நேற்று நடிகர்கள் கமல், தனுஷ், சிம்பு மற்றும் விஷால் ஆகிய நான்கு பேரும் தயாரிப்பார்களுக்கு முழு ஒத்துழைப்பு தராததால் அவர்களுக்கு வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் உடன் நிற்காது என்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இது தவறானது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தயாரிப்பாளர்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு சரியாக ஒத்துழைப்பு தராமல் இழுத்தடிக்கும் நடிகர்களை வழிக்குக் கொண்டு வர சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் பரவியது. அந்த வகையில், நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு மற்றும் விஷால் ஆகியோர் தயாரிப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்காததால் வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காது என்றும் அவர்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தீயாய் பரவியது.
இதைக் கேள்விப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தி கண்டு பேரதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். ’நடிகர்கள் கமல்ஹாசன்,தனுஷ், .சிம்பு, விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது' என்று ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏராளமான ஊடக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில், இந்த தவறான செய்திக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்...
தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கமல், தனுஷ், சிம்பு மற்றும் விஷால் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த புகாரும் நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விதம் அவதூறாக செய்தி பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், இது தொடர்பாக விசாரித்ததில், 'முன்னணி நடிகர்கள் சிலர் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்தோமே தவிர எந்தவித நடவடிக்கை குறித்தும் முடிவெடுக்கவில்லை' என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி செய்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.