‘இந்தியன்2’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக வழக்கு!

By KU BUREAU

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன்2’ திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், இந்தப் படம் வெளியாக தடை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘’இந்தியன்’ முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தனது பெயரும் படத்தில் இடம் பெற்றது. ஆனால் தற்போது, ’இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன், முதலாம் பாகத்தில் பயன்படுத்திய வர்மகலை முத்திரையை இரண்டாம் பாகத்திலும் அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளார். ஆகவே, ’இந்தியன் 2’ படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என ராஜேந்திரன் அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

வர்மகலை என்பது தொன்மையான ஒரு கலையாகும், அகஸ்தியர் கண்டுபிடித்தது ஆகும். ’இந்தியன் 2’ படத்தில் வர்மகலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. ‘இந்தியன்’ படத்திற்கும் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தில் வாதாடினார். இதற்கு ஜுலை 11 ஆம் தேதி இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வ மகேஸ்வரி, படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE