‘குக் வித் கோமாளி’ புகழுக்கு இன்று டும்டும்டும்! - மணப்பெண் யார் தெரியுமா?

By காமதேனு

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழுக்கு இன்று எளிமையான முறையில் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழ் மற்றும் பென்ஸியாவுக்கு திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் இன்று காலையில் திருமணம் நடைபெற்றது. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அன்புடன் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல ஷோக்களிலும் நடித்து இவர் பிரபலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த வரவேற்பின் மூலமாக இவர் இப்போது சினிமாவிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்

சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே அஜித், சூர்யா, அருண் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் புகழ் நடித்துவிட்டார். இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த சூழலில்தான் பென்ஸியா என்ற பெண்ணை காதலிப்பதாக ‘குக் வித் கோமாளி’ புகழ் அறிவித்தார். இதையடுத்து புகழுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் புகழ் - பென்ஸியா திருமணம் இன்று நடந்துள்ளது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE