நடிப்பிலும் உச்சரிப்பிலும் வேறு எந்த நடிகரின் சாயலும் இல்லாத நடிகர்களைக் தனித்தன்மை கொண்டவர்கள் எனப் பாராட்டுகிறோம்; கொண்டாடுகிறோம். இந்தத் தனித்தன்மையுடன் நடித்து கரவொலிகளை அள்ளிக்குவித்த நடிகர்கள் ஏராளம். அவர்களில் முக்கியமானவர்... நடிகர் கரண்.
கரணின் நிஜப்பெயர் ரகு கேசவன். குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார் ரகு. மாஸ்டர் ரகு என்றே அழைக்கப்பட்டார். மலையாளப் படங்கள் பலவற்றிலும் சிறுவயதிலேயே நடித்து, எல்லோரையும் ‘அட...’ என்று ஆச்சரியப்படும்படியான நடிப்பில் ஆழ்த்தினார். 1974, 1975 எனத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளைப் பெற்றார்.
காலங்கள் ஓடின; வயதும் கூடியது. வாலிபப் பருவத்துக்கு வந்தார். தமிழில் வாலிபனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. சின்னச்சின்ன படங்கள் கிடைத்தன. ‘அண்ணாமலை’யில் கூட நடித்தார். அதன் பின்னர் தான் அப்படியொரு சான்ஸ் கிடைத்தது அவருக்கு.
அதுவும் எப்படி? ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல’ என்பார்களே... அப்படியான வாய்ப்பாக அமைந்தது. அந்தப் படத்தில், கமல்ஹாசனுடன் நடித்தார்.
கமல்ஹாசனுடன் மல்லுக்கு நிற்கும் எதிர்மறைக் கதாபாத்திரம் அது. கமலுக்கு படத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவமோ அதேபோல், அவருக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இணையான கதாபாத்திரம். மாஸ்டர் ரகு, இப்போது ‘கரண்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தார். ஒரு பேராசியருக்கும் மாணவருக்கும் நடக்கும் சண்டையை, ஈகோவை மிக அழகாக வெளிப்படுத்தி, மாணவர்களை திருந்தச் செய்த அந்தப் படம்... ‘நம்மவர்’.
‘நம்மவர்’ பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தவர்கள், வழக்கம் போல கமலின் நடிப்பைக் கொண்டாடினார்கள். பிருந்தா மாஸ்டரின் அபாரமான நடிப்பையும் நாகேஷின் நெஞ்சம் கனக்கச் செய்யும் காட்சிகளையும் பற்றி பேசியதுடன் முக்கியமாக கரண் குறித்தும் பேசினார்கள். எல்லோராலும் கவனிக்கப்பட்டார். கவனித்துப் பார்த்த அனைவருமே பாராட்டினார்கள். நடிப்பையும் கண்களில் கக்கிய கனலையும் கண்டு மிரண்டு போய் கைத்தட்டினார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார் கரண்.1990-ளில், நட்பைச் சொல்லியும், காதலைச் சொல்லியும், நட்பையும் காதலையும் இணைத்துச் சொல்லியுமாகப் படங்கள் வந்தன. அந்த மாதிரியான நண்பன் வேடத்துக்கு கரண் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர்கள் பலரும் தீர்மானித்தார்கள். நல்ல நண்பனாக இருந்தாலும் கலங்கச் செய்வார்; கெட்ட நண்பனாக இருந்தாலும் கலக்கியெடுப்பார் என ஒவ்வொரு படத்திலும் கரணுக்குக்குக் கிடைத்த கரவொலி கூடிக்கொண்டே போனது.
இயக்குநர் அகத்தியன் இவரின் நடிப்புப் பசிக்குத் தக்க தீனி போட்டார். ‘காதல் கோட்டை’ படத்தில், அஜித்தின் மிக இயல்பான, நாகரிகமான நண்பனாக கரண் நடித்தது பலரையும் கவர்ந்தது. ‘காதல் கோட்டை’யில் அஜித், தேவயானி, ஹீராவுக்கு அடுத்து கரண் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
மீண்டும் அகத்தியன் வழங்கிய மற்றொரு வாய்ப்பு... ‘கோகுலத்தில் சீதை’யில் அப்பாவித்தனமும் யதார்த்த மனத்துடன் ஆசைப்படுகிற குணமும் கொண்ட, பயந்த சுபாவத்துடன் கூடிய மிடில்கிளாஸ் இளைஞனை நம் கண்முன்னே அப்படியே கொண்டுவந்தார் கரண். சுவலட்சுமிக்கும் கரணுக்குமான வசனங்கள், கார்த்திக் - கரண் வசனங்கள், பெற்றோரிடம் சுவலட்சுமியை வைத்துக்கொண்டு பேசுகிற வசனங்கள் என... முகபாவனைகளிலும் வசன உச்சரிப்பிலும் குரல் தழுதழுப்பிலும் என நடிப்பில் தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினார்.
படத்தில் கரண் நடிக்கிறார் என கூட்டம் கூடியதோ இல்லையோ.... கரண் நடித்தால் சிறப்பாகத்தான் நடித்திருப்பார் என மக்கள் கரண் மீது நம்பிக்கை வைத்தார்கள். தொடர்ந்து ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ முதலான படங்கள் அவரின் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தின.
இயக்குநர் சரணின் முதல் படமான ‘காதல் மன்னன்’ படத்தில், நிஜ கார் பந்தய வீரரான அஜித்தை நாயகனாக்கி, கரணுக்கு கார் பந்தய வீரர் கேரக்டர் கொடுத்திருப்பார். டென்ஷன் ஆசாமியாக கரண் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். விஜய்யுடன் நடித்த ‘லவ் டுடே’ படத்தில் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். இயக்குநர் பாலசேகரன் நல்ல கதாபாத்திரத்தை அவருக்குக் கொடுத்திருந்தார்.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் பாலசேகரன் ‘துள்ளித்திரிந்த காலம்’ என்ற படத்திலும் அற்புத கதாபாத்திரத்தை வழங்கினார். ‘இதை கரணைத் தவிர யாரும் பண்ணமுடியாதுப்பா. கலங்கடிச்சிட்டாரு’ என்று கொண்டாடினார்கள் படம் பார்த்தவர்கள்.
கரணிடம் உள்ள சிறப்புகளில் ஒன்று... கிராமத்துக் கதாபாத்திரமாக இருந்தாலும் நகரத்து வேடமாக இருந்தாலும் அதற்குத் தக்கபடி தன் உடல் மொழியைச் செம்மையாக்குகிற வித்தை அவரிடம் உண்டு. சுந்தர் சி.யின் ‘உன்னைத்தேடி’ படத்திலும் நல்ல கேரக்டர் கிடைத்தது.
முக்கியமாக, இயக்குநர் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வந்த முதல் படமான ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் சிம்ரனின் சகோதரராக, பிரசாந்தின் உயிர் நண்பனாக அட்டகாசம் பண்ணியிருப்பார். ஒரு கதையை உருவாக்கும்போதே, கேரக்டரை வளர்க்கும்போதே, ‘இதுக்கு ரங்காராவ் தான் நல்லாருக்கும்’, ‘இதுக்கு ரகுவரன் தான் நல்லாருக்கும்’ என்று டிஸ்கஷனில் சொல்லி, இன்னும் இன்னுமாக மெருகேற்றுவார்கள். அதேபோல், கதை பண்ணும்போதே ‘இந்தக் கேரக்டர் கரண் பண்ணினாத்தான் நல்லாருக்கும்’ என்று யோசித்து முடிவு செய்து, அவரின் நடிப்பைப் பறைசாற்றும் வகையில் காட்சிகள் சேர்க்கப்பட்டன. இவையெல்லாம்தான் கரண் எனும் நடிகனுக்குக் கிடைத்த வெற்றி!
'திருநெல்வேலி’ படத்தில் பிரபுவுக்கு இணையான கேரக்டர். ‘கண்ணுபடப் போகுதய்யா’ வில் விஜயகாந்துக்கு சமமான கதாபாத்திரம். இப்படியாக நடிப்பில் வளர்ந்துகொண்டே இருந்தவருக்கு ஏகப்பட்ட படங்கள் கிடைத்தன. ’கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ’எங்களுக்கும் காலம் வரும்’, ’கருப்பசாமி குத்தகைதாரர்’ என படங்கள் வெளியாகி, அவரை இன்னும் இன்னுமாக உயர்த்தின. ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் கேரக்டருக்கு வலு சேர்க்கும் விதமாக, மொத்தப் படத்தையும் தோளில் சுமந்திருப்பார்.
’தீ நகர்’, ‘காத்தவராயன்’, ’கனகவேல் காக்க’ என்று நாயகனாக பல படங்களில் நடித்தாலும் அடுத்தடுத்து இறங்குமுகமாகவே அமைந்தன. ஆனாலும் தான் நடித்த எந்தப் படத்திலும் சோடைபோகவில்லை கரண். தன் நடிப்பில் மெருகூட்டிக்கொண்டே இருந்தார்.
இன்றைக்கும் நல்ல கதாபாத்திரங்களை வழங்கினால், அவற்றை தனக்கே உரிய பாணியில் இன்றைய காலகட்டத்துக்குத் தகுந்தது போல், ஸ்டைலாகவும் இயல்பாகவும் தனித்துவமாகவும் நடித்துக் கலக்குவார் கரண்.
நடிகர் கரணுக்கு இன்று (ஆகஸ்ட் 19) பிறந்தநாள். திறமையான நடிகரான கரணை இந்நாளில் வாழ்த்துவோம்!