ஸ்பெயினில் வலம்வரும் ‘நயன் - சிவன்’ நட்சத்திரத் தம்பதி!

By ஆதிரா

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்கும் மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தது. இவர்களது திருமண காணொலியை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. திருமணச் செலவுகளையும் ஏற்றுள்ளது. இவர்களது திருமண வீடியோ விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோவை நேற்று நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

திருமணம் முடித்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு சென்றது இந்த நட்சத்திர ஜோடி. பின்பு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் ‘ஜவான்’ இந்திப் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார் நயன்தாரா. இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவனும் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை இயக்கும் பணிகளில் பிஸியாக இருந்தார்.

இதனை அடுத்து, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஸ்பெயினுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு பத்து நாட்கள் செலவிடத் திட்டமிட்டுள்ளனர். அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பியவுடன் இங்கு நடைபெற இருக்கும் ‘ஜவான்’ படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்ள இருக்கிறார். விக்னேஷ் சிவனும் அடுத்து அஜித்தை வைத்து இயக்க இருக்கும் ‘AK62’ பட வேலைகளைத் தொடங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE