திரை விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

By KU BUREAU

சொந்த வீடு இருந்தால்தான் திருமணம் நடக்கும் என்பதால், கடன் வாங்கி, வீடு வாங்குகிறார் வெற்றிவேல் (சந்தானம்). வரதட்சணை வாங்கி அந்தக் கடனை அடைக்கலாம் என நினைக்கும் அவர் அதற்காக பெண் தேடி அலைகிறார். எதிர்பாராதவிதமாக ஜமீன் (தம்பி ராமைய்யா) வீட்டுப் பெண் தேன்மொழியை (பிரியாலயா) மணக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.

ஆனால், திருமணத்துக்குப் பிறகு நடக்கும் ட்விஸ்ட்டுகளால் சந்தானத்தின் கனவில் விழுகிறது, மண் . அதே நேரத்தில் சென்னையில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் தீவிரவாத கும்பலைச் சேர்ந்தஒருவர், சந்தானம் வீட்டில் மாட்டிக்கொள்கிறார். இதை வைத்து சந்தானம் என்ன செய்கிறார், சென்னையில் குண்டு வெடித்ததா, வீட்டுக் கடனை அடைத்தாரா? என்பது கதை.

மும்பையில் குண்டு வெடிக்கும் காட்சியுடன்தான் படம் தொடங்குகிறது. அடுத்தக் காட்சியிலேயே சந்தானம் பெண் தேடும் படலமும் தொடங்கி விடுகிறது. இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளை முன்பின்னாகக் காட்சிப்படுத்தியும் நகைச்சுவை முலாம் பூசியும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் நாராயண்.

90’ஸ் கிட்ஸ்கள் பெண் கிடைக்காமல் படும் பாடு, பெண் வீட்டார் போடும் கண்டிஷன், கல்யாண தரகர்களின் திருவிளையாடல்கள், அதையொட்டி நிகழும் ஏமாற்றங்கள் போன்ற காட்சிகளை வேகமாகவும் சிரிக்கும்படியும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

சந்தானம் பெண் பார்க்கத் தொடங்குவதில் இருந்து நகைச்சுவைக் காட்சிகளும் தொடங்கி கிச்சுகிச்சு மூட்டுகின்றன. சந்தானத்தின் வழக்கமான டைமிங் நகைச்சுவைக்குத் தம்பி ராமையா, பால சரவணன் அடிக்கும் லூட்டிகளும் விலா எலும்பை நோக வைக்கின்றன. ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இரண்டாம் பாதியில் அவை, அவல நகைச்சுவையாக மாறிவிடுவது சோகம்.

சிரிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் லாஜிக்கை மீறி காட்சிகள் தறிகெட்டு ஓடுகின்றன. இதனால், திருமணத்துக்குப் பின் வரும் சென்டிமென்ட் காட்சிகள் மனதில் ஒட்ட மறுக்கின்றன. முதல் காட்சியிலேயே தீவிரவாத செயலைக் காட்டிவிட்டு பிறகு விபூதி அடிக்காதக் குறையாகக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ‘சிரிப்பு போலீஸ்’ என்பது போல ‘சிரிப்பு தீவிரவாதிகள்’ என்று இந்தப் படத்தில் வரும் தீவிரவாதிகளுக்குப் பட்டம் கொடுக்கலாம்.

நாயகன் சந்தானம் வழக்கமான பாணியில் நடித்து சிரிக்க வைக்கிறார். புதுமுகம் பிரியாலயா, கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஜமீன், தம்பி ராமையாவும் அவர் மகன் பால சரவணனும் படம் முழுவதும் வந்து சிரிக்க வைக்கிறார்கள். இரட்டைக் கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னா, உடலைத் திருடும் பாத்திரத்தில் வரும் முனீஸ்காந்த், வாட்ச்மேனாக வரும் மறைந்த சேஷு, மருத்துவமனை ஊழியர் மாறன், சுவாமிநாதன், கூல் சுரேஷ் என ஏகப்பட்டகாமெடி பட்டாளம் படத்தில்.

இமான் இசையில் பாடல்கள் இனிக்கின்றன. ஓம் நாராயணின் ஒளிப்பதிவும், தியாகராஜனின் படத்தொகுப்பும் பக்கபலம். ‘இங்க நான் தான் கிங்கு’ - சிரிப்புக்கு உத்தரவாதம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE