திரை விமர்சனம்: எலக்‌சன்

By KU BUREAU

வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அர்ப்பணிப்பு மிக்க தொண்டர், நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). கட்சி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்கிறது அவரது செல்வாக்கு. நல்லசிவத்தின் மகன் ராசு என்னும் நடராசனை (விஜய்குமார்), ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட வற்புறுத்துகிறார், அவர் சகோதரி கணவர் கனி (பாவல் நவகீதன்).

முதலில் தயங்கும் ராசு, பின்னர் தந்தையின்தகுதியையும் செல்வாக்கையும் நிரூபிக்க,போட்டியிடுகிறார். அரசியல் சதுரங்கத்துக்குள் இழுக்கப்படும் ராசு வென்றாரா? அரசியல், அவர் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது? என்பதைப் பாடமாகச் சொல்கிறது படம்.

‘சேத்துமான்’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழின் 2-வது படம் இது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து இவ்வளவு விரிவாக எந்தப்படமும் பேசியதில்லை. தேர்தல்களில் சாதியின் பங்கு, அரசியல் கட்சிக்காரர்களின் பதவி ஏக்கம்,செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தினர், பதவியை கவுரவமாகக் கருதுவது, அரசியல்வாதிகளின் தனிப்பட்ட மோதல்களால் நிகழும் உள்ளடி வேலைகள், இதனால் உறவு, நண்பர்களுக்கிடையே ஏற்படும்விரிசல் என உள்ளாட்சித் தேர்தல்களில் தாக்கம் செலுத்தும் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய 360 டிகிரி கோணத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநரை பாராட்டலாம்.

எழுத்தாளர் அழகிய பெரியவன், நாயகனும் படைப்பாக்கத் தயாரிப்பாளருமான விஜய்குமார், இயக்குநர் தமிழ் மூவரும் எழுதியுள்ள கூர்மையான வசனங்கள் இதற்குப் பலம் சேர்க்கின்றன.

படத்தின் நீளம் 2 மணி நேரம்தான் என்பது இன்னொரு சாதகமான அம்சம். முதல்பாதித் திரைக்கதை அடுத்தடுத்த திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட், ஆச்சரியம் தந்தாலும் வழக்கமானதுதான்.

சுகுமார் (திலீபன்) கதாபாத்திர வடிவமைப்பு சுவாரஸியமாக உள்ளது. இவரைச் சுற்றி அமைக்கப்பட்ட காட்சிகள் இரண்டாம் பாதியை கவனிக்க வைக்கின்றன. ஆனால் பரபரப்பான அரசியல் படம் ஒரு கட்டத்துக்கு மேல் பழிவாங்கும் கதையாக மாறிவிடுகிறது. பிறகு என்ன நடக்கும் என்று ஊகித்துவிட முடிவதால் கடைசி 20 நிமிடங்கள் அலுப்பூட்டுகின்றன. ஆனாலும் இறுதிக்காட்சி, அரசியல் குறித்த புரிதலை ஏற்படுத்தும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி நடித்துள்ளார் விஜய்குமார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் பக்கத்துவீட்டுப் பையனை கண்முன் நிறுத்துகிறார். ‘அயோத்தி’யில் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ராணிக்கு இதிலும் வலுவான கதாபாத்திரம். உணர்ந்து நடித்துள்ளார். பாவல் நவகீதன் சிறந்த குணசித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார். சில இடங்களில் கலங்க வைக்கிறார்.

ஜார்ஜ் மரியான், நாயகனின் அம்மா நாச்சியாள்சுகந்தி, பட்டியலின மக்கள் தலைவர் டேவிட் ஆக நடித்திருப்பவர், திருநங்கையாக வருபவர் எனத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் வேகத்தடை. பின்னணி இசை, காட்சியின் தாக்கத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையானதைத் தந்துள்ளது.

திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை முன்வைத்து சரியான அரசியல் பாடத்தை சுவாரஸியமாகச் சொல்லிக்கொடுத்திருக்கும் இந்த ‘எலக்‌சன்’ஐ வரவேற்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE