`இளைஞர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்'- தனுஷ் பட நடிகைக்கு கொலை மிரட்டல் கடிதம்

By காமதேனு

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார்.

பிரபல இந்தி நடிகை ஸ்வாரா பாஸ்கர். இவர், தனு வெட்ஸ் மனு, தனுஷ் நடித்த ரான்ஜனா, நில் பட்டே சன்னட்டா உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். மும்பையில் உள்ள இவர் வீட்டுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்று வந்திருந்தது. பிரித்துப் படித்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்தியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தை அடையாளம் தெரியாத நபர்கள் எழுதியுள்ளனர்.

அதில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. வீர் சாவர்க்கரை இழிவுப்படுத்துவதை நாட்டில் உள்ள இளைஞர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மும்பை வெர்சோவா போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஸ்வாரா பாஸ்கர் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்து வருபவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியபோது, நீதிமன்றத்தை தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE