திரை விமர்சனம்: இரவின் நிழல்

By கோபாலகிருஷ்ணன்

குற்றத்திலேயே பிறந்து குற்றங்களால் பின்னப்பட்ட வாழ்வை வாழும் ஒருவன் தான் தெரிந்தும் தெரியாமலும் விரும்பியும் விரும்பாமலும் இழைத்த குற்றங்களுக்காக குற்ற உணர்வு கொள்ளும் தருணத்தில் அவனுக்கு நிகழ்வதென்ன என்பதே ‘இரவின் நிழல்’ படத்தின் கதை.

மிக அதிக வட்டி வசூலிக்கும் திரைப்பட பைனான்சியர் நந்து (ராதாகிருஷ்ணன் பார்த்திபன்). பல குற்றங்களைப் புரிந்துதான் அவன் இந்த நிலைக்கு வருகிறான். அவனிடம் பணம் வாங்கிய ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் காவல்துறை நந்துவைத் தேடுகிறது. நந்துவைப் பழிவாங்கத் துடிக்கும் போலி சாமியார் பிரேமானந்தா (ரோபோ ஷங்கர்) அவனுடைய உயிருக்குக் குறிவைக்கிறான். இந்தச் சூழலில் ஒரு காட்டுக்குள் தப்பி ஒளிந்துகொள்ளும் நந்து, தான் கடந்துவந்த பயணத்தை நினைத்துப் பார்க்கிறான். நந்து குழந்தையாக இருக்கும்போதே அவனுடைய அம்மாவை சந்தேகத்தின் பெயரில் அவனுடைய அப்பாவே கொன்றுவிடுகிறார். வாழ்வாதாரத்துக்காக சின்னச் சின்ன குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்குச் செல்கிறான் நந்து. தன்னுடைய தேவைக்காகவும் சூழ்நிலைக் கைதியாகவும் குற்றங்களைச் செய்வதிலேயே கழிகிறது நந்துவின் வாழ்க்கை.

இடையில் அவன் வாழ்வில் சில பெண்கள் வந்துபோகிறார்கள். அவர்களில் சிலருக்கு அவனால் தீங்கு நேர்கிறது. வேறு சிலர் அவனுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள். ஒருவழியாக பலரை எட்டி மிதித்து துரோகம் செய்து திரைப்பட பைனான்சியராக செல்வாக்கு மிக்க நிலையை அடையும் நந்து, தன் ஒரே மகள் அற்புதாவின் மூலம் குற்ற உணர்ச்சி கொண்டு திருந்தி அவளது அன்பைப் பெற நினைக்கிறான். ஆனால் அவன் செய்த முன்வினைகள் அவனைத் துரத்துகின்றன. இறுதியில் நந்துவுக்கு என்ன ஆனது? அவனைச் சுற்றி அவனும் பிறரும் கட்டமைத்த பாவச் சுழலிலிருந்து விடுபட்டானா அல்லது அதிலேயே அமிழ்ந்து அழிந்துபோனானா என்பதே ‘இரவின் நிழல்’ படத்தின் மீதிக் கதை.

எதையும் வித்தியாசமாகச் செய்தே பழக்கப்பட்டவர் பார்த்திபன். அவருடைய வித்தியாச முயற்சிகளில் சில வியக்க வைக்கும்; சில விடலைத்தனமாக இருக்கும். உலகின் முதல் நான் - லீனியர் சிங்கிள் ஷாட் சினிமா என்னும் அறிவிப்புடன் வெளியாகியிருக்கும் ‘இரவின் நிழல்’ அதற்கான பிரமிப்பைத் திரையிலும் கடத்தி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. கேமராவை ஆன் செய்து கட் செய்யாமல் முழுப் படத்தையும் எடுப்பதே சிங்கிள் ஷாட் சினிமா. அந்த வகையில் இதுவரை உருவாக்கப்பட்ட சிங்கிள் ஷாட் சினிமாக்கள் அனைத்தும் கதை நேர்க்கோட்டில் பயணிப்பது. அதாவது கதையின் காலம் முன்னுக்கும் பின்னுக்கும் நகராது. இதுவே லீனியர் கதை கூறும் முறை. கதை முன்னுக்கும் பின்னுக்கும் நகர்வது நான் - லீனியர் திரைக்கதை. ஆனால், சிங்கிள் ஷாட்டில் நான் - லீனியர் திரைக்கதையை படமாக்கியிருப்பது ஒரு புதிய உலக சாதனை.

படத்தின் தொடக்கத்தில், படம் உருவான விதத்தை விளக்கும் மேக்கிங் வீடியோ போட்டுக் காண்பிக்கப்படுகிறது. இதில் பார்த்திபன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பலரும் திரையில் தோன்றி இப்படி ஒரு படத்தை உருவாக்குவதற்கான சவால்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்தச் சவால்களும் அவை எதிர்கொள்ளப்பட்ட விதமும் காட்சிகளாகவும் திரையில் விரிகின்றன. படத்தின் தொடக்கத்திலேயே மேக்கிங் வீடியோவை வைத்து அதையே படத்தின் மீதான பிரமிப்பை ஏற்படுத்துவதற்கான உத்தியாகப் பயன்படுத்தியிருப்பது பார்த்திபன் மார்க் புத்திசாலித்தனம்.

ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பை தொடங்கி ஒரு சிறிய தவறு நிகழ்ந்தால்கூட நிறுத்திவிட்டு கட் செய்ய முடியாது என்பதால் படத்தை மீண்டும் தொடக்கத்திலிருந்து படம்பிடித்திருக்கிறார்கள். 4 ஆம் நிமிடத்தில் நிகழ்ந்த தவறால் மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது. அதேபோல் 93 ஆம் நிமிடத்தில் நிகழ்ந்த தவறால் மீண்டும் முதலிலிருந்து எடுக்க வேண்டியிருந்தது. இப்படியாக 22 -வது டேக்கில்தான் 94 நிமிடப் படத்தையும் ஒரேயடியாக எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்த பிரமிக்கத்தக்க உழைப்புக்காகவே படத்தைக் கொண்டாட வேண்டும் என்று உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.

மேக்கிங் வீடியோ முடிந்ததும் இடைவேளை விட்டு அதன் பிறகு படம் தொடங்குகிறது. இதன் மூலம் இடைவெளியில்லாமல் எடுக்கப்பட்ட படத்தை ‘இடைவேளை’க்காக இடையில் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவும் படக்குழுவினரின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சான்று.

சிங்கிள் ஷாட் உத்தியை பின்பற்றுவதற்காக நிகழ்கால கதாபாத்திரமே கடந்த காலத்துக்குச் சென்று கதைச் சூழலை விவரிப்பது உள்ளிட்ட புத்திசாலித்தனமான விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. வசனங்களில் பல இடங்களில் தென்படும் பார்த்திபனின் ட்ரேட் மார்க் பஞ்ச்கள் கைதட்டி ரசிக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கின்றன. வட சென்னை குப்பத்து வீடு முதல் காளஹஸ்தி கோயில் வரை கலை இயக்குநர் விஜய் முருகன் போட்டிருக்கும் பல வகையான செட்கள், ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு, கேமராவை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சுமந்து சென்றவர், காட்சிகளுக்கு உயிரூட்டும் ஏ.ஆர்.ரகுமானின் இசை, மிகக் குறுகிய நேரத்தில் உடையையும் கதாபாத்திரத்துக்கான உளநிலையையும் மாற்றிக்கொண்டு நடித்த நடிகர்கள் என அத்தனை பேரின் துணையுடன் அபாரம் நிகழ்த்தியிருக்கிறார் பார்த்திபன்.

ஆனாலும் சில இடங்களில் இடமாற்றத்தையும் காலமாற்றத்தையும் காண்பிப்பதற்கான இடைவெளிக்காக கேமராவை ஒரு இடத்தில் நிலைகுத்திவைப்பது போன்ற ஷாட்கள் இருக்கவே செய்கின்றன. ஒட்டுமொத்த முயற்சியில் இருக்கும் பிரம்மாண்டத்துக்கும் அதற்கான பேருழைப்புக்கும் மத்தியில் இதுபோன்ற சின்னச் சின்னக் குறைகளை மன்னித்துவிடலாம் என்றாலும் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

பெண்கள் தீயவர்களாக, துரோகிகளாக சித்தரிக்கப்படுவது பார்த்திபன் படங்களின் தவிர்க்க முடியாத அங்கமாகி வருவதையும் காண முடிகிறது. இந்தப் படத்தில் இரண்டு பெண்கள் மிகவும் புனிதமானவர்களாகவும், இரண்டு பெண்கள் துரோகிகளாகவும் காண்பிக்கப்படுகிறார்கள். அடுத்த படத்திலாவது இதுபோன்ற அழுத்தங்களிலிருந்து அவர் விடுபட வேண்டும்.

இப்படி ஒரு படத்தை இயக்குவதே கடினம் எனும்போது முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தும் அசத்தியிருக்கிறார் பார்த்திபன். அவரே நடிகராக இருப்பதை இயக்குநரின் சவாலை பகிர்ந்துகொள்வதற்கான சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நடிப்பில் வழக்கம்போல் அனைத்து உணர்ச்சிகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி சபாஷ் போடவைக்கிறார். பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் அல்லது அதிக பிரபலம் இல்லாத நடிகர்கள். அவர்களில் பார்த்திபனின் தெலுங்கு காதலியாக வரும் பிரிகிடா சாகா கவனம் ஈர்க்கிறார்.

ரகுமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு தக்க துணைபுரிந்திருக்கின்றன. குறிப்பாக, பின்னணி இசை கதைச்சூழல் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை கச்சிதமாகக் கடத்தியிருக்கிறது. கலை இயக்குநர் விஜய் முருகனுக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சனுக்கும் தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு பிரமிக்கத்தக்க உழைப்பை இவ்விருவரும் அளித்திருக்கிறார்கள்.

நான் - லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்னும் சாதனையை நிகழ்த்துவதற்கு ஏற்ற வகையிலான கதை என்பதால்தான் இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் பார்த்திபன். எனவே, கதையில் உள்ள குறைகளை மறந்து இந்த சாதனைக்காக அவருக்கும், ‘இரவின் நிழல்’ படக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ராயல் சல்யூட் அடிக்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE