`விருதுகளைக் குவிக்கும், வசூல் உலகையே திருப்பிப் போட்டு விடும்'- 'இரவின் நிழல்' குறித்து நடிகர் பார்த்திபன் கணிப்பு

By மு.அஹமது அலி

'இரவின் நிழல்' பட வெற்றியைத் தொடர்ந்து இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்த போது, இப்படம் விருதுகளை குவிக்க உள்ளது என்றும், படத்தின் வருமானம் திரைப்பட உலகையே திருப்பிப் போட்டு விடும் என்றும் கூறினார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. வரலக் ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் 96 நிமிடங்கள் ஓடக்கூடியது. மேலும், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன், நடிகை பிரிகிடா ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், "இரவின் நிழல் படத்திற்கு கொடுத்த அமோகமான ஆதரவிற்கு நன்றி. தனஞ்செயன் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு படம் வெற்றியடைய வேண்டும் என்று தெரிவித்தார். எனக்கும் அதில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. முதலில், என்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை மீறி மிகப்பெரிய சக்தி உள்ளது என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. அதை தேடுவதை மிகப்பெரிய வேலையாக வைத்துள்ளேன்.

நான் 11 வருடங்களுக்கு மேலாக சபரிமலைக்கு சென்றுள்ளேன், திருப்பதிக்கு சென்றுள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சியை பார்க்க வருவேன். மீனாட்சியம்மனை பார்த்துவிட்டு கோயிலில் உட்கார்ந்து காதல் கவிதை எழுதுவேன்.

'இரவின் நிழல்' என்னுடைய முயற்சி அனைத்தையும் போட்டு எடுத்த படம். இப்படம் வெற்றியடைந்துள்ளது, மக்கள் பாராட்டுகின்றனர். இது விருதுகளை குவிக்க உள்ளது. மேலும், படத்தின் வருமானம் திரைப்பட உலகையே திருப்பிப் போட்டு விடும். மிக மிக வித்தியாசமான படங்களுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுப்பார்கள் என்ற ஆச்சர்யத்தை கொடுத்த படம் 'இரவின் நிழல்'.

ரஜினி சார் படத்தைப் பார்த்துவிட்டு " யூ மேட் அன் ஹிஸ்டரி (You made an history) "என்று பாராட்டினார். நாளை ரஜினி சாரையும், இன்று கமல் சாரையும் பார்க்க உள்ளேன். சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை எட்டிய கமல், ரஜினி போன்றோரின் வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம். அவர்களின் வாழ்த்துகளை பாசி மணி ஊசி மணி போல கோர்த்து கழுத்தில் போடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி.

தற்போதைக்கு, குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் வகையில் மெதுவா ஜாலியா இருக்கும் படங்களை எடுக்க உள்ளேன். நிறைய கதைகள் உள்ளன" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE