வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், சூர்யா பட நாயகி இணைந்துள்ளார்.
சிம்பு நடித்த ’மாநாடு’ பட ஹிட்டுக்குப் பிறகு ’மன்மதலீலை’ என்ற படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. அவர் அடுத்து இயக்கும் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகர், நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். அவருடைய 22-வது படமான இதற்கு இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கின்றனர். இதைப் படக்குழு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
தனது பெரியப்பா (இளையராஜா)வுடன் இணைய வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்தப் படம் வெங்கட் பிரபு இயக்கும் 11-வது படம். இதில் நாக சைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஏற்கெனவே நாக சைதன்யாவுடன் ’பங்கர்ராஜூ’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில் உப்பென்னா என்ற படம் மூலம் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி, இப்போது லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.