குரலை உயர்த்தினாலே அகங்காரம்பிடித்தவள் என்று சொல்லிவிடுகிறார்கள்!

By ஆதிரா

நடிப்பு ஒரு பக்கம் பிசினஸ் ஒரு பக்கம் என பரபரப்பாக இருக்கிறார் வனிதா விஜயகுமார். ‘அந்தகன்’, ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என இவரது படங்கள் அடுத்தடுத்து வெளியீடுக்கு காத்திருக்கின்றன. இதன் ஊடாக ஜீ தமிழ் சேனலில் ‘மாரி’ சீரியலில் சகுந்தலாவாக ஜமீன்தார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வனிதாவிடம் சீரியல் ஷூட்டுக்கு நடுவே பேசியதிலிருந்து...

’மாரி’ சீரியல் என்ன மாதிரியான கதைக்களம்? நீங்கள் இதன் உள்ளே வந்தது எப்படி?

’மாரி’ தலைப்பை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். ஒன்று, நீங்கள் சொன்னது போல பக்தி மயமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னொன்று, டானாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் அனைவரும் பார்த்து ரசித்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ‘மாரி’. அதனால் இந்த தலைப்பை அதிர்ஷ்டமான ஒன்று என்றே சொல்வேன். அதுவே ஆன்மிகமாகப் போகும் போது, கதையின் கதாநாயகி பெயர் மாரி. எனவே, அதை மையமாக வைத்துத்தான் இந்த கதையை எடுக்கிறார்கள்.

எனக்கும் ஜீ தமிழ் சேனலுக்கும் நீண்ட காலமாகவே ஒரு நட்பு உண்டு. ஜீ தமிழ் ஆரம்பித்த காலத்தில் நான் அதில் வேலை செய்தேன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, நிகழ்ச்சி தயாரிப்பு, எடிட்டிங் என கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பல பணிகளைச் செய்திருக்கிறேன். அதன்பிறகு திருமணம் குடும்பம் என்று ஆனதால் அதிலிருந்து விலக வேண்டிய சூழல் வந்தது.

இருந்தாலும் இடையிடையே சீரியல்களில் கெஸ்ட் ரோல் நடிக்க வேண்டும் என எந்த சேனல் தரப்பு கேட்டாலும் நான் மறுத்தது இல்லை. அதுபோல தான் ஜீ தமிழும் சீரியல்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஒரு நாள் கேட்டார்கள். அதில் எல்லாம் வனிதா விஜயகுமாராகவே நடித்திருக்கிறேன். மாரி சீரியலில் எனக்குக் கொஞ்சம் பெரிய கதாபாத்திரம். வனிதா விஜகுமாராக இல்லாமல் சகுந்தலா எனும் ஜமீன் பெண்ணாக நடித்திருக்கிறேன்.

உங்களுடைய கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்?

முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்தேன். ஏனெனில், எனது படங்கள் அடுத்தடுத்து வெளியீட்ருக்கு தயாராக உள்ளது. அதனால் சற்று கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், சகுந்தலா கதாபாத்திரத்திற்கு பத்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டார்கள். மேலும், தொலைக்காட்சி மக்களிடம் எளிதாகக் கொண்டு போய் சேர்க்கும் ஒரு ஊடகம் என்பதால் அதன் மூமலாக என்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது.

சகுந்தலாவை வில்லி என்று சொல்ல முடியாது. பெண்கள் கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினாலே, அகங்காரம் பிடித்தவள் என்று சொல்லிவிடுகிறார்கள். ஊரில் அவள் பெரிய ஜமீன்தார். தன்னுடைய பெண் தான் அவளுக்கு முக்கியம். அதனால் குரல் உயர்ந்தே இருக்கு. இயல்பாகவே என் கதாபாத்திரமும் அது தான். என் அப்பாவிடம் இருந்து கிடைத்த ஒரே சொத்து அது தான் என்பேன்.

‘அந்தகன்’, ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என நீங்கள் நடித்துள்ள படங்களின் போஸ்டர்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்ததே?

‘அந்தகன்’ படம் ஷூட் எல்லாம் முடிந்துவிட்டது. ’விக்ரம்’ பட வெற்றி சில படங்களின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது. ஆரோக்கியமான விஷயம்தான். அதில் ‘அந்தகன்’ படமும் ஒன்று. இதில், முக்கியமாக பேசப்படக்கூடிய ஒரு கதாபாத்திரம் என்னுடையது. இதைத் தவிர, ‘அனல்காற்று’, ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என இன்னும் இரண்டு படங்கள் இருக்கிறது.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பின்பு செஃப் ஆவீர்கள் என எதிர்ப்பார்த்தால் புதிதாக பொட்டிக் தொடங்கிவிட்டீர்களே..?

நான் சமையல் படிப்பதற்கு முன்பே, ஃபேஷன் டிசைனிங்கில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால், சமையல் முறைப்படி கற்றது ஜெயா என் வயிற்றில் இருந்தபோது தான். ஃபேஷன் டிசைனிங்கில் அம்மாவையும் எனது சகோதரிகளையும் பார்த்துத்தான் எனக்கு ஆர்வம் வந்தது. ஸ்டைலிங், மேக்கப் என முறையாக கற்றிருக்கிறேன். ப்ரீதாவுக்கு முன்பெல்லாம் நான் தான் உடைகள் பார்த்துக்கொள்வேன். இது ரஜினிகாந்தில் இருந்து விஜயகாந்த் வரைக்கும் தெரியும். அந்த ஆர்வத்தில் தான் இப்போது பொட்டிக் ஆரம்பித்தேன்.

‘குக் வித் கோமாளி - சீசன் 3’ இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் சில பேர் என்னிடம் ஐடியா கேட்பார்கள். அவர்களுக்கு என்னுடைய அனுபவத்தில் இருந்து யோசனைகளைச் சொல்வேன். நிச்சயம் தகுதியானவர்கள் வெல்வார்கள்.

வனிதா என்றாலே உங்களுடைய தைரியமும் பலருக்கும் நினைவில் வரும். இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் ஒரு அட்வைஸ்?

நாம் தைரியமாய் இருப்பதிலும், பிறரை கேள்வி கேட்பதிலும் எந்துத் தவறும் கிடையாது. இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். பாலின வேறுபாடு, கலாச்சாரம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கலாச்சாரம் என்ற பெயரில் நிறைய விஷயங்களை தவறாகவே சொல்லிக் கொடுக்கிறோம். ஆணாக இருந்தால் கலாச்சாரம் என்பது தெரியவில்லை. பெண்கள் எனும் போது மட்டும் அது தெரிய வருகிறது. கலாச்சாரம் என்பதெல்லாம் நம் நம்பிக்கை தான். இப்போது தலைமுறைக்கு ஏற்றபடி எல்லாமே மாறிக்கொண்டு வருகிறது.

மருத்துவமும் அறிவியலும் எவ்வளவோ முன்னேறிக் கொண்டிருக்கிறது. நடைமுறையில் நமக்கு என்ன ஒத்து வருகிறது என்பதைத் தான் யோசிக்க வேண்டும். அதனால், எதற்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படக் கூடாதே தவிர, நம் மனசாட்சிக்கு சரி என்று பட்டதை தைரியமாகச் செய்யலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE