‘நினைத்தேன் வந்தாய் நூறுவயது’ பாட்டுக்கு 55 வயது!

By வி. ராம்ஜி

தன் பலத்தை இன்னும் பெருக்கிக்கொண்டு சாதனை படைத்தவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், திடீரென்று தனக்கு ஏற்பட்ட குரல் பலவீனத்தைக்கூட, தன் பலமாக ஆக்கிக்கொண்டு ஜெயித்தவர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அப்படியொருவர்... எம்ஜிஆர். தமிழ்த் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் தனிக்கவனம் பெற்ற எம்ஜிஆரின் திரைவாழ்வில், எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன; வென்றிருக்கின்றன. அவற்றில், ‘காவல்காரன்’ படத்துக்குத் தனித்துவமும் முக்கியத்துவமும் உண்டு. துப்பாக்கியால் சுடப்பட்டு, குரல் மாறிவிட்ட பிறகு எம்ஜிஆர் டப்பிங் பேசி வந்த முதல் படம் ‘காவல்காரன்’தான்!

1967-ம் ஆண்டு எம்ஜிஆர் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டு. அந்த ஆண்டில்தான் எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டார். அதே வருடம் திரையுலகிலும் மறக்க முடியாத ஆண்டாகிப் போனது. ‘இனி எம்ஜிஆரால் நடிக்க முடியுமா? நடித்தால் பேச முடியுமா? பேசினால் பழைய குரல் இருக்குமா? பழைய குரல் இல்லாவிட்டால் அவரின் படங்கள் ஓடுமா?’ என்றெல்லாம் திரையுலகிலும் ரசிகர்கள் வட்டாரத்திலும் பேச்சுகள் கிளம்பி, இன்னும் பரபரப்பை ஏற்றின.

ஆனால் சுடப்பட்ட எம்ஜிஆர் ஓய்வுக்குப் பிறகு, படத்தின் முக்கால்வாசி காட்சிகளை நடித்துக் கொடுத்தார். குரல் மாறியிருந்தபோதும் அவரே டப்பிங் பேசினார். இன்றைக்கு வரைக்கும், எம்ஜிஆர் குரலில் மிமிக்ரி செய்பவர்கள், சுடப்பட்டதற்கு பின்னே இருந்த குரலைத்தான் மிமிக்ரி செய்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பலவீனத்தையே தன் பலமாக்கிக்கொண்ட எம்ஜிஆரின் ‘காவல்காரன்’ சக்கைப்போடு போட்டது.

சத்யா மூவீஸ் பேனரில் ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்க, இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியானது ‘காவல்காரன்’. ஜெயலலிதா, நம்பியார், வி.கே.ராமசாமி, அசோகன், மனோகர், நாகேஷ், பண்டரிபாய், சிவகுமார் முதலானோர் நடித்திருந்தார்கள்.

காவல் துறையில் பணியாற்றுவார் எம்ஜிஆர். இது அவரின் அம்மாவுக்குக்கூட தெரியாது. நம்பியார் வீட்டில் கார் டிரைவராக எம்ஜிஆர் பணியாற்றுவார். நம்பியாரின் மகள் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் காதல். பிறகு எதிர்ப்பு. அந்த எதிர்ப்பை மீறி திருமணம்.

முன்னதாகக் கொலை ஒன்று நடந்திருக்கும். அந்தக் கொலையைச் செய்தவர் யார் என்பதைத் துப்பறிவதற்குத்தான் எம்ஜிஆர் வந்திருப்பார். எம்ஜிஆரின் தம்பியாக சிவகுமார். ஒருகட்டத்தில், சிவகுமார் வி.கே.ராமசாமியின் வலையில் சிக்கி நம்பியாரிடம் அடைக்கலமாவார். ஆனால் அதன் பின்னர் அவர் இறந்துவிடுவார். எம்ஜிஆர்தான் காரணம் என்று சொல்லப்படும். ஏற்கெனவே நடந்த கொலை, சிவகுமாரின் மரணம், நம்பியார், அசோகன், மனோகர் அனைவரும் சேர்ந்து செய்யும் தகிடுதத்த வேலைகள் என அனைத்தையும் கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைப்பார் எம்ஜிஆர். அவர் ஒரு சிறந்த ‘காவல்காரன்’ என்று படம் முடியும். ‘இவரே நம் காவல்காரன்’ என்று மக்கள் இன்னும் இன்னுமாக அவரை வரித்துக்கொண்டார்கள்.

நல்ல கதை, தெளிவான திரைக்கதை, பிரமாதமான வசனங்கள், தேன் கலந்த பாடல்கள் என ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவையான சகலமும் இருந்தது ‘காவல்காரன்’ படத்தில். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து, ‘எம்ஜிஆர் குரலே மாறிப்போயிருச்சுப்பா’ என்று ‘உச்’ கொட்டிக்கொண்டே ஒவ்வொருவரும் பலமுறை பார்த்தார்கள். பெண்கள் கூட்டம்கூட்டமாக வந்தார்கள். சென்னையில் ஒரு தியேட்டரில், ‘தவிர்க்க இயலாத காரணங்களால், ‘காவல்காரன்’ படம் பெண்களுக்குத் தனிக்காட்சியாக ஒளிபரப்பப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டு, தனிக்காட்சியும் திரையிடப்பட்டது. அந்த அளவுக்குப் பெண்களின் மனம் கவர்ந்த படமாக அது அமைந்தது.

‘எம்ஜிஆர் அவ்ளோதான். இனிமே அவரால பேசவும் முடியாது, நடிக்கவும் முடியாது’ என்று சொன்ன திரையுலகினர் பலரும் படம் பார்த்துவிட்டு, மூச்சடைத்து நின்றார்கள். எம்ஜிஆர் சாதாரண வசனம் பேசினாலே, அழுதுகொண்டே கரவொலி எழுப்பி, தங்களின் ஆதரவை எம்ஜிஆருக்குக் கொடுத்தார்கள். ‘தலைவா, நீ எப்படி வேணும்னாலும் பேசு. நடி. நாங்க ஏத்துக்குவோம். உன்னைப் பாக்காமல் எங்களால இருக்க முடியாது’ என்று அன்றைக்கு பத்திரிகைப் பேட்டிகளில், ரசிகர்கள் சொன்னதெல்லாம் எம்ஜிஆருக்கான சாதனைச் சான்றுகளில் ஒன்று!

தமிழகம் முழுவதும் ‘காவல்காரன்’ வசூல் வேட்டைக்காரனானான். இலங்கையிலும் நூறு நாட்களைக் கடந்து 150 நாட்களைக் கடந்தும் படம் ஓடியது.

படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். ‘மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே’ என்ற பாடலில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கொஞ்சி விளையாடியிருப்பார்கள்.

’அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன்’ என்ற பாடலில் டிஎம்எஸ் குரலும் எம்ஜிஆர் நடிப்பும் இணைந்து கலக்கியிருக்கும். ‘காதுகொடுத்துக் கேட்டேன் ஆஹா குவாகுவா சத்தம்’ என்ற பாடலும் வரிகளும் எம்ஜிஆரின் ஜாலியான நடிப்பும் ஜெயலலிதாவின் வெட்கமும் படத்துக்குக் கூடுதல் சுவையைக் கொடுத்தன.

முக்கியமான பாட்டு... இன்றைக்கும் எல்லா தரப்பினருக்கும் பிடித்த பாட்டு... இரவில் எல்லோரும் கேட்டு மயங்கும் பாட்டு... ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடல் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான்!

இந்தப் பாடலுக்கான செட் பிரமிப்பூட்டியது. அதேபோல், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் காஸ்ட்யூம்கள் கறுப்பு-வெள்ளையிலும் ஜாலம் காட்டி, ஈர்த்தன. சத்யா மூவிஸின் படைப்புகளாக வந்த ‘காக்கிசட்டை’, ‘காதல் பரிசு’ முதலான படங்களிலும் இதே போலான செட்டுகள் போடப்பட்டிக்கும்.

90-களின் இறுதி வரையிலும் மேடைக்கச்சேரிகள் நடக்கும்போது, துண்டுச்சீட்டில், குறைந்தது பத்து பேராவது ‘நினைத்தேன் வந்தாய்’ பாடலைச் சொல்லி கோரிக்கை விடுப்பார்கள். இந்தப் பாடல், ஐந்து நிமிடம் 22 விநாடிகள். விவிதபாரதியில் ‘விரும்பிக் கேட்ட நேயர்கள்’ பட்டியலே ஒருநிமிடத்துக்கும் மேலாகச் சொல்லுவார்கள்.

இயக்குநர் ப.நீலகண்டனின் திறமையான இயக்கத்தில் 1967 செப்டம்பர் 7-ம் தேதி இப்படம் வெளியானது. படம் வெளியாகி, 55 ஆண்டுகளாகின்றன. எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டே இருக்கும் ‘நினைத்தேன் வந்தாய்’ பாட்டுக்கும் நூறாயுசுதான். நூறு வருடங்கள் கடந்தாலும் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என்று எவர் செல்போனிலாவது, எந்தப் பேருந்திலாவது, ஏதேனும் ஒரு டீக்கடையிலாவது இந்தப் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE