில் எம்.எஸ்.வி-யைச் சந்தித்தார். “இவ்ளோ சின்னப்பொண்ணா இருக்கியேம்மா. எங்கே ஏதாவது ஒரு பாட்டைப் பாடு” என்றார் மெல்லிசை மன்னர். அவரின் இசையில் உதித்த, ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்கிற ‘உயர்ந்த மனிதன்’ படப்பாடலைப் பாடினார். அவரின் பாடலுக்கு, நிலாவே வந்து மெல்லிசை மன்னரின் ஆர்மோனியப் பெட்டியில் உட்கார்ந்துகொண்டதோ என்னவோ! உடனே வாய்ப்பை வழங்கினார். கலைஞரின் கதை வசனத்தில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ‘நீதிக்குத் தண்டனை’ படத்தில், ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்று அந்தச் சின்னஞ்சிறு குயில் ஸ்வர்ணலதாவைப் பாட வைத்து அறிமுகப்படுத்தினார்.

இளையராஜாவுக்கு எப்போதுமே தனித்துவமான குரலில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பி.சுசீலா இருக்கும்போது, ஜானகிக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தார். ஜென்ஸிக்கு நிறைய வாய்ப்புகள் தந்தார். பி.எஸ்.சசிரேகாவுக்கு பாடல்களைக் கொடுத்தார். எஸ்பி.ஷைலஜாவை அறிமுகப்படுத்தினார். இப்படிப்பட்ட இளையராஜாவுக்கு, ஸ்வர்ணலதாவின் குரலில் இருந்த சர்க்கரையும் தேனும் பாகும் ரொம்பவே ஈர்த்தது. தொடர்ந்து தன் இசையில் பாடல்களை வழங்கிக் கொண்டே இருந்தார்.

’இந்தக் குரலுக்கு இந்தப் பாட்டு கொடுத்தால்தான் சரியாக இருக்கும்’ என்பதையெல்லாம் உடைத்து பரீட்சார்த்த முயற்சியில் இறங்குகிற இளையராஜா, ‘ஆட்டமா தேரோட்டமா’ என்று மிகப்பெரிய குத்தாட்டப் பாடலை, ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் கொடுத்தார். ‘குயில்பாட்டு வந்ததென்ன இளமானே’ என்று நாயகியின் ஏக்கத்தையும் துயரத்தையும் நமக்குள் அவரின் குரல்வழியே கடத்தி, பாரமேற்றினார். ‘சின்னதம்பி’யில் ‘போவாமா ஊர்கோலம்’ என்று நம்மையும் கைப்பிடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றது அந்தக் குரல்!

’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, விஷயம் என்னடி, எனக்குச் சொல்லடி’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தக் குரல் நம்மை ஐந்து நிமிடங்களுக்கு என்னவோ செய்யும். பாட்டும் வரிகளும் இசையும் தாண்டி ஸ்வர்ணலதாவின் ஸ்வர்ணக்குரலில் நாம் காணாமலே போவோம். ’சின்னவர்’ படத்தில், பிரபுவும் கஸ்தூரியும் ஆடுகிற ‘அந்தியிலே வானம்’ பாடலை மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடியிருப்பார்கள். ஒவ்வொரு வரிக்கும் நம்மைத் தலையாட்டச் செய்துவிடும் அந்த ஜாலக்குரல்!

’ராசாவே உன்னை விடமாட்டேன்’ என்ற பாடலிலுள்ள சங்கதிகள் ரொம்பவே சிரமம். நாம் பாடுவது கடினம். அந்தப் பாடலை கேட்டுக் கிறங்கலாம். ’தளபதி’யின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாட்டுக்கு ஸ்வர்ணலதாவின் குரலும் எஸ்பி.பி-யின் குரலும் குழைந்து குழைந்து, நம்மை குத்தாட்டம் போடவைக்கும். விரல் சொடுக்கவைக்கும். ’சின்னத்தாய்’ என்றொரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் எல்லோரும் புதுசு. ஆனால், பாடல்கள் அத்தனையும் கொம்புத்தேன். ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் நம்மை ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று நிற்கவைத்துவிடும்.

ஸ்வர்ணலதாவின் குரலில் தனி வசீகரம் உண்டு. வார்த்தைகளில் மலையாள வாடையும் இருக்காது. ஆனால், பாட்டுப் பேப்பரில் முழுக்க தேன் தடவிவிட்டுத்தான் பாடுவார் போல! அப்படியொரு தித்திப்பு ததும்பி வழியும். ’மல்லிகை மொட்டு மனசைத் தொட்டு’ என்று பாடினால் மல்லிகைப் பூவின் வாசம் நம் மூக்கை நிமிண்டும். ரஜினி தயாரித்த ‘வள்ளி’ படத்தின் ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் தோன்றும் நேரம்’ ஹெட்போனில் கேட்டுப் பாருங்கள். குரலின் மாயங்களும் ஜாலங்களும் நாட்டியமாடும்.

‘சத்ரியன்’ என்ற படத்தில், அப்படியொரு மெட்டு ஏன் இளையராஜா போட்டார். அதை ஏன் ஸ்வர்ணலதாவுக்குக் கொடுத்தார் என்பதெல்லாம் அதிசயம்தான். ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ என்ற பாடலை மெட்டுக்கு முன்னதாக ஸ்வர்ணலதா பாடுவதற்கு முன்னதாக இயக்குநர் சுபாஷ் எப்படி படமாக்க நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால், அந்தப் பாடலை ஸ்வர்ணலதாவின் குரலுக்குத் தக்கபடி, கவிதையாகவே படைத்திருப்பார்.

இளையராஜா எப்படி ஸ்வர்ணலதாவின் குரலில் கட்டுண்டு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தாரோ, அப்படித்தான் ஏ.ஆர்.ரஹ்மானும்! ‘வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற பாடலில் நாமும் நிலவுக்கு ஏங்கி, கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிடுவோம். ‘கருத்தம்மா’ படத்தின் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலின் உச்சரிப்பில், நம் அடிவயிறு கலங்கிக் கண்ணீர் கசியக் கேட்டுக்கொண்டிருப்போம்.

’காதலன்’ படத்தில் ‘முக்காலா முக்காபுலா’ பாடலையும் பாடி மிரட்டுவார். ‘குறுக்குச் சிறுத்தவளே’ பாடலில் கொஞ்சவும் செய்வார். ‘அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு நீங்க எடை போட்டா’ என்று ஸ்டைல் காட்டிப் பாடுவார். ’அலைபாயுதே’வின் ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாடலைக் கேட்டு, அப்போதைய காதலர்கள் கர்ச்சீப்பால் முகம் பொத்தி அழுதிருக்கிறார்கள். ஸ்வர்ணலதா எனும் மேஜிக் குரல் நம்மை என்னவேண்டுமானாலும் செய்யும்!

ஸ்வர்ணலதா

’பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் ‘திருமண மலர்கள் தருவாயா’ பாடலை நிறையபேர் ரிங்டோனாகவும் காலர் டியூனாகவும் வைத்திருக்கிறார்கள். ஃபிலிம்பேர் விருதை அந்தக் குரல் ராணிக்கு பல முறைக்கு வழங்கியிருக்கிறார்கள். தமிழக அரசும் பல முறை விருது வழங்கிப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடல் டெல்லிவரை சென்று வெள்ளித்தாமரை விருதையும் இந்த தங்கலதா (ஸ்வர்ணலதா)வுக்கு வழங்கிக் கெளரவித்தது.

திரை இசையில் ஸ்வர்ணலதாவின் குரல் தேவதைக்கு இணையானதுதான். தேவதைகள் தோன்றுவார்கள். ஆனால், எப்போது நம்மிடம் இருந்து மாயமாகிப் போவார்கள் என்பது நாம் அறியாதது. சிறுவயதிலேயே பாடத் தொடங்கிய ஸ்வர்ணலதா அவசரம் அவசரமாக பல மொழிகளில் பாடினார். பரவசப்படுத்தினார். பல விருதுகளை வென்றார். இன்னும் இன்னும் கொண்டாடவைத்தார். பறந்து பறந்து பல மொழிகளில் பாடிக்கொண்டிருந்த அந்த தங்கக்குயில், தன் 37-வது வயதில் உலகை விட்டுப் பறந்துபோனது.

2010 செப்டம்பர் 12-ல் மறைந்தார் ஸ்வர்ணலதா. ஆனால், காலை மாலை இரவு என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் எல்லாப் பொழுதுகளிலும் நம் மனதோடு பாடிக்கொண்டே இருக்கிறது அந்த ஸ்வர்ணக்குயில்!

- ஸ்வர்ணலதாவின் நினைவுநாளில், அவரைப் போற்றுவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE